காட்சி 77] [மில் முதலாளி வீடு
காட்சி 77·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[முதலாளி காரைவிட்டு இறங்கிப் போக -பூமாலை "ஐயா ஐயா" என ஓடுதல்]
முதலாளி : யார்ரா இது?
பையன் : இவங்கதான் பரந்தாமனின் அக்காள் !
முதலாளி : பரந்தாமன் அக்காள் ... இங்க எங்க வந்தே ... போ- போ
பூமாலை : கோபிக்காதீர்கள்... நான் வந்த விஷயம்...
முதலாளி : பரந்தாமனுக்கு பெண் கேட்க ... இல்லியா?
பூமாலை : பரந்தாமனுக்கு பெண் கேட்க அல்ல - பாட்டாளிகளுக்கு வாழ்வு கேட்க!
முதலாளி : என்ன உளர்றே?
பூமாலை : பல தொழிலாளிகளை கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள் என்பதற்காக வேலையைவிட்டு நீக்கிவிட்டீர்கள், அவர்கள் எல்லாம் வேதனை தாங்காமல் வாடுகிறார்கள். அவர்களை மறுபடியும்...
முதலாளி : சரிதான். இப்ப தலைமைப்பதவி மாறியிருக்கோ - தம்பி போயி அக்காள் ! குடும்பத்துக்குள்ளேயே சுத்துதோ தலைமைப் பதவி.
பூமாலை: தவிப்பவர்கள் குறையைச் சொல்ல தலைவியாகத்தான் வரவேண்டுமோ? அய்யா அப்படியொன்றும் நான் வரவில்லை. ஏழைத் தொழிலாளிகளின் ஏக்கத்தைப் போக்குகிறேன் என்று சொல்லுங்கள் - போதும்.
முதலாளி : இந்தப் புத்தியை முன்னமேயே உன் தம்பிகிட்ட சொல்லியிருக்கணும் நீ.
பூமாலை : தம்பி செய்த பாபத்திற்குத்தான் அக்காள் பிராயச்சித்தம் செய்ய வந்திருக்கிறாள். தயவுசெய்யுங்கள் அய்யா.
முதலாளி : முடியாது... போ.... போய்விடு.
பூமாலை: (காலில் விழுந்து) அய்யா! உங்கள் காலைப்பிடித்துக் கொள்கிறேன், கதியற்றவரின் கண்ணீரைத் துடையுங்கள். பசி, பட்டினி, பஞ்சத்தில் பாட்டாளிகளைத் தள்ளாதீர்கள். என்ன இருந்தாலும் அவர்கள் உங்களிடம் வேலை செய்தவர்கள். உங்களுக்கு குழந்தைகள் மாதிரி ஐயா !...
முதலாளி : விடு காலை.
பூமாலை: விட முடியாது. வேதனைக்குரலுக்கு நீங்கள் செவி சாய்க்கும் வரையில், வாழ முடியாதவர்களுக்கு நீங்கள் வகைசெய்யும் வரையில் விட முடியாது.
முதலாளி : சீ மூதேவி.
(காலை உதறி போதல்- பூமாலை காயமடைதல்- அப்போது வந்த உஷா)
உஷா : அடெடெ! பூமாலையா.... பலமாக அடிபட்டுவிட்டதே. டேய்...யார் அங்கே?