காட்சி 56] [மில் முதலாளி வீடு
காட்சி 56·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
முதலாளி : உஷா ! இரவு நேரங்களில் வெளியில் போகாதே என்று சொன்னேனே ! கேட்டாயா! ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் என்று நீ போகிறாய்
உஷா : போனதைப்பற்றி ஏனப்பா பேசுகிறீர்கள். போலீஸார் என்ன சொன்னார்கள்.
முதலாளி : என்ன சொன்னார்கள். யாரும் அகப்படவில்லையாம்!
("அகப்பட்டுவிட்டான்!" என்ற குரலுடன் பரந்தாமன் பிரவேசிக்கிறான்.)
முதலாளி : யார்?
பரந்தாமன்: (உட்கார்ந்துகொண்டே) எல்லாம் கேள்விப்பட்டேன். ஓ... இதுதான் உஷாவோ ! (உஷாவிடம்) உங்களுக்கேற்பட்ட ஆபத்தை ஆண்டவன்தான் தடுத்திருக்கிறான்.
முதலாளி : அதிருக்கட்டும் ஆள் அகப்பட்டுவிட்டான் என்றீரே!
பரந்தாமன்: ஆமாம். தொழிலாளர்களைத் தூண்டிவிடும் பலாத்காரவாதிகளின் வேலையிது !
முதலாளி : ஆங்... பலாத்காரவாதி!
பரந்தாமன் : அவன்தான் பாண்டியன்.
முதலாளி : பாண்டியனா?
உஷா: பாண்டியனா?
பரந்தாமன்: அவனேதான்!அராஜகத்திற்கு ஆரம்பவிழா நடத்தியிருக்கிறான். விரைவில் ஆலைக்கே தீ வைப்பான். உங்களை அழிப்பதற்கே ஒரு சிறு கும்பலை சேர்த்து வைத்திருக்கிறான் அவன்.
முதலாளி : உம் ! அவனைப் பிடிக்க ஆதாரம்!
பரந்தாமன் : ஆதாரம் ! கொள்ளையடிக்கப்பட்ட வைர நெக்லஸ் சென்னையில் எங்கே யிருக்குமென்று எண்ணுகிறீர்கள். அவன் வீட்டில்தானிருக்க வேண்டும் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்து அவன் வீட்டை சோதனை போட வேண்டும். இதை அவசரமாகச் செய்ய வேண்டும். இப்போதே Phone செய்யுங்கள்!
முதலாளி : சபாஸ்! சரியான யோசனை ! ( போனை எடுத்துப் பேசுகிறார்) ஹலோ! போலீஸ் ஸ்டேஷன் !