களஞ்சியப் பகுதி 46
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—★— (ராணி தனியே வருந்திக்கொண்டிருக்கிறாள்) பாபு: உலகத்தின் எழில் எல்லாம் ஒன்று திரண்ட அழகுப் பதுமை—காதல் பிச்சைக் கேட்டுக் கதறியதுபோது காலால் உதைத்துவிட்டுப் போய்விட்டான் மடையன். கண்ணே ராணி, கலங்காதே. ஈரேழு பதினாலு உலகத்தையும் விலையாகக் கொடுத்தாலும் ஈடாக முடியாத உனது இளமை—தேவமாதர்களின்— மேனியிலும் காணமுடியாத உனது தேஜஸ்—இவையெல்லாம் விதவையென்னும் புயற் காற்றால் வீணாக அழிந்து போவதை நான் அனுமதிக்கமாட்டேன். தவங்கிடந்து பெற்ற தங்க விக்ரகமே, உன் பட்டுப் பாதங்களைத் தொட்டுக் கும்பிட நானிருக்கிறேன்...நீ இளம் விதவையாக மட்டுமல்ல, இன்றைக்குத்தான் விவாக ரத்து செய்துவிட்டு நீதி மன்றத்திலே இருந்து நேரே இங்கு வருவதாயிருந்தாலும்கூட ஏற்றுக்கொள்ள நான் தயாராயிருக்கிறேன்... ராணி: பாபு! உளறிக்கொண்டே இருக்காதே, உதைத்தாலும், அணைத்தாலும் இந்த உள்ளம் என் ராசா ஒருவருக்கு மட்டுமே இடமளிக்கும், ராணி ராசாவுக்குத்தான் சொந்தம்—இந்த சொந்தத்தை அவர் மறுத்தால்...ராணி உலக பந்தத்தை அன்றே அறுத்துக்கொள்வாளே தவிற, உன் போன்ற தீப் பந்தங்களிலே விழுந்து சாகும் விட்டில் பூச்சியாக மாட்டாள். பாபு: உம், ராசாவே பிறக்காமல் இருந்திருந்தால் என்ன செய்வாய்? ராணி: அப்படியேன் கற்பனை செய்கிறாய்? நானே பிறக்காமல் இருந்திருந்தால் நீ என்ன செய்வாயோ—அதைச் செய், இப்போது. பாபு: ம், ராணி ராசாவுக்குத்தான் சொந்தம். ராணி ராசாவுக்குத்தான் சொந்தம். நான் அடிக்கும் துருப்புச் சீட்டிலே அந்த ராசாவே வெட்டுப்பட்டு விட்டால்...உம்...!