காட்சி 17

காட்சி — 17

72 பகுதிகளில்

(கட்டுக்கடங்காமல் உமாவின் குதிரை செல்கிறது. உமாவின் முகத்தில் அச்சம்! சில சமயங்களில் அலறல்! விங்கன் தன் குதிரையைத் தட்டிவிட்டு உமாவைக் காப்பாற்றப் பின்தொடர்தல். இறுதியாக ஒரு இடத்தில் குறுக்கு வழியாகக் குதிரையை ஓட்டி விங்கன், உமாவின் குதிரையருகே சென்று அவளை அப்படியே தூக்கிக் கொள்கிறான்..... இருவரும் உருண்டு ஒரு பகுதியில் உருளுகிறார்கள். உமாவின் குதிரை ஓடிக்கொண்டேயிருக்கிறது.... உமா, உடல்வலி தாங்காமல் "அய்யோ! அப்பா! அம்மா!" என முனகுகிறாள்.) விங்கன்:— ஐயையப்பா! கால்ல அடிபட்டுடுச்சா? கையிலே பட்டுச்சா?.. முகத்திலே? முதுகிலே? (என்று உமாவைத் தொட்டுப் பார்க்க...) உமா:— என்ன இதெல்லாம்? விங்கன்:— இல்லே!... முதுகிலே அடிபட்டிருந்தா முதுகெலும்பு முறிஞ்சிருக்கும்.... முதல் உதவி சிகிச்சை செய்யலாமேன்னுதான் கேட்டேன். ஆபத்துக்குப் பாவம் கிடையாது. உமா:— உங்க உதவிக்கு ரொம்ப நன்றி!.... இருந்தாலும் என்னைத் தொடாம காப்பாத்தியிருந்தா.. ரொம்பப் பாராட்டியிருப்பேன்!... விங்கன்:— த்ச்! த்ச்!.... அவசரத்திலே நான் ஒரு கயறு எடுத்துக்கிட்டு வர மறந்துட்டேன்!.... உமா:— கயறு கொண்டு வந்திருந்தா?... விங்கன்:— கழுத்திலே அப்படியே கட்டி ஓடுற குதிரை மேலே வீசி... குதிரையை அப்படியே நிறுத்தியிருப்பேன்! உன்னையும் தொடாம காப்பாத்தியிருப்பேன்!.... இன்னொரு சான்ஸ் கிடைக்காமலா போய்விடும்! உமா:— ஓ! இன்னொரு தடவை எனக்கு இப்படியாகணும்னு ஆசையா?.... விங்கன்:— சே! சே! அதெல்லாமில்லே..... உன்னை ஜாக்கிரதையா வீட்டுலே கொண்டுபோய் விடணும். அதுதான் என் ஆசை! மெதுவா.. தொடவும் கூடாது! காப்பாத்தவும் செய்யணும்! வா! வா! (இருவரும் நடந்து வருதல். உமா நொண்டியபடியே வருகிறாள்.) ★