காட்சி 2] [பூமாலை வீடு—காலை நேரம்
காட்சி 2·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பூமாலை ஏழெட்டு குழந்தைகளுக்கு பாட்டு மூலமாக நீதி போதனைப் பாடம் சொல்லித்தருகிறாள்]
பூமாலை: நாளைக்கு காலையிலே வந்துடணும்...
(குழந்தைகள் போகின்றன)
பரந்தாமன்: (தூங்கியெழுந்த சோம்பலுடன் வந்துகொண்டே) ஆமாம் காலையிலே வந்துடுங்க! மனுஷனை தூங்கவிடாமல் கத்தலாம்...
பூமாலை: கத்தலா இது! கற்கண்டைவிட இனிப்பாயிற்றே மழலை மொழி!
பரந்தாமன்: அக்கா! இதெல்லாம் எனக்குப் பிடிக்கிலே! பஞ்சத்திலே அடிபட்டதையெல்லாம் இங்கே ஏன் கூப்பிடுறே? எங்கயாவது தர்மப் பள்ளிக்கூடத்துக்குப் போகட்டுமே...
பூமாலை: எனக்குப் பொழுதுபோக வேண்டும் தம்பி!
பரந்தாமன்: பணக்கார வீட்டுப் பெண்களுக்கு பொழுதைக் கழிக்கவா வழியில்லை? பல வழியிருக்கு! பேட்மிட்டன், பிங்பாங், லேடீஸ் கிளப், இங்கிலீஷ் பிக்சர், So many entertainments.
பூமாலை: பல வழியிருக்கலாம் தம்பி! ஆனால் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டாமா?
பரந்தாமன்: சரி...உன் இஷ்டம்! இனிமே இந்த வீட்டுக்கு படுக்க வர்ரதே தப்பு! நமக்கு சத்திரம் சாவடியா இல்லை.
பூமாலை: தம்பி அப்படியெல்லாம் சொல்லாதே! கடல் போல வீடு இருக்கு!
பரந்தாமன்: நல்லா இருந்ததுபோ! அக்கா! பணம் எதுக்காக இருக்கு...அனுபவிக்க—வாழ்வு, சுகம், பணம்—எல்லாமே மூன்று எழுத்து.
பூமாலை: அன்பு, தொண்டு—அதுகூட மூன்று எழுத்துத்தான், பரந்தாமா வாழ்வு தேவைதான். ஆனால் மற்றவர்களுக்காக வாழ்கிற வாழ்வு—சுகம் வேண்டியதுதான்—பிறருடைய ஆனந்தத்திலே ஏற்படுகிற இதய சுகம் .... ... ...
பரந்தாமன்: ஊம் கும். கூடிய சீக்கிரம் இந்த வீடு ஒரு ஆஸ்ரமமா ஆயிடும்.
(கடுகடுப்புடன் போகிறான். பாமாவின் பெற்றோர் வருகின்றனர்.)
பூமாலை: யாரு ... ... ஓ ... ... வாங்க வாங்க! உக்காருங்க! குண்டுமணி! டீ கொண்டுவா!
(எல்லோரும் உட்காருகின்றனர்.)