காட்சி 39]
காட்சி 39·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
(பாண்டியன் நடக்கிறான் அவளுடன்)
[ஊரெங்கும் சுவர்களில் மில் வேலைநிறுத்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன ]
(மில் முதலாளி அறை]
[பரந்தாமனும் கருடனும் வர)
முதலாளி : வாருங்கள்.... உட்காருங்கள்!....
(இருவரும் உட்காராமல்)
பரந்தாமன் : அழைத்த காரியமென்ன?
(இருவரும் உட்காருதல் )
முதலாளி : ம்... இந்த வேலை நிறுத்தத்தைப்பற்றி....
பரந்தாமன் : எல்லாம் என் ஏற்பாடுதான் - நான் காட்டிய வழியில் செல்ல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தயாராயிருக்கிறார்கள்.
முதலாளி: மிஸ்டர் பரந்தாமன்! மில் தொழிலாளர்களின் கிளர்ச்சியை உங்களால்தான் நிறுத்த முடியுமென்று எனக்குத் தெரியும்.
கருடன் : சந்தேகமா அதிலே! பரந்தாமன் மாத்திரம் இல்லாவிட்டால் இந்நேரம் மில்லையே அழித்திருப்பார்கள்!
பரந்தாமன்: அதோட, தங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த இருந்தார்கள் ! நான்தான் தடுத்தேன்!
முதலாளி : சந்தோஷம் ! ரொம்ப நன்றி! என் உயிரைக் காப்பாற்றியதற்காக ! தங்களுக்கு என்னுடைய சிறிய உதவியாக இந்த ஐயாயிர ரூபாயை அளிக்கிறேன்.
பரந்தாமன் : என்ன... பணமா!
கருடன் : வாங்கிக் கொள்ளப்பா ! தொழிலாளர் நிதியில் சேர்த்துவிடலாம்! ஏழைகளுக்காக உழைக்கவே ஜென்மம் எடுத்துட்டோம்!
முதலாளி: நான் இதை லஞ்சமாக நினைத்துக் கொடுக்கவில்லை.
பரந்தாமன் : நானும் இதை அப்படி நினைத்து வாங்கவில்லை.
முதலாளி : இந்த ஸ்டிரைக்கை எப்படியாவது நிறுத்திவிடுவீர்களானால்
பரந்தாமன் : நிறுத்திவிடலாம். அதற்கு புண்யகோடியை மாற்றினால்தான் முடியும்!
கருடன்: புண்யகோடி.... அவன் மூவாயிரமாவது கேட்பான்!
முதலாளி : தருகிறேன் ! இப்போதே தருகிறேன்.
(பணம் எடுத்துத் தருகிறார்)
பரந்தாமன்: தங்களுடைய நல்ல குணத்திற்காகவும்,நம்முடைய நட்பு நீடிக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு பெரிய கிளர்ச்சியை விட்டுக்கொடுக்கிறேன்.
முதலாளி: ரொம்ப நன்றி!