காட்சி 36

காட்சி 36·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[ஒரு அறை

[குமுதா அழுதபடியிருக்கிறாள்]

பூமாலை: அழாதே குமுதா! (கலங்கியபடி )

குமுதா: சின்னம்மா! ! ஏன் சின்னம்மா என்னை அடிச்சே! என்மேல் ஒரு தவறும் இல்லியே சின்னம்மா !

பூமாலை: பரந்தாமனுக்கு யாரு ! நம்மைப் போலத்தானே அவனும் ! அவனைப்போயி நீ அடிக்கலாமா?

குமுதா: சின்னம்மா பாண்டியனை மட்டும் மாமா அப்படி நடத்தலாமா?

பூமாலை: அதைக் கேட்க நான் இருக்கிறேனே! அவனை எனக்கு நேராகவே

குமுதா: உனக்கு உன் தம்பி பெரிசு!

பூமாலை : உனக்கு ?

குமுதா: எனக்கு என் காதலன் பெரிசு !

பூமாலை : (திடுக்கிட்டு) காதலனா?

குமுதா: ஆமாம்! பாண்டியன் என் காதலன்!

பூமாலை : உன் காதலன்?

(விம்மியபடி வேறிடம்போய் அழுகிறாள். விரக்தியுடன்- குமுதா அவளிடம் ஓடிவந்து)

குமுதா: நான் காதலிக்கக் கூடாதா?

பூமாலை: அவர் சம்மதம் கொடுத்துவிட்டாரா?

குமுதா: இருவர் உள்ளமும் ஒன்றுபட்டுவிட்டது !

(பூமாலை அழுகிறாள்)

பூமாலை : சே ! எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன்! குமுதா

குமுதா: என்ன தவறு செய்துவிட்டாய் சின்னம்மா ? அவரை அழைத்து வந்தாயே அது தவறா? அல்லது எனக்கு அறிமுகப்படுத்தினாயே அது தவறா?

பூமாலை: அழைத்து வந்ததிலும் தவறில்லை. அறிமுகப்படுத்தியதிலும் தவறில்லை.

குமுதா : பிறகென்ன நான் அன்பு காட்டியது தவறா?

பூமாலை: அதுவுமில்லை குமுதா! கொடி படரும் கொம்பிலே செடி படர முயன்றதுதான் தவறு.

குமுதா: விளங்கவில்லையே ....

பூமாலை : விளங்க வேண்டாம் உனக்கு, விளங்கவே வேண்டாம்.

குமுதா: சின்னம்மா! எங்கள் காதலை நீங்கள் அனுமதிக்கவில்லையா?

பூமாலை: அனுமதிக்கிறேன் கண்ணே! இப்போதே உங்களிருவரையும் வாழ்த்துகிறேன்....பாண்டியன்! பாண்டியன்!