களஞ்சியப் பகுதி 50
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—★— ★ சாக்ரடீஸ் (நாடகம்) ★ [கிரேக்கத்தின் வீதியிலே ஒரு நாள்.] சாக்ரடீஸ்: “உன்னையே நீ அறிவாய், உன்னையே நீ அறிவாய்.” கிரேக்கத்தின் கீர்த்தி, புவனமறியாததல்ல, அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயல்வது, புண்ணுக்கு புனுகு தடவும் வேலையைப் போன்றது!...அதனால் தான் தோழர்களே. சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சிரந் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன்! உன்னையே நீ அறிவாய்! இந்த உபதேசத்தின் உண்மையை உணர்வதற்காக உங்களையெல்லாம் அழைக்கிறேன்! அறிவு...அறிவு! அகிலத்தின் எந்த மூலையிலிருந்தாலும், அதைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்! “உன்னையே நீ அறிவாய்”—இந்த உபதேசத்தின் உண்மையை உணர்வதற்காகத்தான் என் உயிரினுமினியவர்களே, உங்களையெல்லாம் அழைக்கிறேன்! ஏற்ற மிகு ஏதென்சு நகரத்து எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க, இதோ! சாக்ரட்டீஸ் அழைக்கிறேன்; ஓடிவாருங்கள்!...ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது—விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி. மெலிடஸ்: அறிவாயுதமாம்! அனைத்துலகும் அடி பணியும் அஸ்திரமாம்! குமுறும் எரிமலை கொந்தளிக்கும் கடல் இவைகளைவிட பயங்கரமானவன் சாக்ரடீஸ்!...அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாராகுமானால், நாம் தலை தூக்கவே முடியாது! முடியாது அனிடெஸ், என்ன சொல்கிறீர்...? அனிடஸ்: மெலிடஸ்! நாம் கீறிய கோட்டைத் தாண்டாத கிரேக்க மக்களுக்கு அந்தக் கிழவன் அறிவுக் கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும்! மெலி: ஆம்! அதுதான் சரி! சாக்ரடீஸ், நீ கைது செய்யப்படுகிறீர்! [உம்...என்று வீரர்களிடம் உத்திரவிடுகிறார்.]