காட்சி 32] [கருடன் பதிப்பகம்

காட்சி 32·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[பேப்பர் பேல் கட்டு தூக்கிவந்த கூலி ஆள் ஆத்திரத்தோடு]

கூலி: இவ்வளவு பெரிய சுமை எங்கேருந்து தூக்கிட்டு வந்திருக்கேன். ஒழுங்காக காசை கொடுய்யா..

பரந்தாமன் : எட்டணாதான் அதோட மரியாதையா போ! நான்சன்ஸ்...

கூலி : ஏன்ய்யா பெரிய மனுஷன் சின்ன வார்த்தையெல்லாம் பேசுரே. நான்சன்சாம்ல ...

(பரந்தாமன் ஓங்கி இரண்டு மூன்று அடிகொடுத்தல்)

கூலி: அடிக்காதிய்யா. நான் தொழிலாளி !

பரந்தாமன் : தொழிலாளி. தொழிலாளியாம் தொழிலாளி ... ........

(கூலிக்காரன் ஓடுகிறான் வெளியே )

கருடன்: கொடுக்கிற காசை வாங்கிக்கிலேன்னா, இந்தப் பசங்களை யெல்லாம் இப்படித் தான் உதைக்கணும்.

(ஆபிஸ் பையனைப் பார்த்தல் - வாய் பொத்தி நிற்கிறான்)

பரந்தாமன்: பாட்டாளியின் குரல்! கருடா ! பேரு நல்லா அமஞ்சு போச்சில்ல. (புத்தகத்தை புரட்டியபடி)

கருடன் : பேரு மட்டுமா ! இரண்டு நாள்ள 5000 காப்பி வித்திருக்கு ! அப்றம் என்ன?

(பரந்தாமன் சிகரெட் பற்ற வைக்கிறான்.மேசையில் ''பாட்டாளியின் குரல் " - இருக்கிறது. புண்யகோடி வருகிறான்).

கருடன் : யார் நீங்க !

புண்யகோடி : தெரியலியா என்னை. நான்தான் தொழிலாளர் தலைவன். நான் ஏன் வந்திருக்கேன் தெரியுமில்ல....

கருடன் : என்னாங்க....

(கருடன் பரந்தாமன் விழித்தல்)

புண்யகோடி : தொழிலாளி சம்பளம் ஜாஸ்தியா கேட்டா, அதை சிந்திச்சு பார்க்க..

கருடன் : இல்லிங்க, அவன் சம்பளம் கேக்கிலே. இந்த பேப்பர் பேலை தூக்கிட்டு வந்தான்

புண்யகோடி : அது இல்லிங்க! நான் மில் தொழிலாளியை சொல்கிறேன்.

கருடன்: ஆமாம் ஆமாம். தொழிலாளிகள் பிரச்சினையை கவனிக்காத முதலாளிகளை சும்மாவிடக்கூடாது.

பரந்தாமன் : கருடா ! வாயால் கத்தி பயன் என்ன? பாட்டாளிகளின் குரல் பலம் பெறவேண்டுமானால், பெரிய கிளர்ச்சி நடத்தவேண்டும்..

புண்யகோடி : அப்படிச் சொல்லுங்க...

பரந்தாமன் : இந்த நாட்டின் முதுகெலும்புகள் பாட்டாளிகள். ஒரு தேசத்தின் உயிரே தொழிலாளி வர்க்கம். அதைத் துவண்டுபோக விடக்கூடாது ! நான் கங்கணம் கட்டிவிட்டேன். தொழிலாளி விடுதலைப் போராட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்.

புண்யகோடி : சபாஷ் ! சபாஷ் ! தங்களைப்போன்ற உண்மையான உறுதி படைத்த வாலிபர்கள் இருந்தால் உலகத்துக்கே ஒரே நாளில் விமோசனம் பிறந்துவிடும். தாங்கள் எழுதிய பாட்டாளியின் குரல் படிக்கும்போது, படுகிழவனையும் பாலகனாக்குகிறது. கோழையையும் புலியாக்குகிறது. நாளையதினம் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு தாங்கள் தலைமை வகித்தாக வேண்டும்.

பரந்தாமன்: தலைமையா? நானா! வேண்டாம் நான் பொதுஜனத் தொண்டன்.

புண்யகோடி: இல்லை தம்பி ! அப்படிச் சொல்லக்கூடாது ! ஆயிரக்கணக்கான தொழிலாளரும் விரும்புகிறார்கள்.

பரந்தாமன் : தொழிலாளர் என் தோழர்கள் ! அவர்கள் அன்புக்கட்டளையை நிறைவேற்றுகிறேன். இனி இந்த உலகத்தில் தொழிலாளி நினைத்ததெல்லாம் நடக்கவேண்டும்.

கருடன்: ஆமா ...ஆமா .

(ஆபீஸ் பையன் கருடனிடம் கையை நீட்டி)

பையன்: சம்பளம் ஜாஸ்தியா .

கருடன் : சீ போடா! பெரிய உலக விஷயம் பேசிட்டு இருக்கும்போது...

புண்யகோடி: அப்ப நான் வர்ரேங்க...

பரந்தாமன்: நமஸ்காரம்.

புண்யகோடி: (கருடனிடம்) நான் வர்ரேங்க!