காட்சி 7

காட்சி — 7

குதிரை லாயம்

72 பகுதிகளில்

**குதிரை லாயம்** (குழந்தைகள் ஐந்தாறு பேர் கூச்சல் போட்டுக் கொண்டு விளையாடுகிறார்கள். சொக்கலிங்கமும் அங்கே இருக்கிறான். அழுக்கு ஆடைச் சிறார்களுக்கிடையே, சிறுமி உமா தகதகவென ஒளிபரப்பும் உடையுடன் வந்து கலந்து கொள்கிறாள்..ஒரு ஏழைச் சிறுமி "ஏ! உமா வந்தாச்சு! உமா வந்தாச்சு!" என்று கூவுகிறாள்...) உமா:— ஏ, இன்னைக்கு என்ன விளையாட்டு விளையாடலாம்? மற்றொரு சிறுவன்:— கண்ணாமூச்சி!... இன்னொருவன்:— கண்ணாமூச்சி வேணும் — கலியாண வெளையாட்டு ஒரு சிறுமி:— அப்படின்னு யாரு பொண்ணு?... யாரு மாப்பிள்ளை...? ஒருவன்:— நீ தான் பொண்ணு!... சிறுமி:— நான் மாட்டேன்... இதோ உமாதான் பொண்ணு மாதிரி இருக்கா!... ஒருவன்:— அப்ப சரி... உமாதான் பொண்ணு! — சொக்கலிங்கம் தான் மாப்பிள்ளே!.. சொக்க:— நான் மாட்டேண்டா...(என்று ஓட, ஒரு சிறுவன் அவனைத் துரத்துகிறான்.) எல்லோரும்:— முடியாது! முடியாது!... நீதான் மாப்பிள்ளை!... டும் டும்! பீப்பி பீப்பி!... (என்று மேளதாளம் வாசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். உமாவையும், சொக்கலிங்கத்தையும் ஒரு பலகையில் உட்கார வைக்கின்றனர். மந்திரங்கள் ஜபிக்கின்றனர்..... சொக்கலிங்கத்தின் தலையில் ஒரு மாப்பிள்ளை முண்டாசு கட்டுகின்றனர். அவன் கையில் ஒரு கயிற்றில் ஒரு சிறு கல்லை எடுத்து முடிந்து, உமா கழுத்தில் கட்டச் சொல்லுகின்றனர். அவன், கயிற்றை உமா கழுத்தில் கட்டப் போகும்போது ஜமீன்தாரின் கரம் அவன் கையைத் தட்டிவிட்டு, அந்தக் கயிற்றைப் பிடுங்குகிறது...) ஜமீன்தார்:— வண்டிக்காரப் பயலுக்குப் பொறந்த கழுதை!... நீ ஜமீன்தார் ஜம்புலிங்க பூபதியின் மகளுக்கா தாலி கட்டப் போகிறாய்?... (அவரது உறுமல் கண்டு உமா உட்பட எல்லா சிறாரும் சிதறி ஓடுகிறார்கள். சொக்கலிங்கம் மட்டும், ஜமீன்தார் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறான்...) ஜமீன்தார்:— இனிமே இந்தப் பக்கம் வராதே! வராதே!...(அடிக்கிறார்; அடித்துக் கொண்டே இருக்கிறார்...) சொக்க:— அம்மா! அம்மா! (சொர்ணம் ஓடி வருகிறாள் அலறியவாறு) சொர்ணம்:— எஜமான்! எஜமான்! அவனை அடிக்காதீங்க!... எஜமான், அடிக்காதீங்க!... ஜமீன்தார்:— இவன் கையை முறிச்சாதான் என்ன? (சொக்குவின் கையைத் திருகுகிறார். அவன் அலறுகிறான்.) சொர்ணம்:— ஐயையோ! விடுங்க எஜமான் அவனை!... அவனைக் கொன்னுடாதீங்க!... ஏதோ, பிள்ளைங்க விளையாட்டா செஞ்ச வேடிக்கையை... நீங்க... விபரீதமா எடுத்துக் கிட்டு... ஜமீன்தார்:— விளையாட்டா? ஹா!... ஹா!... ஜமீன் ஜம்புலிங்க பூபதியின் மகள் உமாவோட நிழல் இருக்குதே நிழல்; அந்த நிழலைக்கூட இவன் விளையாட்டாத் தொட்டா.. இந்தப் பரதேசிப் பயலோட பத்து விரலையும் வெட்டிப் பந்தாடிடுவேன்!... சொர்ணம்:— எஜமான்! எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு