காட்சி 33] [மில்
காட்சி 33·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[போலீஸ் 'பாரா'வோடு கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பரந்தாமனின் சொற்பொழிவுக்குக் காத்திருக்கின்றனர்]
புண்யகோடி : சகோதரர்களே ! நாமெல்லோரும் வெகு ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் தலைவர் பரந்தாமன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். எல்லோரும் அமைதியாயிருங்கள் ! இன்றையதினம் புரட்சிகரமான திட்டங்கள் பல நிறைவேற்றப்பட இருக்கிறது. நாம் யாருக்கும் பயப்படப் போவதில்லை. அச்சமில்லை அச்சமில்லை அகிலமெல்லாம் எதிர்த்துவரினும் அச்சமில்லை.
கூட்டம்: ஆமாம் ஆமாம்..
(திடீரென வெடிசப்தம் கேட்கவே பொதுமக்கள் சிதறுகிறார்கள் - ஒரே அல்லோலம். அப்போது கருடன் கார் ஓட்ட, பரந்தாமன் அமர்ந்திருக்க, பழைய ஆஸ்டின் கார் அங்கு வருகிறது. அந்தக் காரின் புகைபோக்கும் கருவிதான் அந்த சப்தத்தை உண்டாக்கியதென்பது தெளிவாகிறது. பரந்தாமனும் கருடனும் வந்து மேடையில் அமர, பொதுமக்கள் அமைதி !)
புண்யகோடி: நாம் இதுவரையில் வழிமேல் விழிவைத்து ஆவலோடு எதிர்பார்த்துக்கிடந்த பாட்டாளித் தங்கம் பயமில்லா சிங்கம் -பரந்தாமன் நமது பங்கம் போக்க, இந்த சங்கத்திற்கு எழுந்தருளியுள்ளார். அவருக்கு இந்த மாலை அணிவித்து தலைமைவகிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
(ஒருவனிடம்) ஏய்...நீ ஆமோதிடா!
ஒருவன்: (நடுக்கமுடன்) பரந்தாமன் தலைமை வகிப்பதை நான் ஆ ...ஆ ..மோதிக்கிறேன்.
கருடன்: நல்லா மோதிக்கிட்டீங்க!
(மாலை போடுதல் - கைதட்டல். பரந்தாமன் மாலையைக் கழற்றாமலே பேசுகிறான்)
பரந்தாமன் : தலைவர் அவர்களே ! (ஜனங்கள் சிரிப்பது )ஓகோ, நான்தான் தலைவரோ. மன்னிக்கவும். காடு வெட்டி கழனி திருத்தி காலையிலே மாடோட்டி கலப்பை யெடுத்துச் சென்றால் மாலையிலே வீடுதிரும்பும் மனமொடிந்த பாட்டாளியும், ரத்தத்தை வியர்வைக்குளமாக்கி,சித்தம்சோர்ந்து நித்த நித்தம் உழைக்கும் பஞ்சாலைத் தொழிலாளியும், புத்தம் புதிய வாழ்வு பெறவேண்டுமென்பதே என் நோக்கம் ... ஏழைகள் பசி என்று கூறினால் என் இருதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது. அவர்கள் கண்ணீர்விட்டால் என் ரத்தமெல்லாம் கொதிக்கிறது.நம் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் அவர்களின் கொட்டமடக்க - உடனே வேலைநிறுத்தம். ஒட்டுமொத்தக் கூட்டாகப் புறப்பட வேண்டும் / வெற்றி நமதே! வெற்றி நமதே !