காட்சி 5[ [கருடன் பதிப்பகம், கோவை—முன் இரவு

காட்சி 5·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[கட்டப்பட்ட பார்சல்கள், புக்போஸ்டுகள்மீது பதிப்பகத்தின் ரப்பர் ஸ்டாம்பு குத்தப்படும் சப்தம் டக் டக் என்று கேட்டபடி இருக்கிறது] கருடன் : (ஆபீஸ் பையனிடம்) பையா...உம்...பார்சலுக்கு நேரமாச்சு புறப்படு...புறப்படு. பாக்கி நாளைக்கு அனுப்பலாம். (‘டக் டக்’ என்று தட்டும் சப்தம்) கருடன் : யாரு? உள்ளே வாருங்க. (உள்ளே பாண்டியன் வருகிறான்) கருடன் : யாரு...எங்கேயோ பாத்தமாதிரி....(சந்தேகமாய்) பாண்டியன் : (கோபமாய்) மறந்திருப்பீர். நான்தான் பாண்டியன். ஞாபகமிருக்கிறதா? (தன் கையிலுள்ள நூலைக் காட்டி) இந்தப் புத்தகத்தின் உண்மையான ஆசிரியர்...... கருடன் : சே சே...இதற்கு ஆசிரியர் பரந்தாமன் என்று அட்டையிலே போட்டிருக்கிறதே ! பாண்டியன்: அச்சு யந்திரத்திற்கு என்ன தெரியும் நீங்கள் செய்யும் அநியாயம். சிந்தித்து சிந்தித்து செந்நீரையெல்லாம் வியர்வையாக்கி சிரமத்தை சுமந்து பலநாள் பாடுபட்டு எழுதிய எனக்கல்லவா தெரியும் இது யார் எழுதியதென்று. கருடன் : இல்லை பரந்தாமன். பாண்டியன் : யாரது பரந்தாமன்? குரல் : பக்தா! பரந்தாமன்: ஏன் ஆத்திரப்படுகிறாய்? பதறுகிறாய்-பரந்தாமனை அழைத்த விஷயமென்ன? யார் இவன்? கருடன்: பாண்டியனாம் . பரந்தாமன் : யார் அவன்! பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனா? ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனா? போர்க்கருவி எதுவுமின்றி புகுந்த பாண்டியன் நீ யாரப்பா? பாண்டியன் : நானா? எழுத்துத் திருடனை சந்திக்கவந்த இல்லற ஜோதியின் உண்மை ஆசிரியர் பாண்டியன் .. பரந்தாமன் : ஹ... ஹ... ஹ... இல்லற ஜோதிக்கு நீ ஆசிரியனா? புத்தகத்திற்கா?... சபாஷ்!...சபாஷ்!... பாண்டியன் : அச்சியற்றுவதாக என்னிடத்திலே வாங்கி அயோக்கியத்தனம் செய்துவிட்டு, சிரித்து மறைக்கிறீர்களா; திருடர்களே. எழுத்தைக் களவாடிப் பிழைப்பதைக் காட்டிலும், கழுத்திலே ஒரு கயிறு மாட்டிக்கொள்ளலாமே. பரந்தாமன் : மரியாதையாகப் போகமாட்டாய் நீ !... பாண்டியன் : சீ... பேசாதே ! (பரந்தாமனின் கன்னத்தில் அறைகிறான்) மரியாதை வேறு மானங்கெட்டவர்களுக்கு! இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்? ஊரான் எழுத்தைச் சுரண்டிச் சாப்பிட. பையன் : அது பலபேரு கிளம்பியிருக்காங்க ... போய்யா. கருடன்: (பையனிடம்) சீ முந்திரிக்கொட்டை ... (பரந்தாமன் ஆத்திரமுடன் மேஜையிடம் ஓடி, மேஜையைத் திறந்து ரிவால்வரை எடுக்க,கருடன் தடுக்கிறான்)

கருடன் : ஸ்...சும்மா யிரு ! அப்புறம் கம்பி எண்ணனும்... நல்ல வேலை செஞ்ச ... (என்று ரிவால்வரை வாங்கி டிராயரில் வைத்து மூடிவிட்டு பையனிடம்) ஏ பையா ! சூடா ஒரு கப் காபி கொண்டாந்து கொடு. பரந்தாமன் : விடக்கூடாது .. (பையன் போதல்) கருடன்: (கம்பீரமாய்) ஆமாம் விடக்கூடாது ! பரந்தாமன் : ஏய் நான் அடிபட்டதை வெளியில் விடக்கூடாது! கருடன் : அது சரி... நான் அப்பவே சொன்னேன். பிறத்தியான் எழுதினதை உன் பேரால் போடவேண்டாமென்று - இப்ப பஞ்சணை புத்தகம் எழுதியிருக்கே ! அதுக்கு இருக்கிற மதிப்பு...இல்லற ஜோதிக்கு இருக்குதா ? ஏன் வீண் வம்பு அநாவசியமா. அடாடா ... பஞ்சணையைப்பத்தி லெட்டர்கள் வந்திருக்கு ... யார் அந்தத் துறவி என்பவர். அவரைப் பார்க்க முடியுமா ? போட்டோ இருக்கா? அவர் வரகவியா, சுய கவியா ? அவர் கையிலே பேனா இருக்கிறதா, மன்மதனின் வில்லே இருக்கிறதா ? பேனாவிலே மை இருக்கிறதா, அல்லது கருப்பஞ் சாறே இருக்கிறதா? இப்படியெல்லாம் உன்னை வர்ணிக்கிறார்கள். இல்லற ஜோதியை அப்படி வர்ணிக்கவும் இல்லை. அது நிறைய விக்கவும் இல்லை. பரந்தாமன் : வியாபாரமாகாவிட்டாலும், இல்லற ஜோதி எனக்கு ஒரு இன்பமான ஜோடியை அளித்திருக்கிறது.