காட்சி 4-எ

காட்சி — 4 எ.

தேவாலய அந்தரங்க அறை.

72 பகுதிகளில்

**தேவாலய அந்தரங்க அறை.** (ஜமீன்தார் உள்ளே நுழைகிறார்... ஆடம்பரமான அறை... கட்டிலில் மரகதம் வேறுபக்கம் திரும்பிப் படுத்திருக்கிறாள், அலங்கார உடையுடன்!...கவர்ச்சியான தோற்றமுடன்!...) ஜமீன்தார்:—(கட்டிலை நோக்கி கொஞ்சு மொழியில்) மரகதம்!... தூக்கமா? ஆகா!..நீ திரும்பிப் படுத்திருக்கும் அழகே, தெவிட்டாத பேரழகு!..(அருகே சென்று) உறக்கமா? ஊடலா?... உயிர் போகுதடி உன் ஒளிமுகத்தைக் காணுமல்!...என் கரும்புவல்லி! கொஞ்சம் திருப்பு!.... (மரகதம் திரும்பி எழுகிறாள்....) மரகதம்:—எவ்வளவு நேரம் காத்திருக்கிறேன் தெரியுமா?... ஜமீன்தார்:—என் காணமயிலேக் கட்டித்தழுவ நானும்தான் துடித்துப் பறந்தேன்...அதற்குள் கருணை மனுக்களோடு ஒரு கழுதைக் கூட்டம்..வழக்கம்போல்..ஜமீன் மாளிகை வாசலில்!.. மரகதம்:—விரட்டியடித்துவிட்டு விரைவில் வருவதுதானே!... இங்கு நான் விரகதாபத்தால் வெந்துதான் போகிறேன் போங்கள்! (தொட வருகிறார்.) ஜமீன்தார்:— (விலகிக்கொண்டு) மரகதம்! என் கையைத் தொடாதே! கொஞ்சம்..என் கைக்கு "டெட்டால்" ஊற்று!... (வாஷ்பேசினிடம் சென்று) யாரோ ஒரு புலவனும்—அவன் குழந்தைக்கு மூக்கு சிந்திவிட்டேன்..சனியன்!.. (மரகதம் டெட்டால் ஊற்ற, ஜமீன்தார் கை கழுவுதல் — மரகதம், டவல் தந்திட அதில் துடைத்தல்...) மரகதம்:— அப்புறம் இன்னைக்கு யார் யார் குறையைத் தீர்த்தீங்க?.... ஜமீன்தார்:— ஒரு கிழவிக்கு அவள் உயிரோடு இருக்கிறவரை மாதாந்திர உதவிப் பணம் நூறு ரூபாய். மரகதம்:— அவ்வளவு ரூபாயா!... ஜமீன்தார்:— அந்தக் கிழம் ஒருமாதங்கூட உயிரோட இருக்காது!.. மரகதம்:— ம்..அப்புறம்..ஏதாவது புதிய உத்திரவு... ஜமீன்தார்:— நம் ஜமீனுக்குள் மதுவின் வாடையே இனிமேல் அடிக்கக் கூடாதுன்னு புதுஉத்தரவு போட்டிருக்கேன்!.. மரகதம்:— ஓ!.. (என்றவாறு புத்தக அலமாரியைத் திருப்ப — மது பாட்டில்களின் அலமாரி திரும்புகிறது. மரகதம், ஒரு கிளாசில் ஊற்றி ஜமீன்தாருக்குத் தருகிறாள்...) ஜமீன்தார்:— மரகதம்..நீயும் கொஞ்சம்..(கிளாசை அவள் உதட்டில் வைக்கிறார். அவள் பருகுகிறாள். அதே கிளாசை ஜமீன்தார் பருகியவாறு) மதுவின் சுவையும்—மரகதத்தின் இதழின் சுவையும்—இரண்டும் இணைந்து எனக்கு இரட்டை—போதை அளிக்கிறது.. ஆகா!.. மரகதம்:— நீங்களே இரட்டை மனிதர்தானே!... ஜமீன்தார்:— இடிச்சன்னு..