காட்சி 17] [பாமா அறை—இரவு
காட்சி 17·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பாமா சோகப் பதுமையாக அமர்ந்திருக்கிறாள், மறுநாள் நடைபெற இருக்கும் மண விழாவை நினைத்து கதவு தட்டப்படுகிறது. பாமா போய் கதவைத் திறக்கிறாள். பரந்தாமன் வருகிறான்]
பரந்தாமன் : பாமா!
(பாமா திடுக்கிடுகிறாள்)
பாமா: இது என்ன அக்ரமம். எனக்கொன்றும் புரியவில்லையே போய்விடுங்கள் தயவு செய்து...
பரந்தாமன் : ஸ்...சத்தம் போடாதே ! தூங்குபவர்கள் விழித்துக் கொள்வார்கள். பாமா என்னைப் பார்! பார்க்கமாட்டாயா..... ஏன் பாமா என்னை இப்படி ஏமாற்றினாய்...
பாமா : ஏமாற்றுவது எனக்குத் தொழிலல்ல.
பரந்தாமன் : சரிதான்... கல்யாண தினத்தன்று காணாமற் போய்விட்டானே காதலன். எங்கே போனான். என்ன ஆனான். என்பதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல், அடுத்த காதலனை அவசரமாகத் தேர்ந்தெடுத்த நீ....எதுவும் தெரியாத பேதை ! நான் ஏமாற்றுக்காரன்—அப்படித்தானே...
பாமா: எங்கே போனீர்கள். இந்த லோகத்தைவிட்டு சொர்க்க லோகத்துக்கா?....
பரந்தாமன் : சொர்க்கலோகம் போனாலும், அங்கே சொக்க வைக்கும் திலோத்தமை, மயக்குமொழி மேனகா அத்தனை பேரையும் உதறித் தள்ளிவிட்டு உன் சுந்தர முகத்தை நினைத்தபடி ஆகாயத்திலிருந்து குதித்திருப்பேனே, ஒரு சூனியக்கார லோகத்துக்குப் போய்விட்டேன் பாமா! ஒரு சூனியக்காரன் ஏமாற்றி விட்டான் பாமா!
பாமா : என்ன சொல்கிறீர்கள்!
பரந்தாமன் : யாரோ ஒரு மந்திரவாதி.... சாப்பிடுவதற்கு ஒரு காயகல்பம் இருக்கிறது. சாப்பிட்டால் எண்பது வயது வரையில் இளமை மாறாது என்றான். நம்பினேன், சாப்பிட்டேன். உனக்கும் வாங்கிவர எண்ணினேன். அவன் என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டான். என்னிடமிருந்த பத்தாயிர ரூபாயையும், உனக்காக நான் வாங்கிய வைர மாலையையும் திருடிக்கொண்டு எங்கேயோ போய்விட்டான்.
பாமா : போலீஸாருக்குச் சொல்லவில்லையா
பரந்தாமன்: இந்த வெட்கக்கேட்டை எப்படி வெளியில் சொல்வது ! மனமொடிந்து அலைந்து திரிந்து இங்கு வந்தேன். வந்தால், நீ வாழ்க்கைக்கு வேறு திட்டம் போட்டுவிட்டாய்... பாமா! நான் ஏமாற்றப்பட்டவன்தானா? அந்த மந்திரவாதியைவிட நீ பெரிய ஏமாற்றுக்காரியாகி விட்டாய், பாமா....
பாமா: (பரந்தாமனின் காலைப்பிடித்துக் கொண்டு விம்மியபடி) மன்னித்துவிடுங்கள் என்னை. அப்பாவின் ஆத்திரத்தை என்னால் எதிர்க்க முடியவில்லை.
பரந்தாமன் : பொழுதுவிடிந்தால் உனக்குத் திருமணம். வேறொருவன் மனைவி! உன்னை மன்னிக்க நான் யார்!
பாமா: என்னைக் காப்பாற்றுங்கள். இப்போதே அப்பாவிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடலாம்....
பரந்தாமன்: நிறுத்த மாட்டார். நம்முடைய காதல் நீடிக்க, ஒரே ஒரு வழிதானிருக்கிறது.
பாமா: என்ன வழி (அழுகிறாள்).
பரந்தாமன்: அழாதே ! அன்புக்கரசி ! அழகுமணி மாளிகையின் அலங்காரத் திருவுருவே. அழித்தெழுதா சித்திரமே—ஆடிவரும் பொன் விளக்கே ! கட்டாணி முத்தழகி ! கண்கவரும் ரத்தினமே ! உன் கண்ணில் நீர் என்றால், என் உள்ளம் கலங்குதய்யோ! அழாதே பாமா !.... அழாதே!
பாமா: நாம் வாழ வழி சொல்லுங்கள்.
பரந்தாமன்: வாழ வழி ! இப்போதே இருவரும் வெளியேறி விடுவதுதான்....
பாமா : ஆ
பரந்தாமன் : தங்கமே கேள் ! தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி வை. “திருமணம் பிடிக்கவில்லை—வெளியேறி விட்டேன்” என்று சிந்தைக்கினியவளே! சிங்கார மயிலே.... உம் சீக்கிரம் ... எழுது கண்ணே ! என் எழுதாத ஓவியமே எழுது !