காட்சி 76] [பூமாலை வீடு

காட்சி 76·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

புண்யகோடி: ஏ .. பரந்தாமன் எங்கே?

குண்டுமணி: என்னய்யா ஒதற்றே.

புண்யகோடி : அந்த பரந்தாமன் எங்கேடா.

குண்டுமணி: என்னய்யா ஒதற்றே.

(ஓடுகிறான்)

[பூமாலை வருகிறாள்]

பூமாலை : யார் நீங்கள்?

புண்யகோடி: யாரா? மோசக்காரனை நம்பிய முட்டாள். தருதலைப் பயலைப் போயி தலைவன்னு தலையிலே தூக்கிவச்சுகிட்டு ஆடிய மடையன்

பூமாலை: என்ன சொல்றீங்க....

புண்யகோடி : என்னம்மா சொல்லணும்? உன் தம்பி செஞ்ச வேலைக்கு - நூத்துக் கணக்கான தொழிலாளர்ங்க வயத்ல மண்ணைப் போட்டுவிட்டானம்மா !...

பூமாலை : எல்லோரையுந்தான் விடுதலைசெய்து விட்டார்களே.

புண்யகோடி : கோர்ட்ல விடுதலை செஞ்சாங்க. கிளர்ச்சிக்கு முக்யமானவங்களையெல்லாம் மில் முதலாளி வேலையை விட்டு நீக்கிட்டாரு என்னையும் சேத்து. நூற்றுக்கணக்கான குடும்பம் தவிக்குதுன்னா யாராலம்மா வந்தது இந்த அநியாயம்?

பூமாலை : பொறுங்கள் பதறாதீர்கள்........

புண்யகோடி: பதறாம என்ன பண்றது. சொந்த விஷயத்துக்காக புரட்சி பண்ணச் சொல்லி இவ்வளவு ஏழைகளோட

சோத்ல மண்ணைப் போட்டுட்டானே பாவி. நாங்கல்லாம் நிழல் மாடு - காடு கழனிலே வேலை செய்யத் தெரியாது- எங்களுக்கு வேற என்ன வேலை தெரியும் பிச்சை எடுக்கலாம் அவ்வளவுதான்...ம் எங்கம்மா உன் தம்பி?

பூமாலை : அவன் வீட்டில் இல்லை.

புண்யகோடி: ம்... அக்ரமக்காரன். அநியாயக்காரன்.

பூமாலை : ஐயா, நானே போயி மில் முதலாளியைப் பார்த்து உங்களுக்கெல்லாம் திரும்பவும் வேலை தரும்படி கேட்கிறேன். நீங்கள் போங்கள் தயவு செய்து.

புண்யகோடி : அந்தப் பய மட்டும் கண்ல அகப்பட்டான்னா ...

(போகிறான்)