களஞ்சியப் பகுதி 55
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—★— சமரசம்: ராணி...ராணி...அய்யா! ஞான: யாரு?... சம: ராணி எங்கே?...நான் சமரசம். ஞான: சமரசமா?...அய்யா, கேட்டீங்களா சேதியை...? சம: என்ன? ஞான: என் குடும்பத்துக்கு களங்கம் வந்துடுச்சி... சம: என்னது?... ஞான: ராணி மோசம்போயிட்டா. சம: அய்யா...என்ன சொல்றீங்க? ஞான: யாரோ ராசாவாம்...அவனோடே சேர்ந்து...மானமா வாழ்ந்த என் குடும்பத்திலே மாறாத அவமானத்தை உண்டாக்கிட்டா...என் கௌரவமெல்லாம் மண்ணோட மண்ணுப் போச்சு... சம: அய்யோ—ராணியே மண்ணாபோக பாக்கிறா! விஷம் சாப்பிட்டு சாகப்போறதா இதோ பாருங்க கடுதாசி எழுதி இருக்கு... ஞான: ஆ! ராணி...! [“ராணி” என்று முட்டி மோதிக்கொண்டு உள்ளே போகிறார்.] ஞான: ராணி...ராணி...எங்க என் ராணி...? சம: பெரியவரே! இனி உம்ம கதறல்...அந்த பொண்ணு காதிலே விழவே விழாது... ஞான: அய்யோ! இப்படியெல்லாம் வரும்னு தெரிஞ்சா உன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பேனே அம்மா. சம: இப்ப சொல்லி என்ன பிரயோசனம்...? ஒண்ணும் பிரயோசனமில்லை...ம்...ஒப்பாரி வச்சு அழுவுறதுக்காகவே உயிரோடு இருக்கிறவங்களைக் கொல்றது...உலகத்துக்கே பழக்கமாப் போச்சே! [ராஜா வருகிறான், வேகமாக.] ராஜா: ராணி...ராணி...அய்யா! ராணி எங்கே...? ராணி...ராணி... சம: பதறாதே ராஜா...காரியம் எல்லாம் தீந்தது...உன் காதல் கைகூட முடியாத கனவாகவேப் பேச்சு!... ராஜா: அய்யா! என்ன சொல்றீங்க? பெரியவரே, என் ராணி எங்கே? சம: பெரியவரும் நீயும் சேர்ந்துதான்...ஒரு பெண்ணைப் பிணமாகவே ஆக்கிட்டீங்களே! சாவிலும், வாழ்விலும் பிரியமாட்டோம்னு சத்தியம்செய்யறது; சபதம் போடுறது; கடைசியிலே, கன்னிப் பெண்களை...இப்படி விஷம் சாப்பிட்டு சாக வைக்கிறது—காதல் ஒங்களுக்கு ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாப் போச்சு!...ம்...போ...போய் பாரு உன் காதலியை! போ!...போ!... [கதவை உடைத்து உள்ளே போகிறான். ராணி கீழே விழுந்து கிடக்கிறாள்.] ராணி...ராணி... ராணி...எங்கிருந்தோ வந்தாய், என் இருதயச் சோலையிலே கானம் பாடும் வானம்பாடியாய்; களிப்பிலாடும் அழகு மயிலாய்; துள்ளும் மானாய்; கொஞ்சும் கிளியாய்...பறந்தாய்...திரிந்தாய்...என்னைப் பரவசமடையச் செய்தாய்...கடைசியில் என்னை அழைக்காமலேயே, உன் பயணத்தைத் தொடங்கிவிட்டாய்!... பழத் தமிழ் பேசும் பதுமையே; சுவைக் கனியே! சுந்திர நிலவே! காதற் கவிபாடி என் கனவிலெல்லாம் சதிராடும் கண்ணழகி! கடைசியாக நீ என்ன நினைத்து உயிர்விட்டாய்? என்னை நினைத்தா?...இந்தப் பாவியின் இரக்கமற்ற பேச்சை நினைத்தா?...என் கோகிலமே! குற்றமற்ற உன்மீது சீறி விழுந்த எனக்கு இப்படியா நீ தண்டனை தரவேண்டும்...? இந்த மனிதத்தன்மையற்றவனை மன்னிக்கும் பெருந்தன்மை, என் மரகதமே! உன்னோடு பிறக்காமலா போய்விட்டது...? பிறக்காமலா போய்விட்டது? அய்யோ! இந்தக் கொடுமைகளைப் பார்க்காமல், நாடக மேடையிலேயே என் கண்ணை மூடியிருப்பேன். அதையும் நீங்கள் தான் கெடுத்து விட்டீர்கள்...அதையும் நீங்கள் தான் கெடுத்துவிட்டீர்கள்... அய்யா! பெரியவரே!...ராணி கல்யாணமாகாதவள்! மழலைப் பருவத்திலே நீங்கள் நடத்தியது கல்யாணமல்ல; மரப் பொம்மை விளையாட்டு! ராணி என் மனைவி...என் வாழ்க்கைத் துணைவியென்று நான் வாயார—மனமாரச் சொல்லி அழுவதற்கு அனுமதி தாருங்கள்...அனுமதி தாருங்கள்...மறுமணத்திற்குச் சம்மதித்தீர்கள் என்பதற்கு அறிகுறியாக அவள் பிணத்துக்கு நான் மாலையிட உத்திரவு கொடுங்கள்...உத்திரவு கொடுங்கள்...ஏன் பேசாமல் இருக்கிறீர் பெரியவரே—ஏன் பேசாமல் இருக்கிறீர்? ராணி...ராணி...உன் அழகு விழிகளைத் திறந்து என்னை ஒரு முறை பார் ராணி! நான் உன் கழுத்திலே மாலையிட்டு உன்னை மனைவி என்று அழைக்கப் போவதை ஒருமுறை பார்த்துவிட்டு, அமுது கசியும் உன் இதழ் திறந்து ‘அத்தான்’ என்று என்னை ஒருமுறை அழைத்துவிட்டு, பிறகு செத்துவிடு ராணி! ராணி! [ராஜா திடுக்கிட்டு திரும்புகிறான்.] சமரசம் குரல்: பக்தா, பயப்படாதே! எழுந்திரு! ராணி உன் இஷ்டம்போல் சிறிது நேரம் உயிரோடிருந்து விட்டு பிறகு இறந்துபோக வரம் தந்தோம்... ராஜா: நீங்க என்ன சொல்றீங்க? எனக்கொன்னும் புரியலியே? சமரசம்: ராணி எழுந்திரு. (ராணி எழுந்திருக்கிறாள்.) ஞான: என்ன, ராணி உயிரோடவா இருக்கு? சம: ஆமாம்! ஏன் திகைக்கிறீங்க?...இல்லே தெகப்பானேன்னு கேக்கிறேன்...ராணி உயிரோடதான் இருக்குது...சாகப்போன ராணியை நான் எப்படி காப்பாத்தினேன் தெரியும்ல...ராணி விஷத்தை எடுத்து சாப்பிடப் போச்சு...நல்ல வேளையா அந்த நேரத்திலே நான் வந்தேன்.