கிண்டலா பண்றே?.. மரகதம்:— இரண்டு ஆள் பலம் உங்கள் ஒருத்தருக்கே இருக்குன்னு சொன்னேன்..இல்லையா கண்ணாளா!.... ஜமீன்தார்:— மரகதம்! நீ உன் சொந்த அனுபவத்தைத்தானே சொல்றே?... மரகதம்:— போங்கள்!.. (வெட்கத்துடன் படுக்கையில் போய் சாய்தல். ஜமீன்தார் தொடர்ந்து சென்று அவளைத் தழுவிக் கொண்டு..) ஜமீன்தார்:— மரகதம்..எங்கே?..(உதட்டைக் குவித்து முத்தம் கேட்கிறார்.) எனக்கு ஒரு...கொடு! மரகதம்:— ஊஹூம்..வெட்கமாயிருக்கு!.. ஜமீன்தார்:— அது என்ன திடீர்னு புது வெட்கம்!.. இங்கு யார் நம்ப ரெண்டுபேருந்தானே இருக்கிறோம்...கொடு!... மரகதம்:— மூணாவது ஒரு ஆளும் இருக்கு!.. ஜமீன்தார்:— மூணாவது ஆளா? என்ன சொல்றே? மரகதம்:— என் வயிற்றுக்குள்ளே யிருந்து பாத்துகிட்டு இருக்கு..? ஜமீன்தார்:—(திடுக்கிட்டு) என்ன? கர்ப்பமா?... மரகதம்:— ஆமாம்..நாலு மாசம்!.. ஜமீன்தார்:— நாலு மாசமா? மரகதம்!..இது என்ன மடத்தனம்?.. இதுவரையில் ஏன் அதை அழிக்கவில்லை. என்னிடங்கூட இப்போதுதான் சொல்கிறாய்?..ஜமீன் சொத்துக் கால்பங்குபோடத் திட்டம் போட்டிருக்கியா? மரகதம்:— உங்கள் சொத்து யாருக்கு வேண்டும்..தேவை இல்லை!..எனக்கு ஒரு குழந்தை வேண்டும்! ஜமீன்தார்:— என்ன சொன்னே? உன்னை உயிரோட விட்டா தானே..உனக்கு குழந்தை, குட்டி எல்லாம்..இப்பவே உன்னை அனுப்பவேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன்!... (மரகதத்தின் கழுத்தைநெறித்தவாறு படுக்கையில் தள்ளுதல்; மரகதம், படுக்கையில் விழுந்தவள் தலையணைக்குக் கீழ் இருக்கும் ரிவால்வரை எடுத்து, முதலில் மேல் நோக்கி சுட்டுவிட்டு பிறகு ஜமீன்தாரைக் குறிபார்க்கிறாள்..) மரகதம்:— ஜம்புலிங்க பூபதி அவர்களே!..மரகதம், இதுவரையில் உமது மடியில் துள்ளி விளையாடிய மான்குட்டி!...இனிமேல் உமது உயிரைக் குடிக்கும் புலிக்குட்டி!... ஜமீன்தார்:—(பயந்து மிரண்டவாறு) மரகதம் மன்னித்துவிடு என்னை!.. நமக்குள் சமரசமாகப் போய்விடுவோம்..? மரகதம்:— நானும் எனக்குப்பிறக்கப்போகும் குழந்தையும் இனிமே இங்கல்ல! ஜமீன்மாளிகையில்தான் வாழவேண்டும்!... வாழத்தான் போகிறோம்— ஜமீன்தார்:— சரி, மரகதம்!..நீ, ஜமீன் மாளிகையில் என்மகள் உமாவுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரம்மா!..அப்படி வாழலாம்!.. ★