காட்சி 49] [புண்யகோடி வீடு.
காட்சி 49·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
(கார் போய் நிற்கிறது.பரந்தாமனும் புண்யகோடியும் இறங்குகிறார்கள்].
புண்யகோடி : வாங்க ! உள்ளே வாங்க.
பரந்தாமன் : கல்யாணத்தை ரொம்ப சிக்கனமாத்தான் செய்து விட்டீர்கள் இல்லையா...
புண்யகோடி: ஆமாம்.. (உள்ளே திரும்பி) ராதா ராதா கொஞ்சம் வந்துட்டுப் போ.
(ராதா வந்து நிற்கிறாள் - அவளைக் காட்டி)
புண்யகோடி : இதுதான் ..
பரந்தாமன்: ஓ.... பாண்டியனுக்கு தங்கச்சிவேறெ இருக்கா?
புண்யகோடி : தங்கச்சியா ! இது அவனுக்கு சின்னம்மா ! என் சம்சாரம்...
பரந்தாமன்: ஓ ... அப்படியா...
புண்யகோடி : (அசட்டு சிரிப்பு) ராதா ! டீ,காப்பி ஏதாச்சும் இருந்தா கொண்டா சீக்கிரம் ...
(ராதா உள்ளே போகிறாள்).
புண்யகோடி : ரொம்ப தங்கமான பொண்ணு! ஒரே ஒரு குறை வாய்தான் ஊமை ! ஆனா சுமாரா படிச்சிருக்கு ...
பரந்தாமன் : பாடுமா?
புண்யகோடி : எப்படித் தம்பி பாடும் ஊமைங்கிறேன் ...
பரந்தாமன்: ஒகோ...... ஏன் குயிலு வார்த்தையை சொல்லியா கூவுது. என்னமோ கத்துது. அதையுந்தான் குயில் பாடுதுங்கிறான்.
புண்யகோடி : ஹி ஹி ஹி ..ஆமா... ஆமாம். நல்லாசொன்னீங்க ஒரு வார்த்தை.
(ராதா காப்பியுடன் வருகிறாள் மேசையிடம்)
பரந்தாமன் : வயதான காலத்தில் கல்யாணம் செய்துகொள்வதே... சமையல் செய்யச் சொல்லி சாப்பிட, சங்கீதம் பாடச் சொல்லி ரசிக்கதானே .
புண்யகோடி : உங்களுக்குத்தான் தெரியுமே. அந்தப் பாழாப்போன மில்லுக்கு உழைக்கவே சரியாயிருக்கு நேரம்
பரந்தாமன் : பாவம்... அதுவும் வயதான காலத்திலே...
புண்யகோடி : என்னா தம்பி சும்மா வயசாயிட்டு, வயசாயிட்டுங்கிறிங்க... (காபியை ராதையிடம் வாங்கியபடியே) தம்பி! தொழிலாளர் விஷயமெல்லாம் எப்படி யோசனை பண்ணியிருக்கீங்க ... அதை மறந்திடாதீங்க...
(காபி அருந்தல்)
பரந்தாமன் : மறப்பேனா. மறக்கவே மாட்டேன். நினைத்ததை முடிக்காமல் விட்டதில்லை இந்தப் பரந்தாமன் ...
புண்யகோடி : எங்கே முடிக்காம விட்டுடுறீங்களோன்னு பார்த்தேன்
பரந்தாமன் : அப்ப வர்ரேன்...