காட்சி 57]

காட்சி 57·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[சென்னையில் குமுதா வீடு

[பாண்டியன் காலையில் குளித்துவிட்டு புது ஆடைகளுடன் உட்கார்ந்திருக்கிறான். குமுதாவும் எதிரே அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பூமாலை வருகிறாள் கோவையிலிருந்து !]

குண்டுமணி : சின்னம்மா ! அம்மா வர்ராங்க!

பாண்டியன் : வருவதாய் முன்கூட்டி எழுதக்கூட இல்லையே.

குண்டுமணி : எதிர்பார்க்காத நேரத்தில் வந்தாதான் சந்தோஷம் ஜாஸ்தியாகும்னு இப்படி வந்திருக்காங்க ...!

குமுதா: எல்லோரும் சௌக்கியமா சின்னம்மா?

குண்டுமணி: குமுதா அம்மாக்கு சின்னய்யா ஏதாவது பிரசன்டேசன் அனுப்பியிருக்காரா?.

குமுதா: உம். அனுப்பியிருக்காருடா. காதுக்கு கம்மல், கழுத்துக்கு நெக்லஸ் !...

பூமாலை: (குண்டுமணியிடம்) இந்தா பெட்டியைக் கொண்டு உள்ளே வையி.

(குண்டுமணி பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே போகிறான்)

(பூமாலை தான் கொண்டு வந்த ஆப்பில் பழங்களை எடுத்துக் கொடுக்கிறாள்)

குண்டுமணி : உம். இப்ப பழம் வாங்கிட்டு வந்திருக்கீங்க. இன்னம் நாலு மாசங்கழித்து வரும் போது பம்பரம், படபடா வண்டி, பாலாடை, கிலுகிலுப்பை எல்லாம் வாங்கிட்டு வருவீங்க...

குமுதா: ஏய், போய் காபி கொண்டாடா.

(போகிறான்).

பூமாலை : ஏன் குமுதா,உண்மையைச் சொன்னா கோபமா?

(போலீஸார் வந்து விட்டார்கள் உள்ளே எல்லோரும் திகைப்பு )

பாண்டியன்: வாங்க... உட்காருங்கள் ....

சப்- இன்ஸ்பெக்டர்: உட்கார நேரமில்லை நீங்கள்தானே பாண்டியன்?

பாண்டியன்: ஆமாம்

சப் - இன்ஸ்பெக்டர்: குனியமுத்தூர் வழிப்பறி சம்பந்தமா உங்க வீட்டை சோதனை போட வேண்டியிருக்கு ...

பாண்டியன் : என் வீட்டையா?

சப்- இன்ஸ்பெக்டர் : yes!...

பாண்டியன் : என்ன சார் சொல்றீங்க...

சப்- இன்ஸ்பெக்டர்: நான் சொல்லலே, இந்த ஆர்டர் சொல்லுது! எய்ட் செவன் சிக்ஸ், கமான்....

(பூமாலை குமுதா திகைப்பு - வீடு சோதனை போடப்படுகிறது. எல்லா இடங்களிலும் போலீஸார் தேடுகிறார்கள் -)

குமுதா: சின்னம்மா (கட்டிக் கொள்ளல்)

பூமாலை : சும்மா இரு. சும்மா இரு. ஒண்ணுமில்லை.

பாண்டியன் : குமுதா! பைத்தியம்! என்ன இது! ஏன் பயப்படுகிறாய்? குற்றம் இருந்தால்தானே பயப்பட வேண்டும்.

(போலீஸார் எல்லா பெட்டிகளிலும் தேடுகிறார்கள். எதிலும் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.)

சப்- இன்ஸ்பெக்டர் : ம்... கிடைக்கலியே.

(குண்டுமணி பூமாலையின் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து)

குண்டுமணி : ஏன் சார் இதை மிச்சம் வச்சுட்டுப் போறீங்க. இதையும் பாத்துக்குங்க (பூமாலையிடம்) சாவி கொடுங்கம்மா!...

(பூமாலை சாவிதர, பெட்டித் திறக்கப்படுகிறது)

சப்- இன்ஸ்பெக்டர்: என்னப்பா உனக்கு கோபம் வருது! எங்க கடமையை நாங்க செய்றோம்.

(துணிமணிகளை எடுத்துப் பார்க்கும்போது கடைசியில் நெக்லஸ் இருக்கிறது. பூமாலையின் திகைப்பு. சப்- இன்ஸ்பெக்டர் நெக்லஸை திருப்பித் திருப்பிப் பார்க்கிறார். நெக்லஸ் பின்புறத்தில் 'உஷா' என்ற எழுத்துக்கள் இருக்கின்றன.)

சப்- இன்ஸ்பெக்டர் : உஷா ! இதேதான்.

