காட்சி 80]
காட்சி 80·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பூமாலை அறை பூமாலை: உஷா உன் உதவியை மறக்கவே முடியாது: உஷா: பரவாயில்லேம்மா. பூமாலை : தினம் தினம் ராத்ரீலே இங்கே படுத்தீன்னா அப்பா ஏதாவது ஆத்திரப்படுவாரு. இன்னைக்கு வீட்டுக்குப் போம்மா.
உஷா: வேண்டாம் இன்னைக்கு ஒருநாள்தானே. நாளையிலேருந்து மருந்துகூட போடவேண்டியதில்லை.நாளைக்கு போறேன் . பூமாலை : சரி ... சொன்னால் கேட்க மாட்டே. ம் ..போயி படு. உஷா: நிம்மதியா தூங்குங்க...ம். (போகிறாள் - பரந்தாமன் வருகை பரந்தாமன் : அக்கா எப்படி இருக்கிறது? பூமாலை: எல்லாம் சௌக்யமாய் இருக்கிறது. உஷா : (வந்து) கூப்பிட்டிங்களா? பூமாலை : உனக்கு ஒன்றுமில்லையம்மா ! நீ போய் படு. பரந்தாமன் : நான் வர்றேன் அக்கா ! நீ நல்லாத் தூங்கு. (பரந்தாமன் நிம்மதியில்லாமல் உலாவுகிறான். பிறகு மெதுவாக வந்து கட்டிலருகே சென்று -உஷா என உச்சரிக்கிறான். பிறகு மெதுவாக தொடுகிறான் - பூமாலை குதித்தெழுகிறாள்) பூமாலை: தெரியுமே எனக்கு உன் சேதி. பரந்தாமன் : அக்கா ! பூமாலை : தோட்டத்தை அழிக்கப் புறப்பட்ட குரங்குகூட சில மலர்களை பாக்கி வைத்துவிடும்... செந்தாமரை குளத்தில் புரளும் எருமைகூட சில புஷ்பங்களைத் துவைத்து நாசப்படுத்தாமல் விட்டுவிடும். குரங்கு மனமும் எருமைப் பண்பும் ஒருங்கே அமையப் பெற்றவனே, உன் கண்ணுக்கு இறையாகாமல் தப்ப எந்தப் பெண்ணுக்கும் உரிமை கிடையாதா? உன் வெறிபிடித்த தர்பாரிலே கற்புநெறி காத்துக்கொள்ளும் கன்னியர்களே வாழக்கூடாதா? எட்டாத பழத்தை புளிக்குமென்று சொல்லிவிட்டுப் போகிற குள்ள நரியின் புத்திகூடவா உனக்குக் கிடையாது ? முயற்சி திருவினையாக்கும் என்ற முதுமொழியை இந்த மோச காரியங்களுக்குத்தானா நீ பயன்படுத்த வேண்டும்.
பரந்தாமன் : அக்கா ....நான் ஒன்றும் கெட்ட எண்ணத்தோடு வரவில்லை. பூமாலை: ஆமாம். உன் தங்கைபோல நினைத்து உஷாவை உபசரிக்கும் நல்ல எண்ணத்தோடுதான் வந்திருக்கிறாய்! அக்ரம ஆட்டங்களுக்கு ஆதாரந்தேடியாக காட்டிக் கொண்டு அதிகநாள் வாழமுடியாது. அதற்கு அழிவு காலம் விரைவிலே உதயமாகிவிடும். பரந்தாமன் : அழிவு எனக்கு மட்டுமா. அவனியிலே காண்பதெல்லாம் ஒருநாள் அழியக் கூடியதுதான். பூமாலை : அதைத்தான் நீ நன்றாக உணரவேண்டும் அழிய முடியாதது ஒன்று இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினாலும் யுக யுகாந்திரங்கள் உருண்டு போனாலும் அழிய முடியாது - புகழ். நல்லவன் என்ற புகழ் - வீரன் என்ற புகழ் விவேகி என்ற புகழ் . என் தம்பிக்கு கிடைக்க வேண்டுமென்று தவங் கிடந்தேனே அந்தப் புகழ் பரந்தாமன் : எனக்குத் தேவையில்லை அந்தப் புகழும் புகழ் பற்றிய உனது புதிய உபதேசமும். மனிதன் பிறக்கிறான் சாகிறான். இறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்திலே அவன் எண்ணியதெல்லாம் நடக்க வேண்டும். இதுதான் பரந்தாமன் கொள்கை. இதற்கு இடையூறு செய்ய யாருக்கும் சுதந்திரம் கிடையாது. பூமாலை: சூதும், சூழ்ச்சியும் சுகபோக வெறியும் கொண்ட உனக்கிருக்கிற சுதந்திரம் உன்னால் பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்களுக்கு, பாட்டாளிகளுக்கு, பாவையர்களுக்கு ஏன் பல லட்சம் பாமாக்களுக்கு இருக்கக்கூடாது. அப்படித்தானே அக்ரமக்காரா. பரந்தாமன்: ஆமாம், அப்படித்தான். அதைக் கேட்க நீ யார்? பூமாலை: நான் யாரா? நான் யாரா? நான்தான் அப்பா அம்மாவால் அனாதையாக விடப்பட்ட குழந்தை பரந்தாமனை, அனுதினமும் அக்கரையோடு வளர்த்தவள்.
