களஞ்சியப் பகுதி 41

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— சமையல்காரன்: ஏம்மா? இப்படி கவலையா இருக்கீங்க? கொஞ்சம் காப்பியாவது சாப்பிடுங்கம்மா! சாந்தம்: அட நீ போப்பா நீ முருகா—இப்படி வா—இப்படி உக்காரு! அந்தப் பொண்ணு விவரம் சொன்னியே... சமை: ஒ! அது ரொம்ப மிஞ்சிப் போச்சே...இப்ப கல்யாணத்துக்கே ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கே... சாந்: ஆ! கல்யாணமா? ரெண்டாவது கல்யாணமா? சமை: ஆமா...இல்லீங்க! அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலீங்களே... சாந்: எவனுக்குடா? சமை: நம்ம சங்கரம் பயலுக்கு! சாந்: சங்கரம்பயலுக்கா? நல்ல ஆளுப்பா நீ! இவ்வளவு நாளா அவனைப்பத்திதான் சொல்லிகிட்டு இருக்கிறியா நீ...? சமை: ஆமாங்க...நான் வேற யாரைப்பத்தி சொல்றது? சாந்: ஆமா! அந்தப் பொண்ணுன்னு சொன்னியே அது...? சமை: அது நம்ப வேலைக்காரப் பொண்ணுங்க! இங்க இருக்காளே வேலைக்காரி... சாந்: அடசீ...அய்யா, பொண்ணோடெ சுத்தாராருன்னு சொன்னியடா... சமை: நான் அவனைத்தானுங்க—அந்தப் பய செய்யற தப்பை நெனைச்சிகிட்டு அவனை அய்யான்னு...அய்யாகூட வர்ராங்களே! (சமரசம் வருகிறார்.) சம: என்ன, இங்கு விசாரணை நடக்குது?...உ...? சாந்: உம்...இங்க விசாரம்தான் இருக்கு, 'ணை' இல்லை! சம: சர்தான்! சரி...உம். நீ போயி சமையலை கவனி... சமை: சமையல் ஆயிடுச்சிங்க... சம: ஆயிடுச்சா? ஆயிடுச்சில்ல...அப்ப கொஞ்சம் போட்டு தின்னு...நாய்... (சாந்தத்திடம்) இந்தா நான் ஒன்பேர்லே உள்ள சந்தேகத்தை வாபஸ் வாங்கிட்டேன். நீயும் அதே மாதிரி செய்யவேண்டியதுதானே! சாந்: என்னாது? சம: பாரு, ராஜாவும் நல்லவன்; நீயும் நல்லவ! அதே மாதிரி என்னையும் நல்லவன்னு... சாந்: உம்! ராஜாவும் நல்லவருல்ல; நானும் நல்லவ இல்ல; முன்னால நெனைச்சிங்க பாருங்க; அதே மாதிரிதான்! சம: அடா...அடா...இந்தாப் பாரு! நான் என்னமோ தப்பா நடக்கிறதா நெனைச்சிக்கிட்டு நீ தப்பா நடக்கிறமாதிரி ஆக்ட் பண்றே...ஆ! அந்தப் பொண்ணு இருக்கே... சாந்: அழகான பொண்ணு! கவர்ச்சியானவ! பருவமங்கை! சம: அதைச் சொல்லலே! வந்து அவ ரொம்ப ஏழை! ஆனா புத்திசாலி... சாந்: ஆ! புத்திசாலி இல்லேன்னா வயசான ஆளை 'கவர்' பண்ண முடியுமா? சம: சீ, சீ...! இது சரிப்பட்டு வராது...ஊக்கும்...எங்கியோ ஆறோ கொளமோ பாக்க வேண்டியதுதான்! சாந்: ஏன் அவளோட நீச்சல் விளையாட்டு நடத்தவா? ஜலக்கிரீடை... (பாபு வருகிறான்.) பாபு: யக்காவ்... சாந்: என்னடா தம்பீ? பாபு: அக்கா! அனாவசியமா, எனக்கும் அந்த ராஜாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாலே, ஊர் பூரா எனக்கு ஒரே கெட்டபேரு அக்கா... சாந்: அதுக்கு என்னா இப்போ? பாபு: எப்படியாவது மறுபடியும் அந்த ராஜாகூட சேர்ந்து நாடகத்திலே நடிச்சி... எனக்குள்ள கெட்ட பேரெல்லாம் போக்கணும்கா! சாந்: அதுக்கு ராஜா சம்மதிக்கணுமே! சம: யார்தான் சம்மதிப்பா? ராஜா மனசு நோகும்படி என்னென்ன அக்ரமம் பண்ணி இருக்கிறான் இவன்! அதனாலே இவனை சேத்துக்க மாட்டாங்க! சாந்: ஏன் சேத்துக்க மாட்டாங்க ராஜா நான் என்ன சொன்னாலும் கேப்பாரு! தம்பீ, நீ வாடா நான் சேக்கிறேன். சம: இந்தா...இந்தா...வீண் ஜம்பம் அடிச்சி அங்கே போயி அவமானப்படாதே! அவ்வளவுதான்! சாந்: ஆ! தம்பீ ஒன்னையும் அந்தக் கம்பெனிலே சேத்து, அந்தப் பொண்ணையும் அந்தக் கம்பெனிலே இருந்து வெலக்கல. என் பேரு சாந்தம்மா இல்லே... சம: அய்யோ! அய்யோ! அந்தப் பொண்ணு பாவம், பாவம்! சாந்: அய்யோ... அய்யோ... தவிக்கிறதைப் பார்ரா... அடப்போய்யா, வாடா தம்பீ... பாபு: அத்தான்! வர்ரேன்... சம: உம். வர்ரேன்... அத்தான் வர்ரேன். உம்...அய்யோ! இந்த ஒரு ராஜாவும் ராணியும் வந்தது இந்த குடும்பத்தை சீட்டு கட்டு கலைக்கிறாப்பிலே கலைச்சுட்டாங்களே!