காட்சி 9

காட்சி — 9

ஜமீன் அந்தரங்க மாளிகை

72 பகுதிகளில்

**ஜமீன் அந்தரங்க மாளிகை** (ஜமீன்தார் சாய்ந்து படுத்திருக்கிறார். ஒருத்தி அவருக்கு முன் கண்ணாடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்... ஒருத்தி தலைக்கு “டை” போட்டுக் கொண்டிருக்கிறாள்...) ஜமீன்தார்:— (ஒருத்தியிடம்) வனிதா! (கண்ணாடியை உற்றுப் பார்த்து) இதோ இரண்டு வெள்ளை ரோமம் தெரியுது பாரு.. இதையும் கறுப்பாக்கு!... (அவள், அந்த ரோமங்களுக்கு “டை” தடவுகிறாள்.. ரிசீவரை லீனா போனில் வைக்காமலேயே பேசுதல்.) லீனா:— நீங்க இந்த ஊருக்கே ஜமீன்தாரு — நீங்க எப்படி இருந்தா என்னங்க?... ஜமீன்தார்:— லீனா!.. உனக்கு ஒண்ணுமே தெரியமாட்டேங்குதே!.. உருவத்திலே கவர்ச்சி—ஊருக்கு உபதேசம் பண்றதிலே ஒரு தனிப் பயிற்சி—இந்த இரண்டும்தான்.. எனக்கு மூலதனம்!.. அதில் தனி கவனம் செலுத்தவேண்டாமா?... லீனா:— நீங்க பெரிய ஆளுங்க!... ஜமீன்தார்:— (லீனா கையில் ரிசீவரைப் பார்த்துவிட்டு) லீனா!.. என்ன கையிலே ரிசீவரை வச்சுக்கிட்டே... லீனா:— அடடே! மறந்துட்டேங்க!... (போனில் வைத்துவிட்டு) உங்க மன்மத முகத்தைப் பாத்தா எல்லாமே மறந்து போகுது!... ஆமாம்... யாரு போன் பண்ணுனாங்க?.. ஜமீன்தார்:— அதுவா.. டேவிட் துரைன்னு ஒரு வெள்ளைக்கார கோடீஸ்வரன்! அவரு, லிங்கன்னு ஒருத்தனை என்கிட்ட செகரட்டரி வேலைக்கு அனுப்புறேன்னாரு.. பேரு நல்லா இருக்குல்லே.. லிங்கன்...! லீனா:— நல்லா இருக்கு.. நான்கூட ஒரு சேதி சொல்லப் போறேன்—அதுகூட உங்களுக்கு நல்லா இருக்கும்!... ஜமீன்தார்:— என்ன லீனா?... லீனா:— (நாணத்துடன் நாணிக்கோணி) நான்.. இப்ப.. ரெண்டு மாசம்.. முழுகாம இருக்கேன்!.. ஜமீன்தார்:— என்ன கர்ப்பமா?... (தந்திரமாக) ஏன் லீனா என்னைப் பத்தியோ—உன்னைப் பத்தியோ ரகசியம் தெரிஞ்சவங்க.. உனக்கு வேண்டியவர்கள் யாராவது வெளியில இருக்காங்களா?... லீனா:— இல்லீங்க! கடவுளைத்தவிர வேற யாருக்கும் எதுவும் தெரியாதுங்க! ஜமீன்தார்:— கடவுளுக்குத் தெரிஞ்சா பரவாயில்லை!.. லீனா.. கிட்ட வாயேன்!.. (மற்றப் பெண்களைப் போகச்சொல்ல—அவர்கள் போய்விடுகிறார்கள். கதவை மூடிவிட்டு அவள் கழுத்தை நெறித்துக் கொண்டே... “கர்ப்பமா கர்ப்பம்”... என உறுமியவாறு அவளைப் பிணமாக்குகிறார்.. லீனா, உயிரற்று கீழே சாய்கிறாள்.)