களஞ்சியப் பகுதி 52

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

★ சிறை ★ சாக்ரடீஸ்: அன்புள்ளவளே! பார்த்தாயா? பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தைக் கழிக்கிறேன், தர்க்கவாதம் புரிந்து தொல்லைப்படுகிறேன் என்றெல்லாம் கோபித்துக்கொண்டாயே! இப்போது பார்—உன் கணவன் அகிலம் புகழும் வீரனாய், தேசம் புகழும் தியாகியாய் மாறிவிட்டான்... எக்ஸேந்துபி! நீ பாக்கியசாலிதான்! படைபலம் பணபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்கும் பணியாத பெருமையோடு விழிகளைக் கடைசியாக மூடப்போகும் கர்மவீரனுக்கு நீ மனைவி...குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்...அவர்கள் பெரியவர்களாக மாறி நேர்மை தவறி நடந்தால்—நான் உங்களைத் திருத்த முயன்றதுபோல், நீங்களும் அவர்களைத் திருத்த முயலுங்கள்...நேரமாகிறது, காவலர்கள் கோபிப்பர். கிரீட்டோ! இவர்களை அனுப்பிவை... [அவள் போனபிறகு] கிரீட்டோ! உனக்குத் தெரியுமல்லவா?...முப்பது நாள் சிறை வாழ்வு இன்றோடு முடிந்து—நீதிமன்றத்தின் உத்திரவுப்படி விஷம் சாப்பிட்டு சாகவேண்டிய நன்னாள் இன்றுதான்... கிரீட்: அருமை நண்பா! மலை குலைந்தாலும் மனங்குலையாத மாவீரனே! உன் ஒளிவீசும் சுழற்கண்களை—துடிக்கும் அகன்ற புருவங்களை—தொகை தொகையாகப் பகைவரினும்—துவளாது தத்துவ விளக்கம் கொட்டும் உணர்ச்சிமிக்க உதடுகளை இனி ஒரு சாக்ரடீஸின் உருவத்திலே நான் காணப்போகிறேனா? [காவலன் விஷக்கிண்ணத்துடன் வருகிறான்.] சாக்: அழாதே நண்பா! அதோ வந்துவிட்டது அமுதம்! சிறைக் காவல. இதை என்ன செய்யவேண்டும்? முறைகளைச் சொல்லு. காவ: பெரியவரே. விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்குமங்கும் நடந்துகொண்டே இருக்கவேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரையிலே அப்படி நடக்க வேண்டும்—பிறகு உட்காரலாம்—கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டுக்கொண்டே வரும்—பிறகு படுத்துவிட்டால்— சாக்: ஆனந்தமான நித்திரை—கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை. சிறைக்காவல, கொடு இப்படி... [விஷக் கிண்ணத்தை வாங்குகிறான்.] கிரி: நண்பா. சிறிதுநேரம் பொறுத்துக்கூட சாப்பிடலாம்... சிறைச்சாலையிலே அதற்கு அனுமதி உண்டு. சாக்: கிரீட்டோ. உனக்கு மிகமிக அற்ப ஆசை. விஷத்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்துக்கொள். அதற்குள் திடீர் என்று இருதயம் வெடித்து நான் இறந்துவிட்டால் கிரேக்கநாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை எப்படி நிறைவேற்றுவது? புதிய சாக்ரடீசா பிறந்து வருவான்...? கிரீட்டோ, இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல—என் உடல்... கிரி: ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே. எங்கள் தங்கமே. கிரேக்கப் பெரியாரே. எம்மையும் உம்மையும் இந்த விஷம் பிரிக்கப்போகிறதா? அய்யகோ. நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறதே... நண்பா, கடைசியாக எனக்கு ஏதாவது சொல்லு... சாக்: புதிதாக என்ன சொல்லப் போகிறேன். உன்னையே நீ அறிந்துகொள். எதையும், ஏன், எப்படி எதற்காக என்று கேள்—அப்படிக் கேட்டதால்தான் சிலை வடிக்கும் இந்தச் சிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறினான். அவர் சொன்னார்—இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்... எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். இதைத்தான் உனக்கும், இந்த உலகத்துக்கும் சொல்ல விரும்புகிறேன்... கிரிட்: சாக்ரடீஸ். உனது பிணத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும்?... சாக்: புதைப்பதாயிருந்தால் இந்த நாட்டில் உலவும் புழுகு மூட்டைகளையும் என்னோடு போட்டுப் புதைத்து மண்ணாக்கிவிடு. எரிப்பதாயிருந்தால் ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்து சுட்டுச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்துவிடு. விடைகொடு, விஷம் அழைக்கிறது. என் தேசத்துப் பெருமக்களிடம் விடைபெற்றுக்கொள்ளப்போகிறேன்... எனதருமை ஏதன்சு நகரத்துப் பெருமக்களே.... இதோ, சாக்ரடீஸ் சந்தோஷமாக சாகப்போகிறான். கிரேக்க நாட்டு நீதிமன்றம் கூடைக் கணக்கிலே அவன் மீது குற்றங்களைக் கொட்டி, கோப்பை நிறைய நஞ்சையும் கொடுத்து, பருகடா இந்த உயிர் பருகும் பாயசத்தை என்று கட்டளையிட்டிருக்கிறது—விஷக் கிண்ணத்தின் விளிம்பிலே, உபதேசங்களை உதிர்த்த இந்த சாக்ரடீசின் உதடுகள் “பதியப் போகின்றன,... இன்னும் ஓரிரு வினாடிகள். அதன் பிறகு சாக்ரடீஸ் என்று அழைக்கப்படும் இந்த உடல், உயிர், எல்லாமே அதனதன் தொடர்பை அறுத்துக்கொண்டு வாழ்க்கைத் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். வருகிறேன் கிரேக்கமே. வருகிறேன்... எனதருமை ஏதென்சுநகரமே. வருகிறேன். நான் ஆடியோடி ஆவேசமாகப் பேசுவதற்குத் துணைபுரிந்த ஏதென்சுநகரத்து எழில்வீதிகளே. வீதியோரத்து மர நிழல்களே! வீட்டோரத்துத் திண்ணைகளே! உங்கள் அனைவரிடமிருந்தும் இந்தக் கிழவன் விடை பெறுகிறான்! பீடு நடையும் பெருமித நோக்கமும் கொண்ட இளைஞர்களே. நாடு காக்கும் நல்ல தம்பிகளே. பேரன்பு கொண்டோரே பெரியோரே, என் பெற்ற தாய்மாரே. நல் இளஞ் சிங்கங்காள். உங்கள் அனைவர்க்கும் சாக்ரடீசின் இறுதி வணக்கம் உரியதாகுக... இந்தக் கிழவன் கிரேக்க இளைஞர்களைக் கெடுத்ததாக யாராவது உண்மையாக, உளமாற நினைத்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும். மன்னிக்கட்டும்... வருகிறேன், வணக்கம். ஏ, ஜெகமே. சிந்திக்கத் தவறாதே. உன்னையே நீ எண்ணிப்பார். உன்னையே நீ எண்ணிப்பார்.... [விஷம் குடிக்கப்போக, நாடகத்தில் உணர்ச்சி வசப்பட்ட சமரசம் எழுந்து, மேடைக்கு ஓடி வருகிறார்.] சம: வேண்டாம்... இம்... வேண்டாம். சாக்ரடீஸ் விஷம் குடிக்கக்கூடாது. சாக்ரடீசு குற்றமற்ற மனுஷன்... இங்... ஆ, வேண்டாம். வேண்டாம். சாக்ரடீஸ் அய்யோ, வேண்டாம். நீங்க சாகக்கூடாது. கல்விக் களஞ்சியம் சாகறதாவது. எதுக்காக சாக்ரடீஸ் சாகணும்... என்ன குற்றம் செஞ்சார்? சிந்திக்கச் சொன்னார். ஏன், எதுக்குன்னு அது குற்றமா? சிந்திக்கிறது குற்றம்னா, மனிதனுக்கு மூளை இருக்கிறதே குற்றமாச்சே... சாக விடமாட்டேன்... இந்த கிரேக்க நாட்டு நீதிமன்றம் செய்யத் தவறின ஒரு காரியத்தை நான் செய்யறேன்... சாகவிட மாட்டேன். இந்தப் பெரியாரை இழந்துட்டா அப்புறம் ஆயிரம் வருஷம் தேடினாலும் இந்த மாதிரி அறிவு நமக்குக் கிடைக்குமா...? அய்யோ, இந்த விஷத்தை குடிக்க வேண்டியது இந்த வாயா? இதை குடிக்கிறதுக்கு வாய் இருக்கு... இருக்கு. நான் காட்டுறேன் உங்களுக்கு... அந்த வாய்தான் இதைக் குடிக்கணும்... மெலிடஸ்... மெலிடஸ், [மெலிடஸ் உருவ பாபு திகைக்கிறான்.] ஏ, மெலிடஸ், வா இங்கே. குடி—உம்—இந்தா... சண்டாளா. சாப்பிடு. பாபு: அத்தான்... சம: அத்தானா? நானா? இப்போ நான் அத்தான்ல: நீதிபதி நீ மெலிடஸ். மக்கள்: அதுதான் சரி—அதுதான் சரி. சம: சரியான வார்த்தை... குடிக்கச் சொல்றேன்... இந்தா குடி. உம். சாக்ரடீஸ் முடிவை நான் மாத்துறேன். உம். என்ன முழிக்கிறே? (பாபு தயங்க. கீதாவின் தாய் உள்ளே இருந்து ஓடிவந்து) தாய்: அய்யோ... அய்யோ... வேண்டாம்... வேண்டாம். உண்மையான விஷம்... சம: ஆ தாய்: பாபு சாப்புட்டா செத்துப் போயிடுவாரு... சம: உண்மையான விஷமா இது? இந்தா குடி. வேண்டாம் நீ குடிச்சு செத்துப் போயிட்டேன்னா நான் கொலைகாரனாயிடுவேன்... அது முடியாது போலீஸ்... வாங்க. (போலீஸ் வருகிறது) சாந்தம், பாத்தியா உன் தம்பி செஞ்ச வேலையை? (பாபு கைது செய்யப்படுகிறான்.) சாந்: என் தம்பியா? அவன் கொலைகாரப்பய, மாட்டுங்க அவன் கையிலே விலங்கை.