களஞ்சியப் பகுதி 6
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
சேரன் சபை [நாடகத்திற்கு தலைமை தாங்கும் சமரசம் உணர்ச்சி வசப்பட்டு எழுந்திருக்கிறார்.] சாந்தம்: என்னங்க...ஒக்காருங்க...நீங்க தலைவரு. ——★—— [சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விசயருக்கும் நடைபெற்ற போரில் செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்.] சேரன்: வில்லவா! வெற்றி முழங்கும் இந்த இடத்திற்குப் பெயர் என்ன? வில்லவன்: குயிலாலுவம்! சேர: குயிலாலுவம்; குறித்துக் கொள்! இந்தப் பாறைகள் அணைத்தும் பைந்தமிழர் வீரம் தீட்டிய ஏடுகள்! வெற்றி மட்டும் போதாது வில்லவா; அந்த வீணர்களை விடக்கூடாது! வில்: காஷாய உடையிலே ரிஷிகளைப் போல் எங்கோ ஓடி விட்டார்களாம் கனக விஜயர்கள்! சேர: ஹா...ஹா...! புதுமையல்ல...அவர்களுக்குரியதான ஒரே பழக்கம் அதுதான்! [கனக விஜயர் சாமியார் உடையில் கைது செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறார்கள்.] கனக விஜயர்: மன்னவா! மண்டியிடுகிறோம். மன்னித்து விடுங்கள்! சேரன்: மன்னிப்பதா? நான் மன்னிப்பதா? தமிழ் நாட்டு மண்ணில் வந்துமண்டியிடுங்கள், அது உங்களை மன்னிக்கட்டும்! வில்: மன்னவா! தமிழகம் திரும்பவேண்டாமா? புறப்பட்டு முப்பத்தி ரெண்டு திங்கள் ஆகின்றனவே! சேர: புறப்படுவோம்—வில்லவா! அதற்குள் கண்ணகிக்குச் சிலை நாட்ட இங்கு கல் எடுக்க வேண்டுமல்லவா? வில்: ஆமாம்! சேர: அந்தக் கல்லைச் சுமப்பதற்குச் சரியான எருதுகள் கிடைத்து விட்டன! கனக—விஜயா! தமிழரின் வீரத்தின்மீது வீசினாய் ஒரு சொல்—இப்போது தூக்கு கல்! வீரர்கள்: “சேரன் செங்குட்டுவன் வாழ்க!”