எஜமான்... ஒவ்வொரு நாளும் நீங்க பொதுஜனங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது.... ஏழைக்குழந்தைகளை எடுத்துக் கொஞ்சி முத்தம் கொடுக்கறீங்க!... சமத்துவம் பேசறீங்க!... சாதி வித்தியாசமில்லாம பழகுறீங்க!.. ஜமீன்தார்:— (கோபமாக) என்னடி, என்ன சொன்னே?.. என்னடி சொன்னே?.. சொர்ணம்:— கூட்டத்துக்கு மத்தியிலே ஒரு ஜமீன்தார்!... குதிரை லாயத்திலே இன்னொரு ஜமீன்தாரான்னு கேட்கிறேன்! ஜமீன்தார்:— (சொக்கலிங்கத்தை எறிந்து விட்டு)... கேட்படி. கேட்ப!...(அவள் தலைமயிரைப் பிடித்து அறையப் போகிறார்...) சொர்ணம்:— எஜமான்!... (ஜமீன்தார் தயக்கம், தலைமுடியைப் பிடித்தபடி நிற்கிறார்... சொர்ணம் திடுக்கிட்டு...) எஜமான்!... குடிச்சிருக்கீங்களா?.. குடி, குடியைக் கெடுக்கும்ணு ஊருக்குச் சொல்வீங்களே!.. அந்த வெறியிலே தான்... இப்படி நடந்துகிட்டீங்களா?.. (ஜமீன்தார் மனம் பேசுகிறது.) “இவளுக்கு என் உண்மை உருவம் தெரிந்துவிட்டது!.. இனி இந்த ஊருக்கே தெரிந்துவிடும்! இனியும் இவள் உயிரோடிருந்தால்?... கூடாது! கூடாது! கூடவேகூடாது!” (மன ஒலி நிற்கிறது...) ஜமீன்தார்:— என்ன சொன்னே?... யாரைப் பார்த்துக் குடிகாரன்னே! என்னைப் பார்த்தா?... என்னைப் பார்த்தா?... (அவளைத் தள்ளிக்கொண்டே போகிறார் தலைமுடியைப் பிடித்தவாறு...) சொக்க:— அம்மா! அம்மா!... (என்றவாறு ஜமீன்தாரை இழுக்க ஓடிவருதல், அதற்குள் அவளை அங்குள்ள மயிலைக்காளை மீது தள்ளுகிறார். காளை, அவளைத் தன் கூரிய கொம்புகளால் குத்தித் தள்ளுகிறது. சொர்ணம் வீறிட்டு அலறுகிறாள். சொக்கலிங்கம் “அம்மா!” என்று இடி முழக்கம் செய்கிறான்.. சடையன் ஓடி வருகிறான்...) சடையன்:— சொர்ணம்...! சொர்ணம்...! ஜமீன்தார்:— (சமாளித்தல்) ஐயோ, சொர்ணம்! அந்தப் பக்கமா போனே!.. அது துஷ்டக் காளையாச்சே!.. அதைக் கொண்டாந்து குதிரை லாயத்துல கட்டினது யாரு?.. சொர்ணம்!.. சொர்ணம்!! சொக்க:— அப்பா! அம்மாவைக் கொன்றது இந்த ஜமீன்தார் தாம்பா! ஜமீன்தார்:— அட தெய்வமே—சடையா! இவன் பொய்சொல்றான்.. மாடு முட்டுனதை மனுஷன் மேலே சொல்றான். சொக்க:— நீ மனுஷன் இல்லே!.. நீ தான் மாடு!.. சடையன்:— (அவனைத் தடுத்து) பாவிப்பயலே!.. எங்க எஜமானையா குற்றம் சொல்றே?.. ஜமீன்தார்:— சடையா! இதுதான்—பழியோரிடம் பாவமோரிடம் என்பாங்களே—அது!... சடையன்:— அவர் நம்ப தெய்வம் மாதிரி! அவரைப்பத்தி நீ ஏதாவது சொன்னே உன் நாக்கு அழுகிப் போய்டும்!.. சொக்க:— இல்லப்பா.. இல்லே!—இவன்தான் எங்கம்மாவைக் கொன்னான்!... இவனை சும்மா விடக்கூடாது!... (கல்லை வீசுதல்—ஜமீன்தார் தலையில் கல் அடிபடுதல்—சொக்கன் ஓட) சடையன்:— ம்.. அவனைப் பிடிங்க!... பிடிங்க!... (அங்கு வரும் சில வேலையாட்களைப் பார்த்து சொக்கலிங்கம் ஓடுதல்—வேலையாட்கள் துரத்துதல்.) ★