காட்சி 12

காட்சி — 12

ஜமீன் மாளிகை-பல பகுதிகள்

72 பகுதிகளில்

### ஜமீன் மாளிகை-பல பகுதிகள் (ஹாலில் மாட்டப்பட்டுள்ள புலியின் தலை, மானின் தலை, எருமையின் தலை ஆகியவற்றைக் காட்டுதல்...) கோகிலா:— வாங்க! வாங்க! வாங்க! இது புலி! உயிர்ப்புலின்னு நினைச்சுக்காதீங்க; செத்துப்போன புலி!...இந்தப் புலி போட்ட அட்டகாசத்தைத் தாங்காம ஜனங்கள்ளாம் ஓடியாந்து ஜமீன்தாருகிட்ட முறையிட்டாங்களாம். உடனே ஜமீன்தாரு, எடுத்தாரு துப்பாக்கியை! சென்றாரு காட்டுக்கு!...கொன்றாரு புலியை! கொண்டு வந்து இங்கே மாட்டியிருக்கு தலையை!... லிங்கன்:— இந்த ஜமீன்தாரா?... கோகிலா:— சொல்றதுக்குள்ளே அவசரப்படுறீங்களே; இந்த ஜமீன்தாரோட அப்பாவோட அப்பா—அதாவது தாத்தா!...இதோ, மான் தலை!...மான் வேட்டையிலே இப்ப இருக்கிற ஜமீன்தார் ரொம்ப கெட்டிக்காரரு!...நூறு மைல் வேகத்திலே ஓடுற மான்களை; நம்ப ஜமீன்தாரு நூற்றி அம்பது மைல் வேகத்திலே போயி வேட்டையாடி வீழ்த்துவாரு!...வாங்க! லிங்கன்:— ஓ! ### கோகிலா அறை கோகிலா:— இதான் என் ரூம்.. (உள்ளே அழைத்து வந்து) முதன் முதல்ல என் ரூமுக்கு வந்திருக்கீங்க..இந்தாங்க ஆப்பிள்!...(லிங்கன் வாங்கிக்கொள்கிறான்) அருமையான காஷ்மீர் ஆப்பிள்!...என்பேர்தான் உங்களுக்குத் தெரியும்..கோகிலா! எங்க அம்மாவைத்தான் உமாவோட வழியிலேயே பாத்துட்டீங்க!...உமாவுக்கு டீச்சரம்மான்னு அறிமுகப் படுத்தினாங்களே; அந்த மரகதம்மாவோட பொண்ணுதான் நான்!. நான் பிறந்தோன்ன எங்கப்பா; அம்மாகிட்ட சண்டை போட்டுகிட்டு, கப்பலேறி வெளிநாட்டுக்குப் போயிட்டாராம்..நான் பிறந்த நேரம் எப்படி பாத்தீங்களா?...நான் பிறந்த நட்சத்திரம் அஸ்வதி — பரணி — கார்த்திகை — ரோகிணி...அப்படிம்பாங்களே; இருபத்தேழு நட்சத்திரம்..அதில ஒரு நட்சத்திரம்!...லக்னம் என்னன்னா...மேஷம்-ரிஷபம்-மீனம்-கும்பம்-சிம்மம்-கடகம்-தனுசு-விருச்சிகம்... லிங்கன்:— (மேசையிலிருந்து ஒரு கிளிப்பை எடுத்து) போதும்!...போதும்!...அம்மா...எங்கே, உதட்டைக் கொஞ்சம்... (தன் உதட்டைக் குவித்துக் காட்டுதல்) இப்படி வச்சுக்க, பார்க்கலாம்... கோகிலா:— எப்படி? இப்படியா? (அவள் உதட்டைக் குவிக்கிறாள், அப்போது லிங்கன் தன் கையில் உள்ள கிளிப்பை அவள் உதட்டில் மாட்டிவிடுகிறான்.) லிங்கன்:— என்னை ஒரு வார்த்தைகூடப் பேசவிடாம நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கியே...