காட்சி 60]
காட்சி 60·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
(குமுதா போதல்)
[பூமாலை வீடு
பூமாலை: (சோகமுடன் கண் கலங்க) கண்களை விற்று விட்டு சித்திரம் வாங்குகிற கதைக்கும் குமுதா பாண்டியன் வாழ்வைச் சீரழித்துவிட்டு சகோதர வாஞ்சையைக் காப்பாற்றிக் கொள்ளும் என் நிலைமைக்கும் என்ன வித்தியாசம் ....
பரந்தாமன் : கண்களை விற்கும்படி யார் சொன்னது! என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் போவதுதானே !
பூமாலை: அது என் குற்றந்தான். அதற்கு தண்டனையே உலகத்தில் கிடையாது !
பரந்தாமன் : பாண்டியன் என்னை எதிர்த்து மேடை அதிரப் பேசலாம். கோடை மழைபோல் வசைச் சொற்களைக் கொட்டலாம். போலித் தலைவன் என புத்தகம் போட்டு பொதுஜன விரோதியாக்கலாம். இப்படியெல்லாம் உன் தம்பிக்குத் தகாத பெயர் - இழி தன்மை கற்பிக்கலாம். அதற்கு நான் சரியான பாடம் கற்பிப்பது மாத்திரம் பாபம் பாதகச் செயல். நன்றாயிருக்கிறதக்கா நியாயம்.
பூமாலை: கொள்கை விரோதத்திற்காக, குடும்பத்தைக் கெடுப்பதுதான் நியாயம். இல்லையா!
பரந்தாமன் : ஆமாம்! அதற்கென்ன செய்யப் போகிறாய் ....
பூமாலை: என்ன செய்யப் போகிறேனா! முன்பே சொன்னாயே; காட்டிக் கொடு என்று, அதை செய்யப் போகிறேன்!
பரந்தாமன் : ஆ !
பூமாலை: கூண்டிலே நிறுத்துகிறேன். குற்றவாளி நீதான் என்று கூறுகிறேன். ஊரார் நகைக்கட்டும். ஊதாரித் தலைவனே என்று கேலி செய்யட்டும்!
பரந்தாமன் : அக்கா வேண்டாம்!
பூமாலை : அப்படிச் செய்தாலாவது நீ திருந்தமாட்டாயா? அதையும் செய்து பார்க்கிறேன். உன்னைத் தம்பியாகப் பெற்றதற்கு வேறென்னதான் எனக்கு சுகம் !
பரந்தாமன் : என்னைக் காட்டிக் கொடுப்பதுதான் உனக்குச் சுகமென்றால், நான் கைதியாக நிற்பதுதான் உனக்குக் களிப்பு தரும் காட்சி என்றால், உன்னை நம்பி என்னை ஒப்புவித்து விட்டுப் போனார்களே - அந்த அம்மா அப்பாவின் ஆத்மாக்கள் நீ செய்யும் அந்தப் புனித காரியத்தால்தான் சாந்தியடையுமென்றால் இப்போதே போ ! போலீஸாரிடம் சொல்! பொதுமக்களிடம் பறை சாற்று ! தம்பியைக் காட்டிக் கொடு! போ அக்கா போ! அம்மாவும் அப்பாவும் உனக்கு இட்ட கட்டளை அதுதானே ! அதை நிறை வேற்று போ!
பூமாலை: பரந்தாமா! (அழுதல்) பரந்தாமா இனிமேலாவது நீ திருந்தி நடக்கிறாயா?
பரந்தாமன் : நான் என்ன தவறு செய்கிறேன் திருந்தி நடக்க.
(போகிறான். பூமாலை கண்ணீருடன் நிற்கிறாள்.)