காட்சி 14

காட்சி — 14

காளிங்கராயன் அறை

72 பகுதிகளில்

**காளிங்கராயன் அறை** (காளிங்கராயன் கண்களை மூடியவாறு குடித்துக்கொண்டிருக்கிறான். கண்ணாயிரம், கோழிக்கால் முதலிய இறைச்சித் துண்டுகளை காளிங்கராயனுக்கு முன்னுள்ள தட்டில் பரிமாறிக் கொண்டிருக்கிறான்.) கண்ணாயிரத்தின் குரல்:—கண்ணைத் திறக்காம குடிக்கிறீங்களே எஜமான்! கொஞ்சம் கண்ணைத்திறந்து பார்த்தாத்தானே எதிரிலே மீனு... கோழி... இதெல்லாம் நல்லா சாப்பிடலாம். (புட்டிபோட்ட கிளாசை முழுவதும் முடித்துவிட்டு 'சடார்' எனக் கீழே வைத்துவிட்டு) காளிங்:—மடையா!... மகான்கள் தவம் பண்ணும்போது கண்ணைத் திறப்பாங்களாடா? கண்ணாயிரம்:—மாட்டாங்க! காளிங்:—ஏன் தெரியுமா? கண்ணாயிரம்:—சொல்லுங்க!.. காளிங்:—அப்பதாண்டா சொர்க்கம் தெரியும்!.. என்னைப்பன் சொக்கலிங்கம் காட்சி கொடுப்பான்!... [அப்போது விங்கன் படியேறி வந்து நிற்கிறான்.] காளிங்:—அடேடே...செகரட்டரி விங்கன்... வாங்க! வாங்க!... சொக்கலிங்கத்தைப் பத்திச் சொல்லு செகரட்டரி விங்கன் வந்துட்டாரு டேய், கண்ணாயிரம்!... அய்யாவுக்கு ஊத்துடா!.. விஸ்கியா? பிராந்தியா? ஜின்னு? ரம்மா?.... விங்கன்:—நோ! நோ!.. நான் அதைக் கையால தொட்டது கூட கிடையாது!... காளிங்:—தொட வேண்டாம்!.. நீங்க பேசாம வாயைத் திறந்துகிட்டு உட்கார்ந்திருங்க!.. நாங்க ஊத்திடறோம்!.. விங்கன்:—ஆமா... உங்க ஜமீன்ல யாரும் குடிக்கக்கூடாதுன்னு சட்டம் கொண்டு வந்திருக்கீங்க!.. நீங்க பாட்டல் பாட்டலா முழுங்கிறீங்களே! காளிங்:—சட்டம் ஏழைகளுக்குத்தான் போட்டிருக்கு! அதிகாரத்துல இருக்கிறவங்களுக்கு அல்ல. தெரியுமா? டேய் கண்ணாயிரம் நீ ஊத்துடா. (தன் கிளாசைக் காட்டுதல் — கண்ணாயிரம் ஊற்றுதல் — காளிங்கன் கண்ணை மூடிக்கொண்டு குடித்தல்... அந்த வேளையில், விங்கன் ஒரு "ரம்" பாட்டில் எடுத்து மறைத்துவைத்துக் கொள்ளுதல்....) காளிங்:—ஆகா! ஆகா... பிரமாதம்!.. இந்திரலோகத்துக்கே வந்தாச்சு!.. உம்!.. ஊர்வசி, ரம்பை, திலோத்தமை எல்லாம் டான்ஸ் ஆடுறாங்க!.. விங்கன்:—மிஸ்டர் மேனேஜர்!.. நான் வர்றேன்!.. காளிங்:—போறீங்களா?... ஏன்?... ஊர்வசி ரம்பை டான்சை பார்த்துட்டுப் போங்களே.. சீ!.. ஆகா! ஐயோ... டிரஸ்ஸே இல்லவே!.. ரிப்பன் கட்டிகிட்டு ஆடுறாங்களா எல்லாரும்!.. விங்கன்:—நீங்களே பார்த்து ரசிங்களேன்!.. எனக்கு வேலையிருக்கு!.. (விங்கன் போய்விடுதல்.) (அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, கண்ணாயிரம் பாட்டிலில் மீதமுள்ளதைக் குடித்திட ஆரம்பிக்கிறான்.) காளிங்:—அடே... வைடா கீழே!.. ஜமீன்ல யாருமே குடிக்கக் கூடாதுன்னு உத்தரவு!... வேலைக்கார நாய், நீ குடிக்கிறியா?.. திருட்டுப் போதை ஏத்துறியாடா?.. (என்று அவனக்கோபமாக அடிக்கிறான்.. கண்ணாயிரம் சிரிக்கிறான்.. மீண்டும் காளிங்கன் அடிக்கிறான் கண்ணாயிரம் சிரிக்கிறான். காளிங்கன் அவன் தலைமயிரைப் பிடித்து உலுக்கிக் கொண்டு) காளிங்:—என்னடா... அடிச்சுகிட்டே இருக்கேன்?... நீ, சிரிச்சுகிட்டே இருக்கே!... கண்ணாயிரம்:—ஒண்ணுமில்ல... ஒரு துளி குடிச்சதுக்கே நான் இவ்வளவு அடி வாங்குறேனே!... நீங்க அவ்வளவு குடிக்கிறீங்களே; எவ்வளவு அடி வாங்கப் போறீங்களோன்னு நினைச்சு சிரிக்கிறேன்!.. காளிங்:—எதிர்த்தா பேசுற?... கழுதை!... என்னையா எதிர்த்து பேசுற?.. இனிமே நீ சிரிக்க முடியாது... அழப் போற! உன்னை வேலையைவிட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டேன். போ வெளியே!... கெட் அவுட்!.. கண்ணாயிரம்:—ரொம்ப நன்றி!.. வர்றேன்... (கண்ணாயிரம் போகிறான்... காளிங்கன் தள்ளாடிக் கொண்டே ஏதோ உளறியவாறு வெளியே வருகிறான்.) காளிங்:—போறவன் எல்லாம் திட்டிட்டுப் போறான்; இவன் ஒருத்தன்தான் நன்றி சொல்லிட்டுப் போறான்... போடா! ★