காட்சி 48]

காட்சி 48·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[மில் வாசல்: ரோடு

[புண்யகோடியும் இரண்டு மூன்று தொழிலாளர்களும் பேசிக்கொண்டு வருகின்றனர்.)

ஒரு தொழிலாளி: (புண்யகோடியிடம்) என்னங்க மேஸ்திரி குறைகளையெல்லாம் சீக்கிரம் கவனிக்கப்போறாரு முதலாளின்னீங்க ஒண்ணியும் காணுமே!

புண்யகோடி : அதெல்லாம் சீக்கிரம் நடக்கும் பாரு!... நடக்கலேன்னா நம்ம தலைவர் இறுதிப் போராட்டம் ஆரம்பிச்சுடுவாரு

தொழிலாளி: அது சரி.. இப்ப ஆரம்பிச்ச ஜனவரிப் போராட்டமே பிசு பிசுண்ணு போய்ட்டுதுண்ணு சில பேர் பேசிக்கிறாங்களே !

புண்யகோடி : பேசுவாங்க, பேசுவாங்க ! முட்டாள்கள். நம்முடைய தலைவர் பரந்தாமனை சாதாரணமா நினைச்சுக்கிட்டாங்க ! புலி பதுங்குறது பாய்ச்சலுக்கு அடையாளம்ணு சொல்லு.

தொழிலாளி: பதுங்கிறது புலியா பூனையான்னுதானே சந்தேகப்படுறாரு பாண்டியன்!

புண்யகோடி : பாண்டியன் ... அந்தப் பய பேச்சை என்கிட்டே பேசாதீங்க... அயோக்கியப் பயல் ! அப்பன் கல்யாணம் பண்ணிக்கிறதைத் தடுக்கிற பயலை அகில உலகத்திலியும் நான் கண்டதில்லை.

தொழிலாளி: சரி மேஸ்திரி நாங்க வர்ரோம்..

(பரந்தாமன் காரிடம் நின்று கொண்டிருக்கிறான்)

புண்யகோடி : நமஸ்காரம்...

பரந்தாமன் : என்ன ... ஆங்...

புண்யகோடி : இப்பதான் மில்வேலை முடிஞ்சு ...

பரந்தாமன் : ம்... நான் சங்கத்துப் பக்கம் போய்ட்டு வர்றேன் ..

புண்யகோடி : அப்படியா, வாங்களேன் வீட்டுக்குப் போகலாம்.

பரந்தாமன்: எனக்கு அவசரமா வேலையிருக்கிறது...

புண்யகோடி : சரிதான் வாங்க... நம்ம கல்யாணத்துக்குக்கூட வர்லே. கல்யாண விருந்தாக ஒரு கப் காப்பி சாப்பிட்டு வரலாம்.

பரந்தாமன் : ஓகோ wife இங்கதானா!

புண்யகோடி : ஆமாம்.

பரந்தாமன் : சரி வாங்க காரில் போகலாம்.