(குமுதா-பாண்டியன்- பூமாலை திகைப்பு )

சப் - இன்ஸ்பெக்டர் : அகப்பட்டுவிட்டது. பாண்டியன் உம்மை அரஸ்ட் செய்திருக்கிறேன்.

பாண்டியன் : ஆ

பூமாலை: இது என் பெட்டி சார். அவரை விட்டுடுங்க...

சப் - இன்ஸ்பெக்டர்: ஸ்!... சொல்ல வேண்டியவைகளை கோர்ட்டில் சொல்லுங்கள்.என் வேலையை யாரும் தடுக்காதீர்கள். (போலீஸாரிடம் ) ம் ...கொண்டு போங்கள் !

குமுதா: (பாண்டியனிடம் ஓடிவந்து அலறல்) பாண்டியன்! பாண்டியன்!

பாண்டியன் : குமுதா!

குமுதா: இது என்ன பாண்டியன். எனக்கொன்றுமே புரிய......

பாண்டியன்: புரியவில்லையா! இதுதான் உலகம் !

பூமாலை : சப் - இன்ஸ்பெக்டர் சார் ! நான் தான் ஊரிலிருந்து வந்தேன். இது என் பெட்டிதான். பாண்டியன் மீது எந்த குற்றமுமில்லை. அவரை விட்டு விடுங்கள்.

சப் - இன்ஸ்பெக்டர்: தொந்திரவு கொடுக்காதீர்கள். உம் கொண்டு போங்கள்.

(பாண்டியனை அழைத்துச் செல்கிறார்கள்)

குமுதா (திகைத்து நின்று ஓடுகிறாள்) பாண்டியன், பாண்டியன் ...... (ஓடுகிறாள்)

(பாண்டியன் ஜீப்பில் ஏற்றப்படுகிறான். அலறியோடும் குமுதாவை பூமாலை பிடித்துக்கொண்டு அணைத்து )

பூமாலை: குமுதா... அமைதியாயிரு !... அழாதே ! அழாதே !

குமுதா: அழாமல் ஆனந்தமடையச் சொல்கிறாயா! எனக்கு எப்படி வரும் ஆனந்தம் ? அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கங்கணம் கட்டிக்கொண்டா வந்தேன், காரியம் கை கூடியதும் மகிழ்ச்சியடைய

பூமாலை: குமுதா!

குமுதா: ஏன் சின்னம்மா, எங்கள் வாழ்வை இப்படிக் கெடுத்தாய்?

பூமாலை: குமுதா! நான் ஒரு குற்றமும் அறியாதவள் குமுதா! யாருடைய சூதாட்டத்திற்கோ நான் வெட்டுக்காயாக பயன்பட்டு விட்டேன், என்னையும் அறியாமல்

குமுதா: யாருடைய சூதாட்டம்! ஏன் மறைக்கிறாய். எல்லாம் உன் தம்பியின் சூதாட்டம்தான் !...தெரியும் எனக்கு !.. இருவருமே சேர்ந்துகொண்டு எங்கள் இன்ப வாழ்வைக் கெடுக்க திட்டம் போட்டிருக்கிறீர்கள் என்று....

பூமாலை: குமுதா ! சந்தர்ப்பம் செய்திருக்கும் சதியை உன்னால் உணர முடியாவிட்டாலும் உன் சின்னம்மாவுக்கு இருதயம் என்று ஒன்று இருக்கிறது என்பதைக்கூடவா மறந்து விட்டாய்!

குமுதா: இருதயம் இருக்கிறது. அதில் உன் தம்பியின் ஷேம லாபங்களுக்கு மட்டுமே இடமுமிருக்கிறது.

பூமாலை: (அலறல்) குமுதா!

குமுதா: தன்னுடைய படுக்கையறைப் பதுமைகளில் ஒருத்தியாக இருக்கவேண்டிய குமுதா பகைவன் பாண்டியனின் காதலியாகிவிட்டாளே என்ற ஆத்திரம் பரந்தாமனுக்கு! நம்முடைய காதலனாக இருக்கவேண்டிய பாண்டியன் குமுதாவோடு கொஞ்சிக் கிடக்கிறானே என்ற குமுறல் உனக்கு !

பூமாலை : ஆ ! என்ன சொன்னாய்! அடி பாவி!

குமுதா : இனிமேல் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இந்த வீட்டு பந்தம், பாசம், சொந்தம் எல்லாம் இன்றோடு தொலைந்தது ! போய் வருகிறேன். இந்தா நீ பூட்டிய பொன் அணிகள் ! பூணாரங்கள் எடுத்துக்கொள்! (நகைகளைக் கழற்றி எறிதல்) தம்பியோடு சுகமாயிரு ! நான் போகிறேன் ..

பூமாலை: குமுதா !...

குமுதா: என்னைத் தொடாதே ! இனி நான் யார்? நீ யார்?

(ஓடுகிறாள் - பூமாலை அசைவற்று நிற்கிறாள்)