காட்சி 35]

காட்சி 35·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

(தோட்டம்- மாலை

[இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் பாண்டியனிடம் பூமாலை நெருங்கி]

பூமாலை : சிந்தனைக்கு இடையூறு ஒன்றும் இல்லையே...

பாண்டியன் : இல்லை, இல்லை....

பூமாலை: எதிலே பறிகொடுத்திருக்கிறீர்கள் மனதை ! வானத்தின் அழகிலா - மேகத்தின் அசைவிலா?

பாண்டியன் : மோனத்திருக்கும் முதிர் சோலையில், கானத்தால் களிப்பூட்டும்

பூமாலை : வானம்பாடியின் வரவை எதிர்ப்பார்த்து ஏக்கமா? பாண்டியன்! சிரிக்கும் முல்லையும், சிங்காரக் கொல்லையும் உங்கள் சிந்தைக்கு விருந்தளிக்கப் போதவில்லை என்பதை உணர்ந்துதான் வானம்பாடி பறந்து வந்திருக்கிறது !

பாண்டியன்: எங்கே?

பூமாலை: தெரியவில்லை.விழியாலும் காணலாம். ஆனால் முதலில் நெஞ்சத்தால்தான் காண முயலவேண்டும்.

பாண்டியன்: (சந்தேகத்தோடு) பூமாலை .......

(சொல்லிக் கொண்டிருக்கும்போது அக்கா என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்புகிறாள். பரந்தாமன் வருகிறான்)

பரந்தாமன் : யார் இவன்?

பூமாலை: பரந்தாமா, இவர்தான் ..

பரந்தாமன் : சொல்லவேண்டாம் தெரிகிறது.இந்த அயோக்யனை வீட்டுக்குள்ளே யார் அனுமதித்தது?

பூமாலை : (கோபமாக) பரந்தாமா..

பரந்தாமன் : அதட்டாதே ! நீ செய்ததும் ஒரு நல்ல காரியம்தான் ! இவனை நான் பலநாளாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

பாண்டியன்: எதற்கு என்னைத் தேடுகிறாய்!

பரந்தாமன் : ஆ! பரிசு கொடுக்க. இந்தா பதிலுக்குப் பதில் வாங்கிக்கொள்!

(அறைகிறான்- அங்கு வந்த குமுதா பரந்தாமன் கன்னத்தில் அறைகிறாள்)

பரந்தாமன் : ஆ ...என்ன !...குமுதா!

குமுதா: முட்டாள் !

பூமாலை: (குமுதாவை அறைந்து) சீ ! வாயை மூடு.

(பல அறைகள் கொடுத்துவிடுகிறாள்)

குமுதா: சின்னம்மா ! சின்னம்மா!

(உள்ளே ஓடிப்போய் விம்மி விம்மி அழுகிறாள்- பரந்தாமன் ஆத்திரத்தோடு வெளியே போகிறான். பாண்டியன் திகைத்து நின்று மெதுவாக நகருகிறான்)

பாண்டியன்: என் வாழ்க்கை ஒரு போட்டி மேடை!...