காட்சி 52] [மில் கேன்டீன்
காட்சி 52·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[புண்யகோடியுட்பட பல தொழிலாளர்கள் சிற்றுண்டி அருந்தியவாறு இருக்கிறார்கள் ]
புண்யகோடி: (சாப்பிட்டுக் கொண்டே) பரந்தாமனைப் போல ஒரு நாணயமான தலைவனைப் பார்க்க முடியாது. நல்ல ஒழுக்கம், நேர்மையான நடத்தை இவைகளுக்கெல்லாம் ஒரே ஒரு ஏக எடுத்துக்காட்டு நமது பரந்தாமனேதான்.
தொழிலாளி ஒருவன்: நீங்க புகழ்ந்து பேசுறீங்க. உங்க புள்ளைதான் எழுதியிருக்கு “போலித் தலைவன்” என்று.
புண்யகோடி : புள்ளை எழுதுவான் புத்தி கெட்டவன். அவன் எனக்குப் புள்ளையா, துரோகி.
தொழிலாளி: சும்மா இருங்க. பாண்டியன் பெரிய பகுத்தறிவுவாதி ! இலட்சிய வீரன் ! உண்மைத் தொண்டன்
புண்யகோடி : அவனா..துரோகி!
தொழிலாளி : போலித் தலைவன்னு சினிமாகூட எடுக்கப்போறாங்களாம்.
புண்யகோடி: எடுப்பாங்க எடுப்பாங்க ! முதல்ல இந்த சினிமாவே ஒழியணும். சீர்திருத்தம் மண்ணாங்கட்டி, விதவைக்கு திருமணம். பால்ய விவாகம் கூடாது. வயசானவனுக்குக் கல்யாணமா. இதெல்லாம் சினிமா. எப்ப ஒழியுமோ இந்த சினிமா.
தொழிலாளி: ஏன் உங்களையே தாக்குதோ
புண்யகோடி: ஏய், பாட்டாளிக்கு ஏண்டா படக்காட்சி !
தொழிலாளி : நாள் முழுதும் கஷ்டப்பட்டு வேலை செய்றவனுக்கு கொஞ்சம் நிம்மதி தர்றது சினிமா. அந்த அல்ப சந்தோஷங்கூட வேண்டாங்கிறீங்களா?
புண்யகோடி: அய்ய சந்தோஷம். உலகம் பூறா இந்த கரண்டுகட்டு வந்து சினிமாவே ஒழிஞ்சி போகணும்.
தொழிலாளி : நல்ல எண்ணத்தைப் பாருடா. சினிமா ஒழியறத்துக்காக மழை பேஞ்சு ஊரு செழிப்பாகறதும் கூடாதுங்கிறாரு !
மற்றொரு தொழிலாளி : வயசானாலே இப்படித்தான் உளறுவாங்க.
புண்யகோடி : யாருக்கடா வயசாச்சு ... பல்லைத் தட்டிடுவேன். இந்தப் பசங்கள்ளாம் பாண்டியன் கோஷ்டிபோல இருக்கு. அவனும் இப்படித்தான் சொன்னான். வயசாயிட்டுதாம்ல வயசு. இது பழனி பஞ்சாமிருதம் பட்ட தலை.