காட்சி 19
காட்சி —19
72 பகுதிகளில்
**ஜமீன் மாளிகை விங்கன் அறை** (சடையன், ஜமீன்தார் காலில் விழுந்து பேசிய வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.) சடையன் குரல்:— “எஜமான் என்னை நம்புங்க... நீங்க அடிச்சாலும் உதைத்தாலும் இந்த அரண்மனை சோத்தை தின்னுகிட்டு கிடக்கிற நன்றியுள்ள நாய்ங்க நான்!” (விங்கன் இதழ்கள் “அப்பா” என முணுமுணுக்கின்றன; கண்கலங்கி சட்டையைக் கழற்றி, தோள்பட்டையின் பின்புறத்தில் பட்டுள்ள சவுக்கடி காயத்தைப் பார்க்கிறான் விங்கன்.... ஏதோ ஒரு மருந்தை எடுத்து காயத்தில் தடவப் போகிறான்.... அப்போது சடையனின் கை; காயத்திற்கு பச்சிலைச்சாறு தடவுகிறது! “யார்?” என்று கேட்டவாறு திரும்பிய விங்கன் முன்னே சடையன்.) விங்கன்:— நீங்களா?... சடையன்:— செகரட்டரி தம்பி!.... இந்த வண்டிக்காரப் பயலுக்காக.... நீங்க காயப்பட்டுட்டீங்களே! தம்பி!... இந்தப் பச்சிலையைப் போட்டீங்கன்னு உடனே காயம் குணமாகும்.... (விங்கன் சடையன் கையிலிருக்கும் பச்சிலைச் சாறு கிண்ணத்தைப் பார்த்தல்... பச்சிலைச்சாறு கிண்ணத்தைப் பிடித்திருக்கும் சடையன் கைவிரலில் ரத்தம் கசிகிறது.) விங்கன்:— என்ன, உங்க விரல்ல ரத்தம்.... சடையன்:— அதுவா?... உங்களுக்காகப் பச்சிலை பறிக்கும்போது முள் குத்திட்டது!... அது பரவாயில்லிங்க தம்பி!.. மருந்தைப் போட்டுக்கிங்க!... விங்கன்:— போடுங்க!... ரத்தம் ரத்தத்தோடு கலக்கட்டும்!... உங்க விரல்ல கசிகிற ரத்தத்தையும் என் காயத்தில் தடவுங்க! அதைவிட அருமையான மருந்து கிடையவே கிடையாது! சடையன்:— தம்பி!... என்ன சொல்றீங்க? விங்கன்:— உழைப்பாளிகளின் ரத்தமே மருந்து மாதிரிதானே!... அதைத்தான் சொல்ல வந்தேன். நீங்க போங்க!.. (சடையன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மருந்தைப் போட்டுவிட்டு...) சடையன்:— சரிங்க... வர்றேங்க!... என்னை மன்னிச்சிடுங்க! (குனிந்து குனி வணங்கி கைகூப்புதல்.) விங்கன்:— அப்போ!... இதெல்லாம் வேண்டாங்க! (சடையனின் கையைப் பிடித்துத் தடுத்தல், சடையன், உணர்ச்சி மிகுதியுடன் போகிறான்.... அவன் போனதும் கோகிலா, ஒரு மருந்துக் கிண்ணத்துடன் வருகிறாள். அவள் சடையன் போவதைப் பார்த்துக் கொண்டு வருகிறாள்.) விங்கன்:— வாம்மா கோகிலா!.. (விங்கன் தோள்புறத்தைப் பார்த்து) கோகிலா:— அடடே... எனக்கு முன்னாடி அந்த சடையன் முந்திக் கிட்டு மருந்தைப் போட்டுட்டுப் போயிட்டானே! நான் எவ்வளவு அருமையான மூலிகை கொண்டு வந்திருக்கிறேன்.... இந்த மூலிகை மாத்திரம் உங்க காயத்திலே பட்டா எவ்வளவு இதமா இருக்கும் தெரியுமா?.... விங்கன்:— இதமா இருக்குமா? யாருக்கு? கோகிலா:— உங்களுக்குத்தான் பின்னென்ன எனக்கா? (சிரிக்கிறாள்) விங்கன்:— ஏன் சிரிக்கிறே? கோகிலா:— நீங்க கேலி பண்ணினு சிரிப்பு வராதா?... அதிருக்கட்டும்.. இவ்வளவு கஷ்டப்பட்டு பறிச்சு, அரைச்சு, சாறு பிழிஞ்சு நான் கொண்டு வந்திருக்கிற இந்த மருந்தை என்ன பண்ணறது? விங்கன்:— அப்போ ஒண்ணு செய்! காளிங்கராயனைக் கூப்பிட்டு இன்னொரு அடி சவுக்கால (மறுபுறம் தோளைக்காட்டி) இந்தப் பக்கத்தில கொடுக்கச் சொல்லு! உன் மருந்து வீணைப்போகாம அந்தக் காயத்தில போட்டலாம்!... கோகிலா:— காளிங்கராயன்!..... இனிமே அவன் உங்கினே அடிச்சான்னு, சவுக்கைப் பிடுங்கி நானே அவனைத் திருப்பி அடிப்பேன்! விங்கன்:— அப்போ நானே இந்த மருந்தைக் கொண்டு போயி அவன் காயத்திலே தேய்ச்சி விட்டுடறேன்! கோகிலா:— ஆமா உங்க ஊர் எது? உங்க தாய் தகப்பனார்.....? மிட்டாதாரா? மிராசா? ஜமீன்..நிலபுலம் எவ்வளவு? விங்கன்:— அது என்ன அப்படிக் கேட்டுட்டே...? இந்தப் பூமண்டலம்...சூரிய மண்டலம்...சந்திர மண்டலம் இதான் எங்கள் பூர்வீகச் சொத்து!.. இது போதாதுன்னு செவ்வாய் மண்டலத்தையும் வில பேசி கொண்டிருக்கிறேன்! கோகிலா:— செவ்வாயா?... விங்கன்:— உம்!..பெண்களின்வாய் செவ்வாய்தானே!.. கோகிலா:— அப்படின்னு...நான் நினைக்கிறபடி...நீங்க சாதாரண மனிதர்தான்!... இல்லையா?.... (கோகிலா சிரித்துக் கொண்டே ஓடி விடுகிறாள்....) விங்கன்:— (தனக்குள்) கள்ளம் கபடம் இல்லாத பெண்!.... அவ பாட்டுக்கு மனம்விட்டுச் சிரிக்கிறாள்...பேசுகிறாள்...ஓடுகிறாள்... What an innocent girl!