காட்சி 15

காட்சி — 15

ஜமீன் மாளிகையில் ஒரு பகுதி

72 பகுதிகளில்

**ஜமீன் மாளிகையில் ஒரு பகுதி** (இருளில் மங்கலான விளக்குகளுக்கிடையே சற்று பிரகாசமான ஒளி வட்டத்தின் மத்தியில் மரகதம், புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாள். காளிங்கன் போதையில் தள்ளாடியவாறு அவள் பின்னால் வந்து, கண்களைப் பொத்துகிறான்... திடுக்கிட்டு கைகளைத் தட்டிவிட்டு எழுந்தவாறு) மரகதம்:—என்ன மானேஜரய்யா?.. வயசான காலத்திலே சும்மா இருக்க முடியலியா!... காளிங்:—வயசைப் பார்த்தா உடுறவன் மன்மதன்...பாணம்!.. காதலுக்கு வயசு என்ன ஒரு தடையா?... அதை உடைச்சு ரெண்டு பேரும் எறியணும்! இப்போ சின்னப்பசங்க காதல்பண்றாங்களே அதுஎன்ன பிரயோசனம்?.. ஒண்ணுமே இல்ல. நாமன்னு பெரிய ஜீனியஸ்!.. பழைய காலத்து மனிதர்கள்... நம்ப காதலே தனி!.. (நெருங்கி வந்து தொடுதல்) மரகதம்:—ஸ்ஸ்!... அப்புறம் நான் ரொம்பப் பொல்லாதவளா இருப்பேன்!... காளிங்:—பொல்லாதவள்தான் எனக்குவேணும்! அப்பதான் எனக்கு மூடு கிரியேட் ஆகும். அப்பாவியா இருந்தா அவளுக்கு ஒண்ணும் தெரியாது.. அடிமாடு மாதிரி! மரகதம்:—(கோபமாக) மானேஜர்!... காளிங்:—(கொஞ்சலாக) டீச்சரம்மா!... மரகதம்:—(கண்டிப்பாக) நான் உமாவுக்குத்தான் டீச்சரம்மா! இப்ப உனக்குச் சரியான பாடம் கற்பிக்கப் போற டீச்சரம்மா!... காளிங்:—பாடம்... சொல்லித் தர்றியா? சொல்லிக் கொடு! வா...பக்கத்திலேதான் என் படுக்கையறை இருக்கு!.. வா; அது என்ன நான் இது வரையில படிக்காத பாடம்னு பார்க்கிறேன்!... மரகதம்:—மேனேஜர்! மரியாதையா சொல்றேன்! உடனடியா இடத்தை காலி செய்யணும்! — இல்லேன்னு ஜமீன்தார் கிட்ட சொல்லிடுவேன்!.. காளிங்:—மலரைக் கசக்கி முகரக்கூடாது!... நான் அந்த மாதிரி ப்ளான் உள்ளவன்... ஒரு காலம் வரும்!.. அப்ப, நீ என் கால்ல வந்து விழுந்து காதல் பிச்சை கேப்ப!... எல்லோரும் வார் மாதிரி வரமாட்டே.. மரகதம்:—எப்படி? காளிங்:—வேற சைஸ்! நேரா வந்து குப்புற அடிச்சுப் படுத்துக்குவே!.. படுத்துக்கிட்டு, பிடிச்சுக்குவே..காலை!.. காதல் பிச்சை கொடுங்க! காதல் பிச்சை கொடுங்கன்னு கேக்கப் போறே!.. அட போடின்னு... விஸ்வாமித்திரர்போலவே அப்படி நிக்கப்போறேன்! (விசுவாமித்திரர் மேனகையை விரட்டி வெறுக்கும்பாணியில் கையை வைத்து அபிநயம் காட்டுகிற காளிங்கன் கீழே விழுகிறான் தள்ளாடி.) மரகதம்:— (அலட்சியமாக சிரித்துவிட்டு...) ஒழுங்கா ஒரு இடத்துல நிக்க முடியல்ல... அப்பாவுக்கு இந்த லட்சணத்தில காவல்! (என்றவாறு போகிறாள். இவ்வளவு நேரம் மறைந்திருந்து இந்த நிகழ்ச்சியை விங்கனும், கண்ணாயிரமும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.) விங்கன்:— கண்ணாயிரம்!.. மரகதம்மா — ஜமீன்தார் உறவிலே ஏதோ மர்மம் இருக்குதுலே!.. கண்ணாயிரம்:— இது மாத்திரமா?... வாங்க!... இன்னம் எவ்வளவோ ரகசியம் இருக்கு — சொல்றேன்!.. விங்கன்:— சரி... சரி... வா! ★