களஞ்சியப் பகுதி 45

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[...என்று வெளியில் வர, ராணி நிற்கிறாள்.] ராசா: ஓ, ராணி! ஏன் ராணி வாட்டமாயிருக்கிறாய்? உம். ராணி: ஒன்றுமில்லை. ராஜா: ம்...ராணி! இன்று உன்னிடம் ஒரு சேதி கேட்கப் போகிறேன்—அதற்கு நீ கோபப்படாமல் பதில் சொல்ல வேண்டும், தெரியுமா? ராணி: கேளுங்கள்! ராசா: ம்...ஆமாம்...அ...ஹ...சரி! இந்தா இந்த மலரை உன் தலையிலே சூட்டிக்கொள்! ராணி: வேண்டாம்! ராஜா: ஏன், பூ என்றால் உனக்குப் பிடிப்பதில்லையா ராணி? உம்...நானும் இவ்வளவு நாளாய் பார்க்கிறேன், ஒரு நாள்கூட உன் தலையிலே நீ மலர் சூட்டிக்கொள்வதில்லை. ஏன்? சரி. பூ வேண்டாம்; பொட்டாவது வைத்துக்கொள்!...ம்...நெற்றியைக் காட்டு...ஜவ்வாது பொட்டு! ரா: வேண்டாம்! எனக்கேன் இந்த அழகெல்லாம். ராசா: என்ன ராணி...விதவை மாதிரி எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்கிறாய்? ஆங்...? ரா: ஆ! [அழுகிறான்.] ராஜா: கோபமா ராணி?...நான் கேட்டது...ஆ! நான் விளையாட்டுக்குத்தான் கேட்டேன்... ரா: விளையாட்டுத்தான்! விளையாட்டுப் பருவத்திலே நடைபெற்ற கலியாண விளையாட்டுத்தான்! அந்த விளையாட்டின் விளைவுதான், இதோ, இந்த ராணியின் விதவைக்கோலம்! ராஜா: ஆ. ரா: இனியும் மூடி வைத்துப் பயன் என்ன? மூளியாகிவிட்டது என் வாழ்க்கை. முள்வேலி போட்டு மூலைக்கு அனுப்பிவிட்டது இவ்வுலகம். என்னை வட்ட நிலா, கட்டிக் கரும்பு என்பீர்களே, உங்கள் ராணி ஒரு பட்ட மரம்!...பட்ட மரம். பாபு: பட்ட மரம் துளிர்க்காது—கெட்ட பால் சுவைக்காது. ஹ...ஹ...ஹ ராஜா? இப்போதாவது பாபுவின் பேச்சில் ஒளிந்து கிடக்கும் பச்சை உண்மை புலப்படுகிறதா? ராஜா: விதவை. என் ராணி விதவை. ராணி, இதை ஏன் இத்தனை நாள் என்னிடம் சொல்லவில்லை? பாபு: இது ஒரு கேள்வியா? ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுகிறவர்களுக்கு லாபந்தானே. இப்போது நீ கண்டுபிடித்துவிட்டாய்... அவளும் கண்ணீர் பாணத்தை பிரயோகிக்கத் தொடங்கிவிட்டாள். ராஜா: நீலிக் கண்ணீருக்கு இளகிவிடும் நெஞ்சம் எனக்குக் கிடையாது பாபு. ராணி: அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! மோவா அரும்பு—தாவாச் சிறுமான்—என்றெல்லாம் அழைக்கப்பட்ட பருவத்திலே என் கழுத்திலே மாங்கல்யக் கயிறு பிணைக்கப்பட்டதாம்—நான் மாங்கல்யமிழந்த மங்கை என்று எனக்கே இன்றுதான் தெரியும்! ராசா: அப்படியானால், இத்தனை நாள் ஏன் உன் கூந்தலிலே மலர் இல்லை? நெற்றியிலே பொட்டு இல்லை?...உம்...இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து என் உள்ளத்தைத் திருடிக்கொண்ட நீ வேறு என்னதான் செய்யமாட்டாய்! பாபு: கொலைகூட செய்வாள்! ராணி: அய்யோ! என் பேச்சை நம்புங்கள்...நான் சொல்வதைக் கேளுங்கள்... (கையைப் பிடிக்கிறாள்) ராசா: கேட்டதெல்லாம் போதும், விடு என்னை... ராணி: தாலி இழந்தவள் என்பதற்காகவா எனக்கு இந்தத் தண்டனை? வீழ்ந்துபோன சமுதாயத்திற்கு விழிப்பூட்டி, விசை ஒடிந்த தேகத்தில் வன்மையூட்டி, நாட்டை மறுமலர்ச்சி சோலையாக்கப் பணிபுரியும் படையிலோர் வீரரா நீங்கள்? விதவை என்றதும் என் விழிநீரைக்கூட ஏளனம் புரிகிற அளவுக்கு அவ்வளவு கல்லாகவா உங்கள் நெஞ்சம் மாறிவிட்டது? என்னைப் பாருங்கள்...இந்தப் பருவக் கொடி பாழும் விதவைக் கட்டுப்பாடென்னும் சூறாவளியிலே சிக்கிச் சீரழியத்தான் வேண்டுமா? சொல்லுங்கள்...பதில் சொல்லுங்கள்! ராசா: நீ தாலி இழந்தவள் என்பதைப் பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் இத்தனை நாள் இந்த விஷயத்தை என்னிடம் மறைத்து என்னை ஏமாற்றியிருக்கிறாய் பார், அதை யாராலும் மன்னிக்கவே முடியாது... ரா: நான் மறைக்கவில்லை—மறைக்கவே இல்லை. என்னிடம்தான் மறைத்துவிட்டார்கள், மகா பாவிகள். ராசா: சே! சே...! ரா: இதைக் கேளுங்கள்—இதைக் கேளுங்கள். (ராஜா போய்விடுகிறான்)