காட்சி 13

காட்சி — 13

குதிரை லாயம்

72 பகுதிகளில்

**குதிரை லாயம்** (சடையன் குதிரையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறான்... சற்று வயதான தோற்றம்... விங்கன், கோகிலா கொடுத்த ஆல்பத்தை கையில் தூக்கிப் போட்டு மாறிமாறிப் பிடித்தவாறு வந்து கொண்டிருக்கிறான்... குதிரைக்கருகாமையில் விங்கன் நெருங்கும்போது... அவன் வருவதை கவனிக்காமல் சடையன் குதிரையின் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்ற, அந்தத் தண்ணீர் விங்கனின் பூட்சிலும், பூட்சுக்கு மேலே 'பேண்ட்'டியிலும் படுகிறது. பூட்சும், பேண்டின் முன்பாகமும் நீர் கலந்த சேறு ஆகிவிடுகிறது.) சடையன்:—(விங்கனிடம் ஓடிவந்து..) அடேடேடே!...தெரியாமப் பட்டுப் போச்சுங்க... மன்னிச்சிடுங்க! (என்று பணிவாகக் கெஞ்சலுடன் கூறுகிறான்.) விங்கன்:—பரவாயில்லை!... பரவாயில்லை!.. (அப்போது, காளிங்கராயன் கூச்சலுடன் வந்து கொண்டே..) காளிங்:—டே, முட்டாள்! சடையா!... குதிரையைக் குளிப்பாட்டுடான்னு... மனுஷனைக் குளிப்பாட்டுறே நீ! யார் இந்த மனுஷன்? தெரியுமா உனக்கு?...ஜமீன்தார் புது செகரட்டரி!.. படிச்சவர்!.. பணக்காரர்! சாரி மிஸ்டர் விங்கன்!.. டே, சடையா!... மிஸ்டர் விங்கனோட பூட்சை சுத்தமாத் துடை!... ம்... துடைடா... டர்ட்டி பெல்லோ!.... (சடையன் தன் துண்டை எடுத்து, விங்கனின் பூட்சைத் துடைக்கப் போகிறான்.) விங்கன்:—அய்யோ... வேண்டாம்!.. உங்க வயசு என்னு! என் வயசு என்னு!.. எங்கப்பா வயது உங்களுக்கு, நீங்க போயி இந்த வேலை செய்றதாவது... காளிங்:—வயசாவது ஒண்ணாவது... பிச்சைக்காரன் பூரா வயசானவனு வர்றான். அவனெல்லாம் அப்பன் வயசுன்னு கட்டிக்கிட்டு அழுதா நம்ப கதி என்ன ஆகுறது? இதுலதான் நாட்டுல மழை பெய்யாம, குட்டிச் சுவரா போகுது! என்ன அர்த்தமில்லாமப் பேசுறீங்க? நாம் எல்லாம் ஜமீன்தார் வர்க்கம். ஜமீன்தார் கடவுளுடைய பிரதிநிதி! நான் அவருடைய பிரதிநிதி!! இவங்களெல்லாம் வேலைக்காரப் பசங்க! நீங்க என்ன அவுங்க சாதியா?... டே, சடையா! என்ன பிரசங்கம் கேட்டுகிட்டு இருக்கே!... துடைடா பூட்சை! அவரைத் தொடாதே, பூட்சை மட்டும் தொடை! சடையன்:—இதோ எஜமான்... (விங்கன் தடுத்தும் கேளாமல், சடையன் விங்கனின் பூட்சைத் துடைத்தல்...) விங்கன்:—வேண்டாம் ஐயா! வேண்டாம்! (விங்கனின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கின்றன; அவன் உணர்ச்சி வயப்பட்டிருப்பதை, அவன் கையில் உள்ள ஆல்பின் நசுங்கி துண்டுதுண்டாகக் கீழே விழுவதிலிருந்து தெளிவாக்கப்படுகிறது. விங்கனின் கண்கள் கலங்குகின்றன. சடையன் பூட்சைத் துடைத்துவிட்டு எழுகிறான்.) ★