காட்சி 1] [கோர்ட்

காட்சி 1·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[வக்கீல் பேசிக்கொண்டிருக்கிறார்]

வக்கீல்: கொலை செய்தது பூமாலைதான் என்று பத்திரிகைகளில் வந்த செய்தி தவறானது! புலன் விசாரணைக்குப் பிறகு, வழக்கின் உருவமே மாறியிருக்கிறது. கொலை செய்யப்பட்டவரை பூமாலை கொன்றிருக்கவேண்டிய அடிப்படை காரணங்கள் எதுவுமே இல்லை. (பூமாலை காட்டப்படுதல்) கொலை செய்யப்பட்டவரின் பரம விரோதியாக ஆதிமுதல் இருந்தது பாண்டியன்தான். (பாண்டியன் காட்டப்படுதல்) குடும்ப விவகாரங்களிலும் சரி, பொதுவாழ்க்கையிலும் சரி இருவருக்கும் பல நாட்களாகவே பகை வளர்ந்திருக்கிறது. இந்தப் பகை வெறியாக மாறி கொலையில் முடிந்திருக்கிறது!

பூமாலை: இல்லை. பாண்டியன் நிரபராதி! அவர் கொலை செய்யவில்லை—கொலை செய்யவில்லை. நானேதான் கொலை செய்தேன்.

(நீதிபதி மேஜையைத் தட்டுதல் Silence)

வக்கீல்: பூமாலை கொலைக்குற்றத்தை தானே ஏற்றுக்கொள்வது பாண்டியன் மீதுள்ள அன்பின் காரணமாக. பாண்டியனைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக.

பூமாலை: இல்லை இல்லை. நீதிபதி அவர்களே! பாண்டியனுக்கும் இந்தக் கொலைக்கும் சம்மந்தமே இல்லை. தயவுசெய்து என் குடும்ப வரலாறு முழுவதையும் கேளுங்கள்!......

நீதிபதி: இந்தக் கொலை வழக்கிற்கும், உன் குடும்ப வரலாற்றுக்கும் என்னம்மா தொடர்பு!

பூமாலை: நிறைய இருக்கிறது! இந்த வழக்கிற்கு ஆதரவாக அந்த வரலாறு மட்டுமல்ல, ஆஸ்பத்திரி வாட்ச்மேன், மில்

முதலாளி முதலிய சாட்சிகளுமிருக்கிறார்கள். அவர்களையும் விசாரியுங்கள்! முதலில் என் கதையைக் கேளுங்கள்!

நீதிபதி: சொல்லு!...

பூமாலை: எங்கள் குடும்பம் இருந்தது கோயமுத்தூர்! அங்கே ஒரு புத்தக நிலையம் இருந்தது! அதன் பெயர் கருடன் பதிப்பகம். அங்கேதான்!...