காட்சி 66]

காட்சி 66·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[மில் வாசற்புரம்

தொழிலாளி: என்ன இவ்வளவு நேரமா பேசுறாங்க முதலாளியும் பரந்தாமனும்?

புண்யகோடி : என்ன பேசுவாங்க! நம்ப கோரிக்கையை முதலாளி கவனிக்கப் போறாரா இல்லையான்னு ஒரு முடிவு கட்டிட்டுத்தான் வருவாரு பரந்தாமன். அவர் என்ன சாமான்யமா! சாக்ஷாத் புரட்சி அவதாரம்.

(பரந்தாமன் வேகமாக வருதல்)

புண்யகோடி: தம்பீ! என்ன பேசினீங்க! என்ன ஆச்சு ......

பரந்தாமன் : என்ன ஆச்சு. குறைகளை எடுத்துச் சொன்னேன். கோரிக்கையை கவனிக்கும்படியாக எப்படி எப்படியோ கேட்டுக்கொண்டேன். தொழிலாளர் புரட்சி மூளும் என்றுகூட எச்சரித்தேன். அசையவில்லை அந்த முதலாளி.

புண்யகோடி : அப்புறம்?

பரந்தாமன் : அப்புறமென்ன ! திருமணம் செய்யவேண்டியதுதான்

புண்யகோடி : என்ன?

பரந்தாமன் : இல்லை... தீர்மானம் செய்ய வேண்டியதுதான்! திட்டம் தீட்ட வேண்டியதுதான் ! கோரிக்கைகளை கவனிப்பதாக இத்தனை நாள் அமைதியாயிருந்தோம். அதை கோழைத்தனம் என்று கருதிவிட்டார் குருட்டுமதி படைத்தவர் ! கொதித்துக் கிளம்புவோம்! போர்க்கொடியை உயர்த்துவோம்! புரட்சி நடத்துவோம்! புரட்சி !

புண்யகோடி : புரட்சி ! (எல்லோரும் புரட்சி கோஷம்)