களஞ்சியப் பகுதி 5
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[செங்குட்டுவனும் வேண்மாளும் இருக்கின்றனர்.] வேண்: சுவையான கதையொன்று சொல்லுங்கள் அத்தான்! சேரன்: சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந்தான்; சேரனுக்கு ஒரு செல்வன் பிறந்தான்; செல்வன் இந்தச் சிலையை மணந்தான்... வேண்: தெரிந்த கதைதானே இது... சேரன்: நடந்த கதை கூட... வேண்: நடக்காத கதை யொன்று சொல்லுங்கள் அத்தான்! சேரன்: சுவைக்காது கண்ணே அது! வேண்: உம்...காதல் கதை யொன்று... சேரன்: ஊஹூம்...இதோ புற நாநூற்றிலே... வேண்: போதும்; வீரக் கதைதானே... சேரன்: வீரத்தை மணந்த காதல் கதை! தந்தையையும் கணவனையும் பலிகொடுத்த பெண்ணொருத்தி தன் மகனையும் போருக்கனுப்பிய புறக்காட்சி வேண்மாள்! கொஞ்சம் கேளேன்; நானே எழுதியிருக்கிறேன் புதிய நடையில்... “காவிரிதந்த தமிழகத்துப் புது மணலில் களம் அமைத்துச் சேரசோழ பாண்டிமன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார்கொடிதான் பறப்பதென்று, ...இன்றுபோல்... போர்தொடுத்துக் கொண்டிருந்த காலமது; அந்நாளில் ஓர் களத்தில், தாய்நாடு காக்கத் தாவிப்பாய்ந்து செத்தார் தந்தை என்ற சேதிகேட்டு, தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்துக் கிளியொருத்தி! அனல்போலும் கண்ணுடனே, அயலூர் சென்றிருந்த அவள் கணவனும் வந்திட்டான்! புனல் போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்! தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்தாய் என்றான். இல்லை அன்பா! முல்லைசூழ் இந்நாட்டுப்படையிலோர் வீரர் குறைந்திட்டால், நல்ல உடையிலோர் கிழிசல் வந்தது போலன்றோ? இனித்தடையின் நுழைவரே பகைவர் என எண்ணினேன்; அடைபட்ட கண்ணீர், அணை உடைத்த தத்தான் என்றாள். அவன், குகைவிட்டுக் கிளம்பும் ஒருபுலியென, புகைவிட்டுக் குமுறும் எரிமலையென, பகைவெட்டிச் சாய்க்கும் வாளெடுத்தான்; சூளுரைத்தான்; சுடர்முகம் தூக்கினான்: சுக்கு நூறுதான் சூழ்ந்துவரும் பகை என்றான். நாடு மீட்காமல், வீடு திரும்பேன் என்றான்! நங்கையோ, நகைமுழக்கம் செய்து நடந்திடுக கண்ணே என்றாள்! திரும்பி வருவேனோ இல்லையோ எதற்கும் இப்போது ஒரு முத்தம் இந்தா திரும்பு என்றான்! கொடுத்தான்—பின்தொடுத்தான் பகைவர்மீது பாணம்! போர்! போர்! போர்! எனவே முழங்கிற்று முரசு ஒலி! பார்! பார்! பார்! அந்தப் பைங்கிளியின் உரிமையாளன்—பகைவர்மீது பாய்ந்து கொல்லும் வீரம் பார்!—என்று பட்டாளத்துத் தோழரெல்லாம் வியந்துரைத்தார்! அந்தக் கட்டாணிமுத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள், களத்தினிலே அடுக்கடுக்காய் குவிந்துவரும் வெற்றிகளைக் கேட்டுவிட்டு! கோட்டைகள் விடுபட்டன! எதிரியின் குதிரைக் கால்கள் உடைபட்டன! வேழப்படை முறிபட்டது! வேல்கள் பொடிபட்டன! எம். கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியெனக் கேட்குது! கேட்குது! எனக் குதித்திட்டாள்—புதுப்பண் அமைத்திட்டாள்! வீரர்கள் வந்தனர்—வெற்றி உன் கணவனுக்கே என்றனர்! வேந்தனின் தூதுவர் வந்தனர்—வாழ்த்துக்கள் வழங்கினர்! வீட்டோரத்துத் தோழிகள் வந்தனர்—வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்! அந்த அழகி, ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள்—அப்போது, ஏனந்த மனிதன் வந்தானோ, இழவுச் சேதி சொல்வதற்கு?