காட்சி 69]
காட்சி 69·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[சாப்பாட்டு அறை
[ராதா சாப்பாடு போட ஓடுகிறாள்]
புண்யகோடி:(சாப்பிட்டுக் கொண்டே) ராதா! விடியற்காலம் நாலு மணிக்கு எனக்கு வேலையிருக்கு தலைவர் பரந்தாமன் கட்டளைப்படி பெரிய புரட்சி ஊர்வலம் நடத்த தொழிலாளர்களை ஒன்று சேர்க்கணும் ! மறந்துடாதே! நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடு!..
(இருவரும் தூங்கிக்கொண்டிருத்தல். மணி பனிரெண்டு அடிக்கப் போகிறது. ஒரு கை கடிகாரத்தின் முட்களை நகர்த்தி நாலுமணி காட்டச் செய்கிறது. அது பரந்தாமன் கை.மணி நான்கு அடிக்கிறது. ராதா எழுந்து விடுகிறாள் - புண்யகோடியை எழுப்புகிறாள்)
புண்யகோடி : (எழுந்து கடிகாரத்தைப் பார்த்து) சபாஷ்! பின் தூங்கி முன் எழும் பத்தினி என்பார்கள் முன்னோர்கள். அந்தப் பத்தினி நீயேதான் !....ம் கோட்டை எடு!
(கோட்டை மாட்டிவிட போய் விடுகிறான் - ராதா படுத்துக்கொள்கிறாள். பரந்தாமன் வந்து அவள் கண்களைப் பொத்த, திடுக்கிடுகிறாள் - பரந்தாமன் சிரிப்பு)
பரந்தாமன் : எப்படி வந்தேன்னு ஆச்சரியமாயிருக்கா! இது விஞ்ஞான காலம், கடிகாரம் தேவைப்படுகிறது !
(தெருவில் போய்க்கொண்டிருந்த புண்யகோடி மணிக்கூண்டைப் பார்க்க, 12½ எனவே திரும்புகிறான். இங்கே வீட்டினுள் - அவன் நெருங்க, அவள் நடுங்க, புண்யகோடி பிரவேசம்)
புண்யகோடி : அடபாவி! பாதகா !
(பரந்தாமன் திகைத்தல்)
புண்யகோடி : அடே கலியுக இந்திரா! பாட்டாளிகளின் தலைவன் நீதானாடா ! உன்னை பெரிய தலைவன்னு நம்பி நான் மோசம் போனேண்டா ! அயோக்கிய பயலே! இந்திரனை கெளதமர் சபிச்சாராம்,உடம்பெல்லாம் கண்களாப் போச்சொல்லி ! உன்னை அப்படி சபிக்கக்கூடாது ! ரெண்டு கண்ணை வச்சிக்கிட்டே நீ இப்படி ரெண்டகம் பண்றியே உடம்பெல்லாம் கண்ணாப்போனா நீ ஊர்ப் பெண்களையெல்லாம் விடமாட்டே ! உன்னை உயிரோடவே விடக்கூடாது !
பரந்தாமன் : ஏ கிழவா ! மரியாதையாகப் பேசு!
புண்யகோடி : என்ன சொன்னே சண்டாளப் பயலே!
(உலக்கையைத் தூக்கிவர, பரந்தாமன் ஓட்டம் )
புண்யகோடி : இந்தப் பகல் வேஷக்காரனை நம்பி பாட்டாளி மக்களை யெல்லாம் கெடுத்துட்டேன் பாவிப் பயல்!
(போலீஸ் வந்து அரஸ்ட் செய்கிறது)
சப்- இன்ஸ்பெக்டர் : புண்யகோடி நீர் கைதுசெய்யப்படுகிறீர்!
புண்யகோடி : ஆ! ஏன்?
சப்- இன்ஸ்பெக்டர் : ஸ்ட்ரைக் செய்து அராஜகம் நடத்தியதற்காக
புண்யகோடி : அது என் குற்றமில்லீங்க!
சப்- இன்ஸ்பெக்டர்: கோர்ட்டில் சொல்லும்!
(கைது செய்யப்படல்)