களஞ்சியப் பகுதி 17
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
——★—— [ராஜா வருகிறான்.] கீதா: வாங்க...வாங்க! ராஜா: பாபு இல்லே? தாயம்மாள்: வந்துடுவாரு. வாங்க தம்பீ, வாங்க, உக்காருங்க. இப்பத்தான் உங்களைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தோம்! ராஜா: என்னைப் பத்தியா? தாயம்: ஆமாங்க. ராஜா: என்ன? கீதா: அன்னைக்கு நாடகத்திலே உங்க நடிப்பு ரொம்ப பிரமாதம்—நானே உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்! ராஜா: ஹ...ஹ...தேங்க்ஸ்! தாயம்: கீதா 'போர்ஷனை'த்தான் ரொம்ப குறைச்சிட்டீங்களே தம்பி...உம்...ஒரு சீனுகூட முழுசா இல்லையே! ராஜா: நான் என்ன செய்யறது? அதுக்கெல்லாம் பொறுப்பு பாபுதான். உம்...கதையும் அதுமாதிரி! பரவாயில்லை, அடுத்த புது நாடகத்திலே... வேலைக்கார சிறுமி பிரேமா: புதுநாடகத்துலே எனக்குக் கூட ஒரு சான்ஸ் கிடைக்குமா? ராஜா: ஆங்— கீதா: சீ, போடி! பாத்தியாம்மா இந்தப் பொடிசை! உம்—எனக்கே சான்ஸ் கிடைக்கலியாம்—இவளுக்கு சான்சாம்ல சான்ஸ்! தாயம்: பிரேமா! வாயை மூடு! அதுக சின்னஞ்சிறிசுக தமாஷா பேசிக்கிட்டு இருக்கும்போது—கீதை, தம்பியை மாடிக்கு அழைச்சிட்டுப் போறதுதானே! ராஜா: அய்யோ, வேண்டாம்! நான் இங்கேயே இருக்கேன்! தர்யம்: சரி! வாடி, போவோம்! [தாயம்மாளும் பிரேமாவும் போய் விடுகிறார்கள்.] கீதா: புது நாடகம்னா எதுவா இருக்கலாம்? ராஜா: பாபு உங்கிட்டே சொல்லலே? ரெண்டு மூணை கதையிருக்கு! லைலா மஜ்னு, அனார்கலி, அகல்யா தேவி... கீதா: கம்ப்ளீட் லௌவ் ஸ்டோரியா இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும் நம்ப ரெண்டுபேரும் காதலனும் காதலியா ஒரு 'புல்' நாடகத்திலே நடிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையாயிருக்கு! ராஜா: அதுக்கு என்னம்மா—ஆக்ட் பண்ணினா போச்சு! கீதா: ஹூம், நாடகத்திலாவது என் ஆசை நிறைவேறட்டும்! ராஜா: நீ என்ன சொல்றே? கீதா: புரியலியா? ராஜா: ஊஹூம்...! கீதா: வசனங்களை மிடுக்காகவும் அழகாகவும் பேசத்தான் தெரியும் போலிருக்கிறது—அதன் உட்பொருளை புரிந்து கொள்ள முடியதாக்கும்! ராஜா: ஓஹோ...உட்பொருளைப் புரிஞ்சுக்கிட்ட சமயத்திலே கைப்பொருளுக்கே ஆபத்து வந்துடும்மா! கீதா: புனிதமான காதல், பொருளை எதிர்பார்த்து ஏற்படுவதில்லையே! ராஜா: இந்தாம்மா! நான் இங்க வந்தது பாபுவைப் பார்த்து புதிய நாடகம் பற்றி பேசுவதற்காக! கீதா: அதைத்தான் நானும் சொல்றேன், காதல் நாடகம் நடத்துவோம்னு! ராஜா: நான் சொல்ற நாடகம், ஆயிரம் பேருக்கு முன்னாலே அழகான மேடை போட்டு... கீதா: அக்கினி சாட்சியா... ராஜா: நீ என்னாம்மா நீ டேஞ்சர் பண்றே—சரி, சரி, நான் போறேன்...பாபு வந்தான்னா... கீதா: [சட்டையை இழுத்து] இருங்கள் போகலாம்! [பாபு வருகிறான், அகல்யாவைப் பார்த்தபடி.] பாபு: என்ன மிஸ்டர் ராஜா, எங்கே இது? ராஜா: வா பாபு! உன்னைப் பாக்க வந்தேன், நம்ப புது நாடக சம்பந்தமாக! அகல்யா நாடகத்துக்கு வனம் எல்லாம் ரெடியாயிருக்கு! பாபு: இப்ப ஒன்னும் புது நாடகம் நடத்துவதாக உத்தேசமில்லை. ராஜா: ஏம்ப்பா? பாபு: சில பசங்க, கலையை ஆதரிக்கிறேன்; நாடகத்தை வளர்க்கிறேன்னு கதை அளந்துட்டு, கடைசிலே கலையை வளர்க்க கிளம்பி விடுறானுங்க! ராஜா: நம்ப அமெச்சூர் கம்பெனியிலே அது மாதிரி ஆளு யாருமில்லையே! பாபு: ஏன் இல்லை? ராஜா வேஷம் போட்டவனெல்லாம் தன்னை ராஜான்னு நினைச்சுகிட்டு அலையறான்கல்லே... ராஜா: நீ என்ன சொல்றே? பாபு: விளக்கம் வேறு தேவையோ? இத பார் ராஜா! இனிமேல் நீ நாடகம் கீடகம்னு சொல்லிகிட்டு இங்க வரக்கூடாது! என் நாடகக் கம்பெனியிலே உனக்கு வேலை கிடையாது! ராஜா: அட இதோ பாருப்பா? நான் ஒண்ணும் உங்கிட்ட வேலை தேடி வரவில்லை! எங்க 'எலக்ட்ரிக் ஸ்டோர்'ஸிலே நான் கொடுப்பேன் ஏழு பேருக்கு வேலை—தெரியுமா? என்னமோ, நாடகக் கலையிலே உள்ள பிரியத்தினாலே வந்தேன். அவ்வளவுதான்! எனக்கும் நாடகம் நடத்தத் தெரியும்பா! பாபு: அதை நிறுத்த எனக்கும் தெரியும்! ராஜா: அட, நல்லா இருந்தியே—ஏன் உனக்கு திடீரென்று இப்படி மூளைக் கோளாறு? பாபு: திடீர்னு ஒண்ணுமில்லே! ராஜா: ஓகோ! எப்பவும் அப்படித்தானா? பாபு: ராஜா! உன்னை நான் மொதல் தடவையா மன்னிக்கிறேன். பீளீஸ் கெட்டவுட்!