— என்னருமைப் பெண்பாவாய் கண்ணல்ல—கலங்காதே! களச் சேதி, கடைசிச் சேதி கேள் என்றான்—அந்தோ! மாவிலைத் தோரணங்கட்டி. மணவிழா மேடைதன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன்— மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டான்— ஆவிதான் போனபின்னும் உயிர்வாழும் ஆரணங்கு அச்சடித்த தமிழ்ப் பதுமை— கூவி அழுதாள்—கொத்தான மலர் இந்தக் குடும்பம்!— அதைக் கொத்தாமல் கொத்திவிட்ட கொடும்சாவைப் பழித்தாள்—இந்த ஊரைத்தான்! “இனி என்ன மிச்சம்!” கனி அழுகிப் போனதென்றும் கதறி அழுதாள்! பனிவெல்லும் விழிகாட்டி, பனவெல்ல மொழி உரைத்து, பள்ளியறைக் கவிபாடும் நாளெல்லாம் மண் தானோ? இனி, இது, தூங்காத கண் தானோ? என அழுதாள்! அத்தான் பிணம் கிடக்கும் களம் நோக்கித் தொழுதாள்! சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள் காதில், வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டதுதான் தாமதம்; கெட்டதுதான் கெட்டது நம்குடி—முழுவதுமே பட்டொழிந்து போகட்டும் என எழுந்தாள்! மட்டில்லாப் புகழ்கொண்ட நாட்டுக்கே அன்றி வீட்டுக்கோ வாழ்வேன் என்றாள்— வட்டி லினால் நாழிபார்க்கும் விதங்கண்ட தமிழ்நாட்டுமாதரசி, தொட்டிலிலே இட்டு, தான் வளர்த்த தூயசெல்வன் அட்டியின்றிக் கல்வி கற்க, ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்! அங்கு சென்றாள்—அம்மா எனப் பாய்ந்தான், அழகுமிகும் மழலைமொழி அன்புத் தங்கம்! அப்பா, தாத்தா, ஊர் திரும்பினாரோ என்றான்! திரும்பிவந்து சாவூர் சென்றுவிட்டார்— கரும்பே—நீயும்வா என்றழைத்தாள்! “என்ன வாங்கி வந்தார்?” என்றான்! மானம்! மானம்! அழியாத மான மென்றாள்— மகனே! அதைச் சுவைக்க நீயும் வருக என்றாள். வந்துவிட்டான்—குலக்கொழுந்து! குடும்பவிளக்கு எரிந்துகொண்டே கூறுகின்றாள்— “எதிரிகளின் படையெடுப்பால்—நம் குடும்பம் தழை உதிர்த்துவிட்ட மரமாகப் போனதடா தம்பி! கவலையில்லை, களம் சென்றார்; மாண்டார்! ஆனாலும் இந்த, நிலம் உள்ளவரையில் ‘மானங்காத்தார்’ என்று பெயர் பூண்டார்! என் மகனே! நீயும் தோளில், பலம் உள்ளவரையில் பகையைச் சாடு! பரணிபாடு! இது உன் தாய்த் திருநாடு!—உடனே ஓடு!” எனத் தாவி அணைத்துத் தளிர் மகன் தன்னை, சீவிமுடித்துச் சிங்காரித்து, ரத்தக் காவிபடிந்த வாள் கொடுத்து, “சென்றுவா மகனே, செருமுனை நோக்கி!” என வாழ்த்திவிட்ட திருவிடத்துக் காட்சிதனை போற்றிப் பாடாதார் உண்டோ— திருமகளே! இந்தப் பூவுலகில்?... புலவர்: [குறுக்கே வந்து] உண்டு; உண்டு! சேர: என்ன? புல: அந்த உண்டு கொழுத்தவர் உண்டு உத்தமா! நம் வீரத்தைப் பழிப்போர் இந்த அவனியிலே உண்டு! சேர: ஆ! புல: வேந்தரும் அரசியும் தனித்திருக்கும் வெள்ளிமாடத்திற்கு வந்திருக்கிறேனே என்று வியப்படைய வேண்டாம். இதைவிட வியப்பான செய்தி ஒன்று கூறப்போகிறேன்... சேர: புலவரே! புல: நமது வீரம் பொல்லாத புல்லர்களால் தூற்றப்பட்டது மன்னவா! சேர: தூற்றியவர்கள் இருக்கிறார்களா? புல: இருக்கிறார்கள்—வட நாட்டு மன்னர்கள் வால் நீட்டுகிறார்கள்! வேண்: பிறகென்ன? அவர்கள் வாளையா நீட்டுவார்கள்? புல: கனக விசயர் இல்லாத காலத்திலே இமயத்திலே படை எடுத்தோமாம்—அவர்கள் ஆளும்போது கால் எடுத்து வைக்கட்டும் பார்ப்போம் என்று கர்ஜிக்கிறார்கள்! சேர: நமது வாளைப் பழித்தார்கள்! அவர்களைத் தாள் பணிய வைக்கிறேன்! வேண்மாள்...வேலை வந்து விட்டது! வீரத்துக்கு சோதனை வந்து விட்டது! வருகிறேன்!