காட்சி 11
காட்சி — 11
ஜமீன் மாளிகை
72 பகுதிகளில்
### ஜமீன் மாளிகை (ஜமீன்தாரும், காளிங்கராயனும் இருக்கிறார்கள்.... அப்போது மரகதம், உமா வருதல்.) உமா:— அப்பா! வரவர இந்த ஊர் ரொம்ப கெட்டுப்போச்சு!... என்னையே ஒருத்தன் எதிர்த்துப் பேசுறான்!... ஜமீன்தார்:— (எழுந்தவாறு) என்ன? யார் அவன்?... மரகதம்!... உமாவை அப்படிப் பேசுனது யாரு?... மரகதம்:— யாரோ ஒரு துடிதுடிப்பான வாலிபன்!... ரொம்ப குறும்புக்காரன்!... காளிங்:— ம்...வருங்காலத்து ஜமீனி! ஜமீனி கிட்டப்போயி குறும்பு பண்ணினானா? இப்போதே குருவி சுடுவது மாதிரிச் சுட்டு விட்டு வர்றேன் — விரலெல்லாம் துடிக்குது!...உத்தரவு கொடுங்க! கொடுங்க நீங்க உத்தரவு!...அவன் எவனாயிருந்தாலும் சுட்டுடுவேன்!...விடமாட்டேன்!...ஒத்து....யாரது விலகு!... (ரைபிளை எடுத்துக் குறி பார்த்தவாறு நீட்டுகிறான். அப்போது ரைபிள் துப்பாக்கி முனையில் லிங்கன் வந்து நிற்கிறான்.) காளிங்:— யார்?.... குறி வச்சிட்டேன்! தள்ளு அந்தப் பக்கம்! லிங்கன்:— டேவிட் துரை ஜமீன்தாருக்கு லெட்டர் கொடுத்திருக்காரு! உமா:— அப்பா!...இவர்...(ஏதோ சொல்ல முனைகிறாள் — சொல்லவில்லை.) ஜமீன்தார்:— (கடிதத்தைப் பார்த்தவாறு) ஓ!...நீங்கதான் மிஸ்டர் லிங்கன்?...டேவிட் துரை போன் பண்ணினார்! நான் அவரிடமே சொல்லி விட்டேன்...நீங்கதான் இனிமே இந்த ஜமீனுக்கு செகரட்டரின்னு! இவர்தான் மானேஜர் காளிங்கராயன்... காளிங்:— மானேஜர் மட்டுமல்ல; ஆல் இன் ஆல்!... (கை குலுக்குதல்) லிங்கன்:— Much Pleased to meet you! ஜமீன்தார்:— (லிங்கன் கையைக் குலுக்கி) மிஸ்டர் லிங்கன்! உங்கள் வரவு நல்வரவாகுக!... இதோ...இதுதான் என் மகள் உமா!...அதாவது எதிர்கால ஜமீன்தாரணி...உமா... லிங்கன்:— வணக்கம். உமா:— (தயக்கமுடன்) வ...ண...க்...க...ம்!... ஜமீன்தார்:— இதோ...இது... லிங்கன்:— உமாவோட டீச்சரம்மா...தெரியும்!...வணக்கம்... மரகதம்:— வணக்கம். (ஜமீன்தார் வியப்பு... அப்போது கோகிலா, உமாவைக் கூப்பிட்டவாறு ஓடி வருகிறவள் — அருகே வந்து நிற்கிறாள்...) கோகிலா:— உமா!... ஜமீன்தார்:— இதுதான் கோகிலா... லிங்கன்:— வாத்தியாரம்மாவின் மகள்!...வணக்கம். ஜமீன்தார்:— அடேடே!...இதெல்லாம் உங்களுக்கு நல்லா தெரியுதே!... காளிங்:— துரை சொல்லியிருப்பாரு! நம்ப ஜமீனுக்கு ஏத்த செகரட்டரி!... ஜமீன்தார்:— கோகிலா! மிஸ்டர் லிங்கனை அழைத்துக்கொண்டு போய், நமது மாளிகை முழுதும் சுற்றிக்காட்டு!... கோகிலா:— (லிங்கனிடம்) வர்றீங்களா?... ★