காட்சி 30] [பூமாலை வீடு- பகல்

காட்சி 30·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

(பையன் அழுதல்)

[பாமாவின் தந்தை குணரத்னம் பூமாலையிடம் தன் மகளைப்பற்றி வருத்தமுடன் கூறிக்கொண்டிருக்கிறார்]

குணரத்னம் : அவள் மாத்திரமா போனாள்.வீட்டை அடமானம் வச்சு, செஞ்சுப்போட்ட ஆயிரம் ரூபாய் நகையோடவும் போய்ட்டா!

பூமாலை: ஆயிர ரூபாய் நகைதானே.இந்தாருங்கள்... (தன் அணிகலன்களைக் கழற்றிக்கொடுத்து) இதை வைத்துக்கொள்ளுங்கள். (கொடுக்கிறாள்)

குணரத்னம் : (அதை வாங்கி) ஏன்? இதை நான் யாருக்குப் போட்டு அழகு பார்க்கப் போகிறேன். நீயே வச்சுக்க. (கீழே போட்டுவிட்டு) எனக்குத் துரோகம் பண்ணுனவுங்க தொலைஞ்சு போய்டுவாங்க !...

(போகிறார். பூமாலை சோர்ந்து சோபாவில் உட்காருகிறாள். பரந்தாமன் வந்து கீழே கிடக்கும் நகைகளைப் பார்த்து)

பரந்தாமன்: அக்கா. இது ஏது நகை?

(பூமாலை மௌனம்)

பரந்தாமன் : ஏன் இப்படிக் கீழே கிடக்கிறது. (எடுக்கிறான்) எல்லாம் பொன்னகைதானே?

பூமாலை: இல்லை. துரோகத்தின் புன்னகை !

பரந்தாமன்: (புரியாதவன்போல) என்னடா இது ! என்னக்கா விஷயம்?

பூமாலை: மான் தோலிலே வேங்கை அதிக நாள் வாழமுடியாது பரந்தாமா ! அதையும் வேட்டையாட ஒரு வேடன் வந்துவிடுவான். ஊர்ப் பெண்களிடம் விளையாடுகிறவர்களை உயிரோடு விடுவதில்லை மக்கள் !... அதை ஞாபகம் வைத்துக்கொள்!

பரந்தாமன்: எப்போது வீட்டுக்கு வந்தாலும் இந்த ஒப்பாரிதானா ? மனிதன் நிம்மதியா வாழவே முடியாது போலிருக்கிறது!

பூமாலை: மனிதன் தான் மாத்திரம் வாழக்கூடாது. மற்றவரையும் வாழவிட வேண்டும்!

பரந்தாமன்: சரி போதும் போதும். காவியாடை கட்டிக்கொண்டு எங்கேயாவது தொலைய வேண்டியதுதான்.

பூமாலை : ஏன் ! அந்தத் திரைமறைவிலே சுலபமாக ஏமாற்ற முடியுமென்று கருதுகிறாயா? பெண் இனத்தை மண்ணில் நெளியும் புழுக் கூட்டமாக மதித்துவிட்ட பித்தனே ! எங்கு போனாள் பாமா? சொல். எங்கே அவளைத் தவிக்கவிட்டாய்? எரிமலைமீது விளையாட வந்த அந்த ஏழைச் சிறுமியின் கதி என்னவாயிற்று. சொல்! சொல்ல மாட்டாயா பாவி ! எங்கே பாமா?

பரந்தாமன் : பரலோகத்தில் போய் தேடிப்பார் !

(போய்விடுகிறான்)

பூமாலை: (கண்ணீர் பெருக) ஆ ! அம்மா ! அப்பா ! உங்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை என்னால் காப்பாற்ற முடியாது போலிருக்கிறதே!