களஞ்சியப் பகுதி 51

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

★ நீதி மன்றம் ★ அனி: சாக்ரடீஸ், நாட்டில் நடமாடக்கூடாத ஒரு ஆத்மா! ஜனநாயக அரசாங்கத்தைக் குறைகூறும் அந்த ஐந்து உடல் முழுதும் விஷங்கொண்டது! கேட்டார் பிணிக்கும் சொற்களால், கேளாரும் வேட்ப மொழியும் வார்த்தைகளால், கேடு மலியும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்துக்கு விரோதமாக, ஆண்டவனுக்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக, இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக் கிழவன்! [சாக்ரடீஸ் சிரிக்கிறான்.] நீதி: என்ன சிரிப்பு என்ன காரணம்? சாக்: ஒன்றுமில்லை தலைவ!...ஆத்திரத்திலே அனிடஸ் தன்னை மறந்து என்னைப் பார்த்துக் கிழவன் என்று கேலி புரிகிறார்! அதை நினைத்தேன்—சிரித்தேன். கடல் நுரைபோல் நரைத்துவிட்ட தலை எனக்கும்—அனிடசுக்கும்! இல்லையா சபையோர்களே! என்ன அனிடஸ், உண்மைதானே? மெலி: சாக்ரடீஸ்! வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையைபற்றி யல்ல, அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்! சாக்: மிகவும் நன்றி மெலிடஸ்! மிகவும் நன்றி! ஆனால் ஒன்று, எண்சாண் உடம்பிற்கு தலையே பிரதானம்போல், இந்த வழக்கிற்கும் தலைதான் பிரதானம்! என் தலையிலே இருந்து சுடர்விட்டுக் கிளம்பும் அறிவு—அதை அழிக்க கவிஞனாகிய உன் தலையிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள்—அரசியல்வாதி அனிடசின் தலையிலேயிருந்து பீறிட்டெழும் அதிகார ஆணவம்—இந்த மூன்றுக்குமிடையே நடக்கும் மும்முனைப் போராட்டம்! அதன் விளைவுதான் மெலிடஸ், இந்த வழக்கு! மெலி: பார்த்தீர்களா, சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான்!...இப்படித்தான், இளைஞர்களையெல்லாம் கெடுத்தான்...! சாக்: இளைஞர்களை ஒரு கிழவன் எப்படியப்பா கெடுக்க முடியும்? நான் என்ன வாலிபருக்கு வலை வீசும் விலை மாதா? பருவ விருந்தளிக்கும் பாவையா? மெலி: மாதரிடம் இல்லாத மயக்கு மொழி—வாலிபர்க்கு வலை வீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகரச் சொல் அலங்காரம்—வார்த்தை ஜாலம்—அடுக்குத் தொடர்—இப்படிப் பல மாயங்கள் கற்றவர் நீர். சாக்: மந்திரவாதி என்றுகூடச் சொல்லுவாய்...அன்புள்ள இளைஞனே! ஏதன்ஸ் நகரத்திலே நான் ஒருவன்தான் இளைஞர்களைக் கெடுக்கிறேன்...அப்படித்தானே? மெலி: ஆமாம்! சாக்: நீ கெடுக்கவில்லை? மெலி: இல்லை! சாக்: அனிடஸ்? மெலி: இல்லை? சாக்: சிற்பி லைகன்...? மெலி: இல்லை! சாக்: இந்த நீதிபதி...? மெலி: இல்லை! சாக்: யாருமே இளைஞர்களைக் கெடுக்கவில்லை, எல்லோரும் இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள், என்னைத் தவிர...அப்படித்தானே? மெலி: ஆமாம்...