ஊம்!... (கோகிலா, “வலிக்குது, எடுத்து விடு” என்பது போல கெஞ்சுதல். லிங்கன், சிரித்துக்கொண்டே கிளிப்பை எடுத்துவிடுகிறான்.) கோகிலா:— ஏன், நான் பேசுறது..பிடிக்கலியா?..ரசிக்க முடியலியா உங்களாலே!... லிங்கன்:— நோ..நோ..நீ ரொம்ப ரசனையா பேசுற!...உன்னைக் கொண்டு போயி, அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம், இதுமாதிரி இடங்கள்ள ‘கெயிடா’ போட்டா...அங்க வர்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நாள் முழுக்க மூச்சுவிடாம விளக்கம் சொல்லிட்டு இருப்பே!...இப்ப நான் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லு!... (உதட்டைத் தடவி, வலியைப் போக்கிக் கொண்டவாறு) கோகிலா:— கேளுங்க!...இந்த ஜமீன் எப்ப ஆரம்பமாச்சு? இந்த ஜமீனின் முதல் ஜமீன்தார் யார்?...அவர்பேர்?...அப்படி யிப்படி யெல்லாம் கேட்கப் போறீங்களா?...அதுக்கு இதோ, இந்த ஜமீன் சரித்திரமே ஒரு புத்தகமா இருக்கு..இந்தாங்க! (ஒருபுத்தகத்தைக்கொடுக்கிறாள்.) லிங்கன்:— (புத்தகத்தை அலட்சியமாக வாங்கியவாறு) மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா..இதோ..கிளிப்பு! மாட்டிடுவேன்!... கோகிலா:— வேண்டாம்! வேண்டாம்!...இப்பவே உதடு வீங்கிட்டுது..ஏண்டி உதடு வீங்குச்சுன்னு எங்கம்மா கேட்டா என்ன சொல்றது?...புதுசா வந்திருக்கிற செகரட்டரி செஞ்ச வேலைன்னு சொல்லிடுவேன்!... லிங்கன்:— சரியான வெகுளிப் பெண்ணா இருக்கே!... (சிரித்தவாறு) ஆமா கோகிலா!...உங்க இளையராணி உமா அம்மையாரோட... கோகிலா:— அம்மையாரா?...அவுங்க குமாரி உமாங்க!...ம்...இந்தக் காலத்திலே நாற்பது அம்பது ஆனது கூடத்தான் நான் குமாரின்னு பட்டம் வச்சுக்குது!... லிங்கன்:— ஆமா குமாரி உமாவோட அன்றாடப் பொழுதுபோக்கு; காற்றைவிட வேகத்திலே சாரட் வண்டி ஓட்டுவது தானா?... கோகிலா:— அது மாலை நேரத்துப் பொழுதுபோக்கு!...காலையில எழுந்ததும்... லிங்கன்:— பல் விளக்குவாங்க!...காபி சாப்பிடுவாங்க!... கோகிலா:—குளிக்கிறதை மறந்துட்டீங்களே!.. குளிச்ச டிரஸ் போட்டுகிட்டு குதிரை சவாரி செய்யாம இருக்கிறதே இல்லே! விங்கன்:— I see..! தினமும் காலையிலே குதிரை சவாரி செய்வாங்களா? கோகிலா:—ஆமாம்..இதோ!..உமா சவாரி செய்ற குதிரையை இங்கேயிருந்தபடியே காட்டுறேன்!..(ஜன்னல் திரையை விலக்கி) அதோ!..வண்டிக்கார சடையன் குளிப்பாட்டுறான் பாருங்க...அந்தக் குதிரைதான்!.. (சடையன் குதிரையைக் குளிப்பாட்டுவதை விங்கன் பார்க்கிறான் — விங்கன் முகத்தில் சோகம்.) ★