தம்பிக்கு தலைவலி என்றால் தனக்கு தேள் கொட்டியது போல் வேதனை அனுபவித்தவள்.நீ நெக்லஸைத் திருடி நிரபராதிப் பாண்டியனை குற்றவாளியாக்கியபோது, தங்கம் நிகர் மேனியாளை பொங்கு கண்ணீர் அருவியோடு தனியேவிட்டு விட்டு சிங்கம் நிகர் பாண்டியன் சிறை சென்றபோது தம்பியைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நியாயத்திற்கு எதிர் திரையிலே நின்றவள். இப்போது புரிகிறதா? நான் யாரென்று. என்னையா கேட்கிறாய் யாரென்று? (பரந்தாமன் போக) பூமாலை : எங்கே போகிறாய்-நில்- உஷாவிடம் போகாதே- வெளியே நட... பரந்தாமன் : ஆ அவளிடந்தான் போகிறேன் என்ன செய்வாய்... பூமாலை: நில் உனக்கு இப்போது ஒரு பெண் தானே வேண்டும். பரந்தாமா உனக்கு இப்போது ஒரு பெண் தானே வேண்டும்.இதோ நானிருக்கிறேன். பரந்தாமன் : ஆ. அக்கா... பூமாலை : ஆம் ! உன் அக்காள்தான்.ஊர்ப்பெண்கள் மீது ஓயாமல் வீசும் உன் காமவார்த்தைகளை எல்லாம் ஒன்று சேர்த்து உடன் பிறந்தவளிடம், உனக்கு முன்பிறந்த ரத்தத்திடம் வீசு ! பேசு ! பேசுவாயாமே அன்புக்கரசி என ஆரம்பித்து அடுக்கு மொழியிலே ஆரணங்குகளை வசியப் படுத்துவாயாமே ...ம் ... பேசடா ... ம் .. பேசு .. (பரந்தாமன் திரும்ப) பூமாலை: தீயவனே திரும்பிப்பார்! இங்கல்ல. நீ நடந்துவந்த பாதையிலே உன் காலடிபட்டு நசுங்கிப்போன ஜீவன்களைத் திரும்பிப்பார். உன் துரோகத்தால் துவண்ட தொழிலாளி வர்க்கத்தின் துடிதுடிப்பை திரும்பிப்பார். அலறியழுத பாமா- அடுக்குமா என்று சாபமிட்ட புண்யகோடி அய்யகோ ஏமாந்தோம் என்று கதறி கண்ணீர் வடிக்கும் ஆதரவற்ற குடும்பங்கள். அந்தியின் மொத்த வியாபாரியே
அவைகளையெல்லாம் திரும்பிப்பார். ஏன் நிற்கிறாய் பயங்கர மிருகமே, ஏன் நிற்கிறாய்? பரந்தாமன் : அக்கா !... பரந்தாமா! நீ மனிதனல்ல, மிருகம். மிருகம் (ஓடுகிறான்)