களஞ்சியப் பகுதி 34
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
★ (பாபு ராணியின் வீட்டில் ஏற முயற்சிக்கிறான்) ராசா: டேய் நில்லு. அங்கே யாரு பாபுவா? ஏன் பாபு ஒன் நிலமை இப்படி யாச்சு. எதுக்காக இந்த வீட்டுமேலே இப்ப ஏறுனே? பாபு: நிறுத்து. வீட்டு மேலே ஏறது--செவுறு ஏறி குதிக்கிறது--அதல்லாம் ஒன் பழக்கம். ராசா: நீ என்ன சொல்றே? பாபு: அன்னைக்கு ராத்திரி ஏன் திருட்டுத்தனமா எங்க வீட்டுல நுழைஞ்ச? ராசா: அதுவா?...அது நாயி. பாபு: யார்ரா நாய். (அடிக்கிறான்) ராசா: பாபு... பாபு: என்னபாபு...பாபுவாம்ல பாபு...பெரிய யோக்யன் ராசா: பாபு இப்பநான் ஒங்கிட்டே என்ன கேட்டேன்... (இருவருக்கும் சண்டை--அதை ராணி பார்த்துவிடுகிறாள்) ஞானக்கண்: என்னம்மா அது? ராணி: ஒண்ணுமில்லேப்பா. யாரோ ரெண்டுபேரு தெருவிலே சண்டை போட்டுகிட்டு இருக்காங்க. ஞான: அதெல்லாம் சகஜந்தாம்மா. யாராவது போக்கிரிங்க குடிக்கத்தெரியாம குடிச்சிபிட்டு உருளுவாங்க, ராணி: இல்லப்பா--நம்ப வீட்டுக்கு நேராவே சண்டை போடுறாங்க. ஞா: நம்ப வீடென்ன, சப்இன்ஸ்பெக்டர் வீடா? அவுங்க பாட்டுக்கு உருளட்டும். நீ ஏம்மா அங்கெல்லாம் போறே. போ, படுத்துத் தூங்கு... (ராணி ஆண் உடையில் பாபுவைத் தாக்குகிறாள். ராஜாவுடன் சேர்ந்து ‘ஒன்’ ‘டூ’ என்று எண்ண ‘டென்’ என்றதும் பாபு ஓடுகிறான். ராணி பாபுவை அடிக்க தடி ஓங்க அது ராஜாவின் தலையில் விழுகிறது) ராசா: தம்பி, பாத்தியா? பாத்தியா? ஓடிட்டான்--ஆமா நீ என்ன தம்பி என்னையே அடிச்சுட்டே! (உட்காந்து விடுகிறான்; ராணி தூக்குகிறாள்) மெள்ள, மெள்ள, அந்தக் கையை பிடி. இந்த கையிலே கடிச்சுப்புட்டான் தம்பி. தண்ணி வேணுமே.... ராணி: இரு கொண்டாரேன். (இருவரும் வீட்டுக்குள் வருகிறார்கள்) ஞான: யாரது? ராணி: யாருமில்லேப்பா--அட வீட்டுக்குள்ளேயே வந்துட்டியா?... ராசா: ஹீ...ஹீ... ஞான: யாரு? என்ன?... ராணி: ஊங்...யாரோ ஒரு பாவிப் பய இவனை அடிச்சி போட்டுட்டு போயிட்டான். ரொம்ப களைப்பா இருக்காம்; கொஞ்சம் தண்ணி வேணும்னு கேட்டாரு. ஞான: சரி...சரி. சீக்கிரம் தண்ணி கொடுத்து, வெளியே அனுப்பு--ஏன் வம்பை எல்லாம் வெலைக்கு வாங்குறே. ராணி: சரி--சரி, உட்காருப்பா. ஞான: அடி பலந்தானாய்யா?... ராசா: ஆ! அடி ஒண்ணும் பலமில்லே--கடிதான் கொஞ்சம் பலம்... ஞான: கடிச்சுட்டானு? ராசா: ஊம்... ஞான: அய்யோ, பாவம். இந்த காலத்திலே நாய்கூட பல்லை உபயோகிக்கிறதில்லே--மனுஷன் தான் ரொம்ப கெட்டுட்டான், சே...