காட்சி 38]

காட்சி 38·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[தெரு - இரவு

[பாண்டியன் குழப்பமுடன் நடந்து கொண்டிருக்கிறான் - அவன் குரல் மட்டும் முகத்தில் ஒலிக்கிறது]

குரல் : கல்யாணத்தன்று ஒரு பெண் ஏமாற்றிவிட்டாள். காதலுக்காக இரண்டு பெண்கள் போட்டி போடுகிறார்கள். கம்பூன்றி நடக்கும் ஒரு கிழவனின் கட்டிலறை ஒரு பெண்ணுக்கு வெட்டுப்பாறையாகப் போகிறது. வேடிக்கையும் வேதனையும் நிறைந்த பெண் சமுதாயம்!

(பாண்டியனை பூமாலை சந்தித்தல். பாண்டியன் திடுக்கிட்டு நிற்கிறான்)

பாண்டியன் : பூமாலை!

பூமாலை: (நெஞ்சடைக்க) மன்னித்து விடுங்கள் என்னை !.. உங்கள் மனதைக் குழப்பி விட்டேன்.

பாண்டியன் : நீதான் என்னை மன்னிக்கவேண்டும்! துல்யமான உன் வெள்ளை இருதயத்தில் காதல் என்னும் கரும்புள்ளி ஏற்பட நான்தான் காரணமாயிருந்தேன்

பூமாலை: காதல் கரும்புள்ளியல்ல. எட்டாத திராக்ஷை புளிக்குமா பாண்டியன்! (வேதனை)குமுதா,உங்கள் இதயம் கவர்ந்தவள் ! அவளை ஏற்றுக்கொள்ளுங்கள்!

பாண்டியன் : என் வாழ்க்கை ஒரு போட்டி மேடை! பூகம்பம்! அதில் குமுதா போன்ற பூந்தோட்டங்கள் சிக்கி சீரழிய வேண்டாம்!..

பூமாலை: இனியும் போட்டிமேடையல்ல. பூமாலை தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டாள். அதனால் பூகம்பமும் அல்ல; புது மணம் வாரிவரும் தென்றல் - குமுதா உங்களை அழைக்கிறாள், அதனால்...

பாண்டியன் : (வருத்தமுடன்) பூமாலை...

பூமாலை: (தீர்மானமாக சோகமுடன்) பாண்டியன், என் காதலை தியாகம் செய்துவிட்டேன். என் குமுதாவுக்காக!

பாண்டியன்: காதலை தியாகம் செய்ய உனக்கு மட்டுந்தானா உரிமை ? எனக்குமிருக்கிறது.

பூமாலை: வேண்டாம்- என் குமுதாவை ஏற்றுக்கொள்ளுங்கள்! அவளை ஏமாற்றி விடாதீர்கள் ! சோகத்தை சுமந்து கொள்ளும் வலிமை அவளுக்குக் கிடையாது! உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என் தவறுகளை மறந்து விடுங்கள் ! வாருங்கள் வீட்டுக்கு!

பாண்டியன்: பூமாலை...

பூமாலை : சந்தோஷமாகத்தான் அழைக்கிறேன்! கண்மணி குமுதாவின் கண்ணீரைத் துடையுங்கள் ! அவள் வாழ்ந்தால் போதும் எனக்கு ! வாருங்கள்....