களஞ்சியப் பகுதி 24

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

★ (அகல்யா நாடக ஒத்திகை) இந்திரன்: கவலைப்படாதே அகல்யா என்னைத் தெரியவில்லை உனக்கு? நான் தான் சூடப்படாமல் கிடந்த இந்த சுந்தர ரோஜாவைத் தேடி ஓடி வந்த தேவராஜன்! இந்திரன் என் பெயர். அகல்யா: ஆ. இந்திரன். இந்தி: ஆமாம்—அமரர் தலைவன்—ஐராவதமுடையோன். அகல்: அக்ரமக்காரன். அடப்பாவி, அழியாத என் கற்பை அழித்து விட்டாயே. அபலைகளின் கற்பை சூறையாடுவதுதான் அமரர் கோனுக்கு அழகோ? நீ தான் தேவாதி தேவனோ? தீராதி தீரனோ? அய்யோ: நான் ஏமாந்தேன். கணவனைப் போல் வேஷம் போட்டு என்னை ஏமாற்றி விட்டான் இந்தக் காதகன். அட கடவுளே. கற்பரசியை ஏமாற்ற வந்த இந்தக் கபட நாடகதாரியின் வேஷம் உன் கண்களுக்கும் தெரியவில்லையா? இந்தி: கற்பரசியான உன் கண்ணுக்கே தெரியாதபோது வேறு எவர் கண்ணுக்குத்தான் தெரியும். போனதெல்லாம் போகட்டும்; பூங்கொடியே. இப்படி வா. அகல்: மறுபடியுமா? அட மகாபாதகா, அடுக்குமா இந்த அக்ரமம். முனிவர்: அடுக்காது...அடுக்காது! மிடுக்காகப் பேசும் மின்னல் கொடியே. ஆஸ்ரமத்துப் பெண்ணே. அந்தரலோகத்து இந்திரனோடு கூடிக் கிடந்தவளே. உங்கள் காதல் வேட்டைக்கும் கயமைச் சேட்டைக்கும் இந்தப் புனிதமான ஆஸ்ரமந்தானா கிடைத்தது...அடே பொல்லாதவர்களே. பொட்டுப் பூச்சிகளே, புன்மைத் தேரைகளே. இந்தி: முனி புங்கவரே!... முனி: ஆ... இந்தி: மன்னித்து விடுங்கள். அன்பு, வடிவான தங்களுக்கு ஆத்திரம் வரலாமா?...தாங்களோ சாது... முனி: நீ செய்ததோ சூது. இனி எதையும் கேளாது என் காது. அமரர் தலைவனே இது ஆகாது. இந்தப் பாபம் ஈரேழு ஜென்மத்துக்கும் போகாது. பாபிகளே. பாதகரின் ஆவிகளே.... அகல்: ஸ்வாமிகளே. முனி: என்ன...? அகல்: இந்திரன் இவ்வளவு பெரிய மோசக்காரன் என்று எனக்குத் தெரியாது... முனி: ஏன் தெரியாது? திலோத்தமையும், மேனகையும், ஊர்வசியும், ரம்பையும் இந்த தேவாதி தேவனின் தேவரடியார்கள் என்பது உனக்குத் தெரியாதா? “தேவரனையர் கயவர்” என்ற திருக்குறளும் புரியாதா? தெரிந்தும் பிழை புரிந்தாய். புரிந்தும் பிழை புரிந்தாய். அகல்: இல்லை ஸ்வாமி, இல்லை. தங்களைப் போலவே உருமாறி வந்து--கண்ணே, தங்கமே, தனியாத அன்பே, என்றெல்லாம் வர்ணித்தான்... முனி: நான் என்றைக்கடி உன்னை அப்படி அழைத்திருக்கிறேன்? அப்போதாவது புரியவேண்டாமா ஆள் வேறு என்று... அகல்: தாங்கள் என்று நினைத்தேன்--தணலில் வீழ்ந்து விட்டேன். ஆ....தவறிவிட்டேன். முனி: ஆ. தவறிவிட்டாய் தவமுனிவன் பத்தினியே. வேறு மனிதனுக்கும்--வீட்டு மனிதனுக்கும் வித்தியாசம் உணர முடியாத வித்தைக்காரியே. உன் சொத்தைக் காரணத்தை என்னால் நம்பமுடியாது...அதைப்போல் இந்த சூழ்ச்சிக்காரனையும் நம்பமுடியாது...ஏடா இந்திரா. பிறன் மனைவியின் கற்பை கெடுத்த உன் உடம்பெல்லாம்...இது...இது வாகப் போகட்டும் அடி அகல்யா. இந்தா நீயும் பிடி சாபம்... (என்றதும் ராணி தன் புடவைத் தலைப்பை ஏந்துகிறாள்.) ராஜா: போ ராணி இப்படியெல்லாம் ஆக்ட் செய்ய வராது--ஆமாம்--. ராணி: நான் உண்மையைச் சொல்லட்டுமா? எனக்கு என்னமோ இந்த நாடகமே பிடிக்கலே. அகல்யா வேஷம் என்னாலே போட முடியாது... ராஜா: அப்ப ஒண்ணு செய்யி முனிவர் வேஷம் நீ போடு. அகல்யா வேஷம் நான் போடுறேன்... ராணி: ஜனங்க தியேட்டர்ல என்னா போடுவாங்க தெரியும்ல! ராசா: நீ சொல்லித்தான் தெரியனுமோ! சரி லீலா. அகல்யா நாடகத்தை இதோட நிறுத்திட்டு வேற புது நாடகம் நடத்துவோம். ராணி: என்னா நாடகம்? ராசா: ஹாஸ்ய நாடகம் நடத்துவோம் -- படுக்கைப் புரட்சி... ராணி: ஆ! ராசா: நாடகம்--நடத்துவோம். கரண்ட்: அப்ப அகல்யா? ராசா: அவதான் கல்லாயிட்டாளே! ராமர் வேஷ ராமன்: கல்லாயிட்டாளா? அப்ப நான் மிதிக்க வேண்டியது பாக்கியிருக்கே!... ராசா: அட யார்ரா இவன். இங்கு நாடகமே ஸ்டாப்பு, இவரு ராமர்வந்துட்டாரு சாப விமோசனம் பண்ண! போடா. அப்ப லீலா, வா, உன்னை வீட்ல கொண்டு உட்டுட்டு வர்ரேன்... டேய், எல்லாத்தையும் எடுத்து வைங்கடா.