சே...சே... ராசா: ஆமாங்க, இந்தப் பசங்களுக்கெல்லாம் சோறு கெடைக்கலேன்னா...மனுஷனைத்தான் கடிப்பானுங்க... (ராஜா: ராணியின் படத்தைப் பார்த்துவிடுகிறான்.) ராணி: உம். இந்தாயா, தண்ணி. ராஜா: அய்யய்யோ, இது என்னு இது...தண்ணிலே... ஆ...பூச்சி, பூச்சி... ராணி: பூச்சியா? ஞான: என்னு பூச்சிப்பா?... ராஜா: ஆ. அது தெரியலியே, முகத்தை காட்டமாட்டேங்குதே...ராத்திரி வேலையா இருக்கிறதுனாலே அது. ஞான: சரி பார்த்து சாப்பிடு. ராஜா: ஆ. பார்த்துத்தான் நானு. (முகத்தில் ஊற்றிக் கொள்கிறான்.) ஞான: என்னாது? ராஜா: தண்ணி... ஞான: ஆ...அந்தக் கடிக்கு போய் மருந்துபோட்டுக்க!... ராணி: இங்க வாப்பா, கைக்கு மருந்து போடுறேன்...! ஞான: போப்பா! போய் போட்டுக்க, பாம்பு பல்லைவிட மனுஷன் பல்லுக்குத்தான் விஷம் அதிகம். ராஜா: மனுஷாள் கண்ணுக்குக்கூட விஷம் அதிகம்தான்! ஞான: யாரு பிள்ளையாண்டான், கண் ஆஸ்பத்திரி டாக்டரோ. [ராணி மருந்து கட்டுகிறாள்.] ராஜா: ஆ...தம்பீ!...என்ன பண்றே? மெள்ள...அய்யோ, மெள்ள தம்பி, சண்டையிலே எப்படி நாக்கவுட்? ராணி: யாரு கொடுத்தது? ராஜா: அவன் கொடுத்தான்! அதா...வச்சிருக்கானே! ஆமா தம்பீ, நீங்க ரெண்டுபேருந்தான் தனியா இருக்கீங்களா? ராணி: ஆமா...! ராஜா: ஆகாம்...தனியா இருக்கீங்களா...? உனக்கு இன்னும் கலியாணம் ஆகல போலருக்கு! ராணி: உனக்கெப்படித் தெரியும்? ராஜா: அது எனக்கு எப்படித் தெரியும்னா அது... ராணி: ஆம்பளையெல்லாம் கழுத்திலே தாலியா போட்டுட்டு இருப்பாங்க, நீ பாத்த ஒண்ணு கல்யாணம் ஆச்சா இல்லையான்னு கண்டுபிடிக்க...! ராஜா: ஆ! ஆம்பளை! ஏன் தம்பீ இவ்வளவு வளத்து இருக்கே...? [தலைமுடியைக் காட்டுகிறான்.] ராணி: ஆ! இதுவா? இது ஒரு வேண்டுதலை...! ராஜா: ஆ! வேண்டுதலையா...? [ராணி கட்டை இருக்க, இருவர் தலையும் மோதிக்கொள்கிறது.] ராணி: அப்பா... ராஜா: அய்யய்யோ! நீவேற கட் பண்ணாதே...! (கட்டின் மீதியை வெட்டுகிறாள்) ராணி: இதுதான் வழி, போய்ட்டு வர்ரியா...! ராஜா: ஆ... ராணி: இனிமே வெளியே கிளம்பும்போது துணையோடே கிளம்புங்க! ராணி: அந்தத் துணையும் உன் மாதிரி கிடைச்சால்ல நல்லா இருக்கும். ராணி: வணக்கம்! ராஜா: பெரியவரே!... ஞான: என்னப்பா...? ராஜா: நான் போய்ட்டு வர்ரேன்! ஒங்க ஒதவிக்கும் ஒங்க பிள்ளையோட ஒதவிக்கும் ரொம்ப நன்றி வர்ரேன். ஞான: என்ன பிள்ளையா? பெண்ணைப் போயி பிள்ளை இங்கிறான்! ஒருவேளை இவனும் என்னைப் போல குருடனா இருப்பானோ?