களஞ்சியப் பகுதி 53
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—★— (மனப் போராட்டம்) (விஷக் கிண்ணத்துடன் ராணி) ஞானக்கண் குரல்: இந்த அப்பன் உனக்கு வேண்டுமானால் உன் மனதில் உள்ள கல்யாண ஆசையை விட்டுவிடு. கன்னிப் பெண்ணாகவே வாழு. ராஜாவின் குரல்: நீலிக்கண்ணீருக்கு இளகிவிடும் நெஞ்சம் எனக்குக் கிடையாது பாபு. சாந்தம்மா: ஏம்மா மின்னல் கொடி. மாயப்பொடி தூவுறியா மாயப்பொடி. ஞான: ராணி, “விதவையென்று தெரிந்தால் நீ யாரைக் காதலிக்கிறாயோ அவன் கூட உன்னை விரும்பமாட்டான்; அவன் கூட உன்னை விரும்பமாட்டான்....” ராஜா: நீ விதவை என்பதைப்பற்றிக்கூட எனக்கு கவலையில்லை. ஆனால் இத்தனை நாள் என்னிடம் அதை மறைத்து வைத்து என்னை ஏமாற்றி இருக்கிறாய் பார். அதை யாராலும் மன்னிக்க முடியாது யாராலும் மன்னிக்க முடியாது. ஞான: நீ விதவை. ராஜா: விதவை. சாந்: வித்தாரக்கள்ளி! விநாசகாரி பல குரல்கள்: விதவை! விதவை! விதவை! விதவை! புழுதியிலே வீசப்பட்ட வீணை! சிதைந்துபோன இசை! சிதறிவிட்ட சிலை! கசங்கிய மலர்! கருகிய மொட்டு! கலைந்துவிட்ட ஓவியம்! கைம்பெண்! கைம்பெண்!