களஞ்சியப் பகுதி 40

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— ராணி: (தனக்குள்) பிறருக்குக் கேடு விளையாத வரையில் பொய் சொல்வதால் தீமையில்லை என்பார்கள்!—அய்யோ! நான் சொன்ன பொய்களால், சமரசம் வீட்டிலே குழப்பம்—ராஜாவுக்குச் சந்தேகம்—எனக்கும் சங்கடம்—இதெல்லாம் அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால், “நான் குருடன் என்றுதானேயம்மா, இப்படியெல்லாம் என்னை ஏமாற்றியிருக்கிறாய்?” என்று கேட்டு என் இருதயத்தைக் கோடரியால் பிளந்து விடுவாரே! ராணி...நீ சரியானபடி சிக்கிக் கொண்டாய்! [ராஜா பாடிக்கொண்டு வருகிறான்.] ராணி: பூலோகம் எனக்கு ஒண்ணும் இருண்டு போகலே—முதல் முதல்ல ஒரு புதுப் பெண்ணை பாத்த உடனே, உங்க புத்திக்குத்தான் இருண்டு போச்சு! ராசா: அது சரிதான்—பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணுல்ல, இதுவும் பேசுவ—இன்னமும் பேசுவ... ராணி: யாரு உங்கிட்ட அப்படிச் சொன்னா? பத்திரிகையைப் படிச்சிட்டு நீங்களா சொன்னீங்க...என்னை எங்க உண்மையை சொல்லவிட்டீங்க! சரிதான்—அப்படித்தான் இருக்கட்டுமேன்னு நானும் ஒத்துகிட்டேன்! நான் ஏழை வீட்டுப் பெண்ணுன்னு சொல்லியிருந்தா, எனக்கு இந்த டைப்பிஸ்டு வேலை கிடைச்சிருக்குமா? நீங்களே சொல்லுங்க...? ராஜா: அது சரி...ராணி... ராணி: உம்... ராசா: நீ இருந்தாலும் எங்கிட்ட பொய் சொல்லி இருக்கக்கூடாது! ராணி: ஒங்களுக்கென்னா? என் நிலமை—என் கஷ்டம்—நான் சிந்திய கண்ணீர்—அதைப்பத்தியெல்லாம் உங்களுக்கு... என்னா தெரியும்? திருட்டும், புரட்டும் நிறைஞ்ச உலகத்திலே—ஒரு குருட்டுத் தகப்பனாரோட வாழும் அபலைக்கு எவ்வளவு துயரங்கள் தெரியுமா? அப்பப்பா? அந்த சமரசம் வீடு...அங்கே...ஒரு பாவி...பாபு! இன்னொரு காளி சாந்தம்! ராஜா: ஆகா! போதும்...போதும்! நீ ஒவ்வொருத்தவங்களா திட்டி கடைசியிலே என்னையும் திட்ட ஆரம்பிச்சுடாதே! ஒன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்—நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்— ராணி: இந்தப் பொல்லாத உலகத்திலே நேர்மையோட நடக்கிற ஒரு பொண்ணுக்கு எவ்வளவு ஆபத்து இருக்கு தெரியுமா? அடுக்கடுக்காய் படை எடுத்து வரும் இடையூறுகளை எதிர்ப்பதற்கு, பொய் ஒரு ஆயுதமாக இருந்தால், அதை உபயோகிப்பது குற்றமா என்ன? ராசா: நான் குற்றம்னு சொல்லலே—நல்ல காரியத்துக்கு பொய் சொல்றது தப்பு இல்லேதான்...இருந்தாலும் என் கிட்ட சொல்லி இருக்கக்கூடாது! அதான் 'பாயிண்ட்'! ராணி: ஆமா...ஆமா...நீங்க முதலாளில்ல! ராஜா: அய்யய்யோ! நீ என்னம்மா இது டேஞ்சர் பண்றே? அதெல்லாம் மொதலாளி கிதலாளி ஒண்ணும் கிடையாது; வெறும் ராஜாதான்... ராணி: ஒங்கிட்ட சொன்னா என்னா? ராசா: இப்படி கேட்டா நான் என்னா சொல்லப்போறேன்; காதலன்கிட்டே பொய் சொல்லலாமான்னேன்—வேற என்னா? அது இருக்கட்டும் ராணி, ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை செஞ்சிவையுன்னு பெரியவங்களே சொல்லி இருக்காங்க...நீ இது வரைக்கும் சுமார் ஆயிரம் பொய்யிக்கு மேலேயே சொல்லி இருப்பேன்னு நினைக்கிறேன். அதனால்... ராணி: அதனால... ராஜா: அதனால என்ன இப்ப...அதனால ஒண்ணுமில்லே, நான் என்னத்தைச் சொல்லறது! நீ இதுவரைக்கும் லீலா ராணி—லீலா ராணின்னு இருந்தேன்! இனிமே ராஜா ராணி ஆயிடலாமேங்கிறேன்! ஆ...