ஆமாம்... சாக்: இத்தனைபெரும், ஏன் ஏதன்ஸ் நகரமே இளைஞர்களைத் திருத்தும்போது நான் ஒருவன் அவர்களுடைய பாதையை எப்படியப்பா திருப்பிவிடமுடியும்? அனி: ஒரு குடம் பாலுக்கு, ஒரு துளி விஷம்! சாக்: ஏன், இப்படியும் சொல்லலாமே, இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு! என்ன மெலிடஸ் திகைக்கிறாய்? சபையோர்களே! வாலிபர்கள் என்னைச் சுற்றி வானம்பாடிகளைப்போல் வட்டமிடக் காரணம் என்னுடைய வார்த்தை அலங்காரங்கள் அல்ல வளங் குறையாத கருத்துக்கள் தரங்குறையாத கொள்கைகள்—இந்தத் தரணிக்குத் தேவையான தங்கம் நிகர் எண்ணங்கள்! அழகு மொழியால், அறங்கார அடுக்குகளால், அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்கிறார்களே, அவர்களைக் கேட்கிறேன், அந்த மொழி எனக்கு மட்டும் சொந்தமல்லவே! அவர்கள் அதை பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையாதே! பேசிப்பார்க்கட்டும் அவர்களும்! பாபம் பேசித் தோற்றவர்கள்—பேசித் தோற்றவர்கள்—உம்... நீதி: சாக்ரடீஸ்! பேச்சை நிறுத்தும், விளக்கம் தேவையில்லை. இந்த நீதி மன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்களிப்பின்படி நீர் விஷம் சாப்பிட்டு மரண தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது! சாக்: கிரேக்க நாட்டு நீதி மன்றம் பெருமைக்குரிய தீர்ப்பை அளித்துவிட்டு மெளனப் புன்னகை புரிகிறது...நாட்டிலே நீண்ட நாட்களாக சூழ்ந்திருக்கும் இருளை விலக்கத்தான் முயற்சித்தேன் குறுகிய காலத்தில்! எழுபது வயதுக்கு மேல் முதல் முதலாக குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் இந்தக் கிழவனுக்குத் தந்த பரிசு, சாக்ரடீஸ் தீமை செய்பவன்—விண்ணிலும் மண்ணிலும் என்ன இருக்கிறதென்று தேடிப் பார்க்கும் நாத்தீகன்—பொய்களை உண்மையாக்கும் புரட்டன்—இப்படி எல்லாம் குற்றச்சாட்டுகள்! மரண தண்டனை! கவலையில்லை; கனவு இல்லாத தூக்கத்தைப் போன்றது மரணம் என்றால் அந்த மரணத்துக்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும்! மரணத்துக்குப் பிறகு மனிதனுக்கு மறு உலகம் உண்டென்றால் அந்த உலகத்திலே, எனக்கு முன்னே குடியேறி இருக்கும் ஹோமர், பிண்டர், போன்ற கவிஞர்களைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றவனாவேன்!...எனக்கு தண்டனையளித்த நண்பர்களே, நீங்கள் எதிர்காலத்துக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்! எதிர்கால இளைஞர்கள் என்னைப்போல இவ்வளவு அமைதியாக கேள்வி கேட்க மாட்டார்கள்—அவர்களது கேள்விகளிலே அக்கினிப் பொறி கிளம்பும்! அனல், புனல், புயல், அத்தனையும் வீசும்! அவர்களை அமைதி வழியிலே கட்டிக் காத்து வரும் நான் போன பிறகு, புறப்படப்போகும் புரட்சி எரிமலையின் முன்னே நிற்க முடியாமல் சுயநலப் புலிகளே, நீங்களெல்லாம் சுக்கு நூறாகப்போய் விடுவீர்கள்!...சுக்கு நூறாகப்போய் விடுவீர்கள்...! சரித்திரம் திரும்பும்: அதேபோல் மனிதனுக்கு மறு ஜென்மம் திரும்பு மென்றால், அதே ஜென்மத்திலும் இதே குற்றத்தை செய்தே தீருவேன்! செய்தே தீருவேன்! என் சிந்தை அணு ஒவ்வொன்றும் தேன் பாய்ச்சும் இந்தக் குற்றத்தை, எங்கும் எப்போதும், எந்த இடத்திலும் செய்து கொண்டே இருப்பேன்...!