காட்சி 45]
காட்சி 45·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[மில் முதலாளி வீடு
(மில் முதலாளியும், உஷாவும்]
முதலாளி : ஒருவன் தொலைந்தானென்று பெருமூச்சு விட்டேன். இன்னொருவன் முளைக்கிறான். பாண்டியன்.
உஷா: எல்லோரையும் பரந்தாமனைப்போல நினைத்து பணத்தால் அடித்துவிட முடியுமா ! லட்சியத்தில் உறுதி உள்ளவர்கள் இரும்புப் பெட்டிக்குத் தலை வணங்க மாட்டார்களப்பா !
முதலாளி : நீ சும்மாகிட உஷா ! உனக்கு ஒன்றும் தெரியாது!
உஷா: ஏம்ப்பா லேடி டாக்டருக்கு உலக விஷயம் தெரியாதுன்னு உங்கள் அபிப்ராயமா!
முதலாளி : லேடி டாக்டர் !... தொழிலாளர் தொழிலாளர் என்று தொல்லை கொடுத்து ஆயிரக் கணக்கில் எனக்கு நஷ்டம் உண்டாக்குகிறார்களே அந்த மனவேதனைக்கு மருந்து கொடுக்க முடியுமா உன்னால்?
உஷா: ஓ! கொடுக்க முடியும். ஆனால் இந்த மருந்தை இருதயம் என்ற இலையில் வைத்து, இரக்கம் என்ற தேனில் கலந்து சாப்பிட வேண்டும். மருந்துக்குப் பெயர் என்ன தெரியுமா அப்பா ? சமதர்மம்.சமத்துவம். முதலில் கொஞ்சம் கசப்பாயிருக்கும். பிறகு சரியாகி விடும்.
முதலாளி : உஷா !
உஷா: ஏன் ஆத்திரப்படுகிறீர்கள். தொழிலாளியின் குறைகளை கவனியுங்கள். எல்லாம் அடங்கிவிடும்.
(பியூன் வந்து )
பியூன்: பாண்டியனாம். உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்.
முதலாளி : பாண்டியன் ! வரச்சொல் ! வரச்சொல் ! பார்த்தாயா உஷா ! எல்லாம் பண வேட்டைக்குத்தான் பயல்கள் தலைவர் வேஷம் போடுகிறார்கள்.
(பாண்டியன் வருதல்)
பாண்டியன்: (உட்காந்து) உங்களிடம் ஒரு முக்கியமான செய்தி பற்றி
முதலாளி : சொல்லு ...
பாண்டியன் : தொழிலாளர்கள்
முதலாளி : தெரியும். அவர்களை அடக்க எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்.
பாண்டியன் : அய்யா! ''மஞ்சத்திலே முதலாளி - பஞ்சத்திலே பாட்டாளி " என்று முழங்கிவிட்டு, லஞ்சத்திலே நீச்சலடிக்-
கும் பரந்தாமனல்ல நான். பாண்டியன். பாட்டாளிகளின் தோழன் ....
முதலாளி : பாண்டியா என் பேச்சைக் கேள்.
பாண்டியன்: உங்கள் பேச்சை நான் கேட்க வேண்டாம். உழைப்பவர்களின் பெருமூச்சை நீங்கள் கவனியுங்கள்!
முதலாளி : பெருமூச்சு, உழைப்பு, வியர்வை, ரத்தம் எல்லாம் கேட்டுக்கேட்டு காது அடைத்து விட்டதப்பா!
பாண்டியன் : காது அடைத்துவிடும்,கண் இருட்டிவிடும், வாய் மூடிவிடும். கைகால் அசையாது ! கடைசியில் இருதயமே நின்றுவிடும். அந்தப் பரிதாபகரமான நிலைமை ஏற்பட வேண்டாமென எச்சரிக்கிறேன்.
முதலாளி : ஏ, இங்கென்ன பிரசங்கமா செய்ய வந்தாய்?
பாண்டியன்: இல்லை. பின்னடைந்துபோன தொழிலாளர் நிலை கண்டு, மனம் புண்ணடைந்து புலம்ப வந்தேன் .
முதலாளி: புலம்புவதற்கு சுடுகாட்டுக்குப் போ.
பாண்டியன் : சுகபோகியே! ஞாபகமிருக்கட்டும்.
(போய்விடுகிறான் - முதலாளி ஆத்திரமுடன் உலாவுகிறார்)