களஞ்சியப் பகுதி 23
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
★ ராஜா: யாரது லீலாவா? என்ன லீலா, இன்னைக்கு இவ்வளவு லேட்டா வர்ரே? ராணி: ஒண்ணுமில்லே. இன்னைக்கு "டேட்" ஒண்ணுல்ல—அதனால்தான் கொஞ்சம் லேட்டு! ராஜா: ஆமாம், ஆமாம். பால்காரன், தயிர்காரன்...அந்த...சர்வண்டு...இவங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கனும்ல. அதனால லேட்டா வந்துருப்பே. ராணி: ஆமாம்...ஆமாம்! [கரண்ட் வால்வை அலட்சியமாக வைக்கிறான்.] ராணி: இந்தா, கரண்ட்! 'வால்வை' இப்படி அலட்சியமா வைக்காதே! இதோ, நான் ஒருத்தி இருநூறு ரூபாயை எங்கேயோ அலட்சியமா காணாம அடிச்சுட்டு, வீட்டுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறேன். அது மாதிரி நீயும் இதை போட்டு ஒடச்சிட்டு முதலாளிகிட்ட என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்காதே! ராஜா: ஆமாண்டா, வால்வு ரொம்ப 'காஸ்ட்லீ'டா...கீழே கீழே போட்டுத் தொலைக்காதே! அப்புறம் நம்ப நாடகத்துக்கு ஹீரோயின் கெடைக்காம அலையுறோமே, அது மாதிரி வால்வுக்கு அலைய வேண்டி வரும்! ராணி: உங்க நாடகத்துக்கு இன்னும் கதாநாயகி கெடைக்கிலியா? ராஜா: இல்லியே! கரண்ட்: சார்! நான் ஒண்ணு சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க! ராஜா: நீ ஏண்டா கோவிச்சுக்கிறே? என்னா சொல்லு... கரண்ட்: நம்ப லீலா அம்மாவே கதாநாயகியா ஆக்ட் பண்ணுனா என்ன? ராஜா: சே, சே. அது நல்லா இருக்காது! கரண்ட்: ஏன் சார், ஆக்ட் பண்ணத் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா? ராஜா: டேய். நான் அதைச் சொல்லலேடா! லீலா ஆக்டே பண்ண வேண்டாமே; சும்மா 'ஸ்டேஜி'லே வந்து நின்னா போதுமே! ஆக்ட் பண்ண மாதிரியே இருக்குமே! கரண்ட்: அப்புறம் என்ன சார்...? ராஜா: அது பெரிய எடத்துப் பொண்ணு நாம இப்படி சும்மா ட்ராமா, கீமாவிலே ஆக்ட் பண்ண கூப்பிட்டா அவுங்க வீட்டில ஏதாவது... ராணி: இல்லியே! நான் எங்க ஸ்கூல்லகூட நல்லா நடிப்பேனே! ராஜா: ஸ்கூல்ல யார் வேணும்னாலும் நடிக்கலாம். அது ஒரு பெரிய காரியமில்ல. ஆனா உண்மையான ட்ராமாவிலே நடிக்கணும்; அப்பத்தான் அதனுடைய கஷ்டம் உனக்குத் தெரியும். ஆனா கரண்ட், லீலா நம்ம நாடகத்திலே நடிக்கிறேன்னு சொன்னா, அது இஷ்டத்துக்கு விரோதமா ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். என்ன லீலா...? ராணி: ஆமாம்! கரண்ட்: அப்ப. நாம நாடகத்துக்காக தேடித்தேடி அலைஞ்ச கதாநாயகி கிடைச்சாச்சி! ராஜா: கெடைச்சாச்சி...கெடைச்சாச்சி! என்ன லீலா, உனக்கு சம்மதந்தானே? ராணி: உம்... கரண்ட்: முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்! ராணி: ஆமாம்—முயற்சி உடையோர்...அதெல்லாம் சும்மா! நானும் காலம்பற ஏழு மணியிலே இருந்து தேடி அலைஞ்சிகிட்டே இருக்கிறேன்: காணாமப் போன பணம் கெடைக்கவே இல்லை! ராஜா: பணம் காணாமப் போச்சே...எவ்வளவு? ராணி: சும்மா 200 ரூபா! ராஜா: 200 தானே! டோண்டு ஒரி...நான் குடுக்கிறேன். ராணி: ஆ! ராஜா: நான் குடுக்கிறேன்! ராணி: வேண்டாம், வேண்டாம். ஒண்ணா ரெண்டா: ரூபா 200ல்ல! ராஜா: பரவாயில்லை, வச்சிக்கோ! இந்தா லீலா, வச்சிக்கோ! காணாமப் போன விஷயம் வீட்டுக்கேத் தெரிய வேண்டாம்! கரண்ட்: இந்தாங்க... ராணி: என்னா இது? ராஜா: கதாநாயகி பாடம்—அது பாடம்! இது பணம்! அதை வச்சிக்கோ...இதைப் படிச்சிக்கோ!... ராணி: சரி. பாடம் பண்ணி வைக்கிறேன்! ராஜா: நாளைக்கு ஒத்திகை வச்சிருக்கு!