களஞ்சியப் பகுதி 18
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
○ கரண்ட்: கோபம் இல்லை சார்—வயத்தெரிச்சல்...பொறாமை. இத பாருங்க, நீங்க இல்லேன்னா அந்த நாடகக் கம்பெனி இலலேன்னு ஊர்ல பேசிக்கிறாங்க. கம்பெனிக்கு சொந்தக்காரரு பாபு!...ஆனா பேரு உங்களுக்கு! அவருக்கு கோபம் வராதுங்களா? ராஜா: ஏண்டா வருது அநாவசியமா? கர: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...இந்த பாருங்க...இந்த எலக்ட்ரிக் கம்பெனிக்கு நீங்க சொந்தக்காரரு...கரண்ட் மாத்திரம் இல்லேன்னு எலக்ட்ரிக் கம்பெனி ஏதுன்னு ஊர்ல பேசிக்கிறதா வச்சுக்கிங்க...அப்ப உங்களுக்கு கூட கோபம் வரும்ல...? ராஜா: ஏய், என்னா சொன்னே...கரண்ட் இல்லேன்னு? கர: என்னைச் சொல்லலே சார்...கரண்ட்...கரண்ட்...கரண்ட் இல்லேன்னு எலக்ட்ரிக் கம்பெனி ஏதுன்னு சொன்னேன்...என்ன சார் இது, இதுக்கே கோபம் வருதே உங்களுக்கு! அதிலே வேற—அந்த அம்மா வேற...அது வேற ஒங்ககிட்ட சிநேகிதம்னு...வேற பேசிக்கிறாங்க. கோபம் இருக்குமா இருக்காதா...சார்...? ராஜா: ஏய் கரண்ட், எப்படியாவது கண்டிப்பா நாடகம் நடத்தியே தீரணும்... கர: நடத்துவோம். ராஜா: ஆனா ஹீரோயினா யார் ஆக்ட் பண்றது? கர: நான் போட்டுக்கிறேன் சார். ராஜா: என்னது, நீ போட்டுக்கிறியா?...டேய் கழுதை! உன் மூஞ்சியை கண்ணாடியிலே பாத்தியா?... கர: ஏன் சார்?... ராஜா: ஹீரோயின்னா கதாநாயகிடா! கர: ஓகோ! அப்படியா? அப்ப முடியாது! நான் ஹீரோவாக்கும்னு பாத்தேன்... ராஜா: ஹீரோவா? ஒங்களை ஹீரோவா போட்டு நாடகம் நடத்த நான் என்ன அகஸ்தியர் நாடகமா நடத்தப்போறேன்... [சிரிக்கிறார்கள். அப்போது ஒருவர் வருகிறார்.] வந்தவர்: சார் பல்பு இருக்குதா? ராஜா: டேய். போய் வியாபாரத்தை கவனி...போ... கர: என்னா சார் வேணும் உங்களுக்கு? வந்: அறுபது வால்ட் பல்பு ஒன்னு வேணும்! கர: என்னா கலர்?... வந்: என்னான்னா கலர் இருக்கு உங்ககிட்ட? கர: பச்சை இருக்கு...சேப்பு இருக்கு...நீலம் இருக்கு...ஊதா இருக்கு—டெக்னிக் கலர்—கேவா கலர்—எல்லாம் இருக்கு—எந்தக் கலர் வேணும்? வந்: எடுங்க பார்க்கலாம்... [ராஜா ராணியிடம்] ராஜா: லீலா! நான் நாடக பார்ட்டி ஆரம்பிக்கிறதைப் பத்தி உன்னோட அபிப்பிராயம் என்ன? ராணி: உம். தாராளமா ஆரம்பிக்கலாமே! ஆரம்பிச்சா எனக்குத்தான் வேலை அதிகமாகும்! ராஜா: பின்னே இல்லே... ராணி: ஆனா, வருமானம் நெறைய வரும்! ராஜா: உம்... ராணி: நாடக வரவு, கம்பெனி வரவு எல்லாம் நெறைய வருமே! 'இன்கம் டாக்ஸ்' கணக்கு எல்லாம் எப்படி காட்டப் போறீங்க? ராஜா: எப்படிக் காட்டப் போறீங்களா? இதுவரைக்கும் எப்படி காமிச்சேன்; அதெல்லாம் நம்பகிட்ட 'டூப்' கணக்கெல்லாம் கிடையாது! ராணி: அதுக்கு இல்லீங்க! எனக்கும் எதாவது சம்பளம் போட்டீங்கன்னா, இன்கம் டாக்ஸ் கொஞ்சம் கொறையும் பாருங்க...அதுக்காகச் சொன்னேன்! ராஜா: ஓ! நீ அந்த வழியிலே போறியா? நான் இதுவரைக்கும் அந்த வழியை கையாண்டதில்லே! எனக்கு இப்பத்தான் புரியுது—அதுக்கென்னா போட்டுக்கோ! ராணி: எவ்வளவு? ராஜா: உம்...முன்னூறு! ராணி: முன்னூறா? ராசா: ஏன், ரொம்பக் கம்மியா இருக்கா? 500 போட்டுக்கோ...500 போட்டுக்கோ! கரண்ட்: என்னாது, என்னாது? சார், சார்...என்ன சார் இது? கரண்ட் கண்டுபிடிச்ச நாள்ளே இருந்து இந்தக் கம்பெனியிலே வேலை செய்றேன் நான். என் சம்பளம் ஐம்பதுக்கு மேலே ஏறுல. நேத்து வந்த இந்த அம்மாளுக்கு ஐநூறு ரூபா சம்பளமோ? ராசா: டேய், யார்ரா அவன், சுத்த கரண்டா இருக்கான்! இப்ப லீலாவுக்கு போட்ட சம்பளம் என்ன, உண்மையிலேயா கொடுக்கப் போறோம்? சும்மா இன்கம்டாக்ஸுக்காகத்தானே! 'அட்ஜஸ்மெண்டு'க்காகத்தானேடா! யார்ரா இவன்...அது பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு; நம்ம கம்பெனி சின்னக் கம்பெனி! இந்த 500 ரூபா பிச்சைக் காசை வாங்கித்தான் அவுங்களுக்கு நெறையப் போவதா? அவுங்க என்னமோ பொழுது போக்குக்காக வேலை செய்யிறாங்க. 'சம்பளம் கிம்பளம்னு' போட்டா அவுங்க கவுரவத்துக்கு கம்மிடா! இல்லையா, லீலா? ராணி: ஆமாம்! கர: ஆகா, அப்படியா? அது சரி சார்...என்ன இருந்தாலும் இந்தப் பொய் கணக்கு எழுதறது எனக்கு புடிக்கலே சார்! ராணி: ஆமாம்; எனக்குக்கூட பிடிக்கவே இல்லே! ராசா: நீ சொல்லும்போதே எனக்குப் பிடிக்கலே! என்னமோ நீ சொன்னியேன்னு நடந்தா நல்லதுன்னு சொன்னேன்! அப்ப சரி, கொடுக்காத சம்பளத்தை எழுத வேண்டாம்...இல்லை; லீலாவுக்கு சம்பளம் இல்லைடா! நீ போடா! நீ வேலையைப் பாரு லீலா!