காட்சி 44]
காட்சி 44·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[மைதானம்
[அங்கே கூட்டத்தை தூரத்தில் நின்று கருடன் பார்க்கிறான். பாண்டியன் பேசுகிறான்.]
பாண்டியன் : தோழர்களே ! தொல்லைப்படும் தொழிலாளி வர்க்கத்திற்கு தொண்டு செய்வதாகக் கூறிக்கொண்டு ஒரு சில துரோகிகள் புறப்பட்டிருக்கிறார்கள்.தொழிலாளர்கள் ஆர்வமென்னும் மலர்களால் கட்டப்பட்ட அருமையான பூமாலை. அதை மந்தியின் கழுத்தில் போட்டு அழகு பார்க்காதீர்கள். உங்கள் உணர்ச்சியை, உரிமையை, ஆர்வத்தை, ஆவேசத்தை அடகு வைத்து பேரும் புகழும் பணமும் சம்பாதிக்கிற போலித் தலைவனை நம்பாதீர்கள்.
(கருடன் ஆத்திரம் )
போராட்டம் கூடாது என்று கூறும் கோழையல்ல நான். போராட்டத்திற்கு உங்களைத் தூண்டி விடுபவர்கள் புலிகள் அல்ல. புகழ் தேடும் பூனைகள் என்பதை எச்சரிக்கவே இதைக் கூறுகிறேன்... பலாத்காரமற்ற விடுதலைக் கிளர்ச்சியை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் மறுக்கமாட்டான். ஆனால் அடிப்படையில்லாத கிளர்ச்சி அடியற்ற நெடுமரமென சாய்ந்துவிடும். படாடோபம், பத்திரிகை விளம்பரம் பரந்தாமனுக்கு 'ஜே' - இந்தப் பகட்டுகளால் பாட்டாளிகளின் தலைவனாகிவிட முடியாது. (கரகோஷம்)
(கருடன் அதைவிட்டு ஆத்திரத்துடன் போய் விடுகிறான்)